தமிழ்நாடு அரசியல் களத்தில் காமராஜர் குறித்து திமுக எம்பி திருச்சி சிவா பேசியது மிகப்பெரிய விவாதமாக வெடித்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான காமராஜர் - கருணாநிதி இடையிலான பந்தம் குறித்து விவரிக்கும் வகையில் இரண்டு விஷயங்களை குறிப்பிட்டு திருச்சி சிவா பேசியிருந்தார். ஒன்று காமராஜருக்காக கருணாநிதி ஏசி வசதியை ஏற்படுத்திக் கொடுத்ததாக கூறியது, இரண்டாவது சாகும் தருவாயில் தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்து கருணாநிதியிடம் காமராஜர் கவலையோடு தெரிவித்தது குறித்து.
இந்த இரண்டில் காமராஜர் ஏசி பயன்படுத்தியது மட்டும் அதிக அளவில் பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரத்தை எப்படி புரிந்து கொள்வது, திமுகவுக்கும் காமராஜருக்குமான உறவு எப்படி இருந்தது, காமராஜரின் இறுதிக்காலம் எப்படி இருந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்..
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாள் அன்று நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் திமுக எம்பி ஆன திருச்சி சிவா பேசியுள்ளார். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு, தொழிற்துறைக்கு பல நன்மைகளை செய்த முக்கிய தலைவர் என்ற அடிப்படையில் காமராஜர் குறித்து புகழ்ந்து பேசும் அதேவேளையில், தன்னுடைய கட்சியின் தலைவரான கலைஞர் கருணாநிதிக்கும், காமராஜருக்கும் இடையிலான பந்தம் குறித்து பேசிய சில வார்த்தைகள் தற்போதைய விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.
முன்னாள் முதல்வரான காமராஜர் மீது தங்கள் கட்சி தலைவரான கருணாநிதி எவ்வளவு மரியாதை வைத்திருந்தார் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் தன்னிடம் தனது தலைவர் பகிர்ந்து கொண்டதாக ஒரு நிகழ்வை சொன்னார்.
காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய போது, “காமராஜர் மின்சார தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுவதும் கண்டனம் கூட்டம் நடத்தினார். காமராஜருக்கு ஏசி இல்லையென்றால் உடம்பில் அலர்ஜி வந்துவிடும் . அதற்காக அவர் தங்குகிற அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்ய உத்தரவிட்டார்.
கலைஞரின் பெருந்தன்மையை பார்த்து நெகிழ்ந்து போன காமராஜர், உயிர் போவதற்கு முன்பு, அப்போதைய தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியின் கைகளை பிடித்துக் கொண்டு “நாட்டையும் ஜன நாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று கூறினார்.” என்று திருச்சி சிவா பேசியதற்கு தான் காங்கிரஸ் கொதித்தெழுந்து பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
திருச்சி சிவா பேசிய பேச்சின் மூலம் மூன்று விதமான விவாதங்கள் கிளம்பியுள்ளன.
1. எளிமையின் சிகரமான காமராஜர் ஏசி பயன்படுத்தினாரா?
2. ஏசி இல்லாமல் தூங்க முடியாத அளவிற்கு காமராஜர் உடல்நிலை இருந்ததா?
3. காமராஜருக்காக கருணாநிதி செய்து கொடுத்தாரா? திமுகவுக்கும் காமராஜருக்கும் அப்பொழுது உறவு எப்படி இருந்தது.
இதில் முதல் கேள்விக்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. ஆம் காமராஜர் ஏசி பயன்படுத்தினார் என்பதை அவரது உதவியாளரே எழுதிய புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். தமிழறிவு மணியன் தன்னுடைய உரை ஒன்றில் தெளிவாகவே இது குறித்து பேசியிருக்கிறார்.
2013-ல் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கருணாநிதி வெளியிட்டிருந்த பதிவில், “திமுக அரசு பதவிக்கு வந்த பிறகு கடுமையான சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய அந்தரங்கச் செயலாளர்கள், “பெருந்தலைவர் ஏசி இல்லாமல் உறங்க முடியாது. அப்படிப்பட்ட உடல்நிலை இப்போது அவருக்குள்ளது. எனவே அரசு விடுதிகளில் ஏசி ஏற்பாடு செய்து கொடுங்கள்'' என்று சொன்னார்கள். உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அவர் செல்லும் எல்லா விருந்தினர் மாளிகைகளிலும் ஏசி வசதி செய்து கொடுங்கள். அவர் அதிகாரத்தில் இல்லையே என்று பார்க்காதீர்கள். நாமெல்லாம் அதிகாரத்தில் வருவதற்கு அவர் வழி விட்டவர், வழி காட்டியவர், எனவே நீங்கள் யாரும் இதில் சுணங்காதீர்கள்” என்று உத்தரவு பிறப்பித்தேன்” என்று கூறியிருந்தார்.
காமராஜர் கடைசி காலத்தில் உடல்நிலையின் காரணமாக ஏசி பயன்படுத்தும் நிலை இருந்ததை பலரும் பதிவு செய்திருக்கிறார்கள்.
உலகில் எத்தனையோ தலைவர்கள் மிகவும் குறைந்த வயதில் இறந்திருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் சமுதாயத்தை மாற்றுகின்ற பணியில் ஓயாது ஈடுபட்டிருந்த அவர்கள் உடல்நலத்தை கருத்தில் கொள்ளாமல் விட்டுவிடுவதுதான். சுதந்திர போராட்ட காலத்தில் பம்பரமாய் சுற்றி சுழற்றி பணிகள் செய்தும், சிறை வாழ்க்கை அனுபவித்தும், முதலமைச்சர் ஆன பின்பு மக்களோடு மக்களாக நின்று பணிகள் செய்த ஒரு தலைவருக்கு (காமராஜர்) விரைவில் உடல்நலம் குன்றுவது இயல்பு. அவர் இன்னும் கூடுதல் ஆயுள் உடன் வாழ வேண்டும் என்றால் அவருக்கான குறைந்தபட்ச வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அதனால், காமராஜர் ஏசி பயன்படுத்தினார் என்று கொதித்து பேசுவதே தேவையற்றது. காமராஜர் என்ன செய்தார், மக்களின் பக்கம் எப்படி நின்றார் என்பதே முக்கியமானது..
திருச்சி சிவா பேசியதில் ஏசி விவகாரத்தை விட இரண்டாவது விஷயம் தான் விவாதப் பொருளாக மாற்ற வாய்ப்புள்ள ஒன்று. மாபெரும் தலைவராக இருந்த காமராஜர் அப்பொழுது முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம் அப்படி சொல்லியிருக்க முடியுமா என்ற சந்தேகம் நிச்சயம் பலருக்கும் வரலாம். அதுகுறித்து கேள்வி எழுப்பி விமர்சிக்கலாம். ஏனென்றால் அந்த வார்த்தைகள் அவ்வளவு கணம் பொருந்தியவை. “நாட்டையும் ஜன நாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்” கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை போல் தெரிகிறது. அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. தன்னுடைய அரசியல் வரலாறு முழுவதுமே திமுகவுக்கு நேர் எதிர் அணியில் தான் காமராஜர் இருந்தார். ஆனால், திமுகவும் காமரஜரும் நேர் அணியில் வருவதற்கான சூழல் ஒரே ஒரு முறைதான் வரலாற்றில் வந்தது. அதுவும் சில மாதங்கள்தான்., அதற்குள் காமராஜர் மறைந்தும் போனார். அதற்கு திமுகவுக்கும் காமராஜருக்குமான உறவு மற்றும் கருணாநிதிக்கும் காமராஜருக்குமான உறவு குறித்தும் விரிவாக பார்க்க வேண்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியையும், காமராஜரையும் மிகக் கடுமையாக விமர்சித்து பேசியும், முரசொலி பத்திரிகையில் எழுதியும் திமுக வந்தது. அன்று காங்கிரஸ் கட்சிக்கு நேர் எதிர் திசையில் திமுக இருந்தது. இருபெரும் துருவருங்களாக இருக்கும்போது ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொள்வது என்பது அரசியலில் நடக்கக்கூடிய ஒன்றே. இந்தியாவிலேயே முதல் மாநிலக் கட்சியாக காங்கிரஸை வீழ்த்திய பெருமை திமுகவுக்கு உண்டு. அப்படியென்றால் இரு கட்சிகளுக்கு இடையே போட்டி எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். சொல்ல முடியாத அளவிற்கு இரு தரப்பிலும் விமர்சனங்கள் அப்படி சரவெடியாக வெடித்தது.
வாழ்நாள் முழுவதும் காங்கிரஸை எதிர்த்த திராவிடர் கழக தலைவரான பெரியார் காமராஜரை ஆதரித்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் பெரியாரின் சில கருத்துக்களை நடைமுறைப்படுத்துவதோடு அவர் மீது தன்னுடைய மரியாதையை வெளிப்படுத்துவதியும் காமராஜர் வந்தார். காரியம் காமராஜர், காரணம் பெரியார் எனும் அளவிற்கு இருவருக்கும் இடையிலான உறவு அனைவரும் அறிந்ததே. அதாவது ஒரு சிந்தனை பலம் எனும் அளவில்..
அதேபோல், எவ்வளவுதான் எதிரும் புதிருமாக இருந்தாலும் அரசியல் ரீதியாக கொள்கை மாறுபாட்டில் இருந்தாலும் காமராஜர் மீதான மரியாதையை அண்ணா வெளிப்படுத்த தவறியதில்லை. “நாங்கள் காமராஜரை தோற்கடிக்கவில்லை.. காங்கிரஸ் கட்சியைத்தான் தோற்கடித்தோம்” என்று அண்ணா கூறியிருப்பார். “காமராசர் போன்ற அனுபவசாலிகள் தோற்றது நமக்கும் தோல்வி போன்றதே. சட்டமன்றத்தில் அவர் இருந்திருந்தால், நாம் இன்னும் சிறப்பாகச் செயல்பட அது உதவியிருக்கும்" என மனம் வெதும்பிச் சொன்ன அண்ணா, ஆட்சி சிம்மாசனத்தில் கால்பதித்த உற்சாகத்தில் இருந்த தம்பிகளுக்கும் ஓர் அறிவுரையைக் கூறினார். ``நமது வெற்றியைக் கொண்டாடுகிறேன் பேர்வழி எனக் காங்கிரஸ் கட்சியை சங்கடப்படுத்தக் கூடாது. கொண்டாட்டங்களைக் கொஞ்ச நாள் தள்ளிப்போடுங்கள்" என்றார்.
அதேபோல், காமராஜரும் ஒரு மாணவர் தலைவரான இளைஞர் தன்னை தோற்கடித்துவிட்டார் என்பதை பொருட்படுத்தால் “ஜனநாயகம் வென்றுவிட்டது; அதனால் தான் சதாரண மாணவர் தலைவர் கூட முதலமைச்சராக இருந்த என்னை தோற்கடிக்க முடிந்தது” என்று பெருந்தன்மையோடு கூறியிருந்தார்.
எந்த காங்கிரஸ் கட்சியை எதிர்த்து திமுக ஆட்சிக் கட்டிலில் ஏறியதோ, அதே காங்கிரஸ் கட்சி உடன் நான்கே ஆண்டுகளில் கூட்டணியும் வைத்தது. ஆனால், அந்த காங்கிரஸ் கட்சியில் அப்பொழுது காமராஜர் இல்லை. இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என இரண்டாக பிளவுபட்டிருந்தது. திமுகவும் இந்திரா காங்கிரஸும் கூட்டணி அமைக்க, ஸ்தாபன காங்கிரஸ் தலைவரான காமராஜர் எதிர் முகாமில் இருந்தார். திமுகவிற்கு தன்னுடைய சொந்த கட்சியான இந்திரா காங்கிரஸுக்கு எதிராகவும் தான் அப்பொழுது அரசியல் செய்து வந்தார் காமராஜர். அரசியல் ரீதியாக தோல்வியின் விளிம்பில் இருந்தார்.. திமுகவுக்கு எதிர்க்கட்சியாக அதிமுக உருவாகிவிட்டது. அரசியல் ரீதியாக முன்னணி இடத்தில் இல்லை என்றாலும் வரலாற்று ரீதியாக காமராஜர் தமிழகம் போற்றும் தலைவராகவே எல்லோராலும் பார்க்கப்பட்டார்.
அப்பொழுது திமுகவுக்கும், காமராஜருக்கு எதிரியாக இந்திரா காந்தி அரசு இருந்தது. காமராஜரும் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலையை எதிர்த்தார். அந்த கால கட்டத்தில் திமுகவும் ஒடுக்குமுறைக்கு ஆளாகி பின்பு ஆட்சியும் கலைக்கப்பட்டது.
விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று, அதற்காக சிறை சென்று, தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆகி இரண்டு பிரதமர்களை உருவாக்கி கிங் மேக்கர் என்ற பெயரும் பெற்றவர் காமராஜர். அரசியல் களத்தில் உச்சத்திலும் உச்சத்தில் இருந்தார். ஆனால், 1967-க்கு பிறகு எண்ணி நான்கே ஆண்டுகளில் எல்லாம் தலைகீழாக மாறியது. 1967-69 ஆண்டுகளில் பல்வேறு விவகாரங்களில் இந்திரா காந்தி - காமராஜர் இடையே முரண்பாடு நாளுக்கு நாள் வலுத்தது. மூத்த தலைவர்களை தாண்டி துணிச்சலாக பல முடிவுகளை இந்திரா எடுத்தார். இது காமராஜர் உள்ளிட்டோடு ஒத்து வரவில்லை. இந்த முரண்பாடு 1969-ல் உச்சம் பெற்று கட்சியே ஸ்தாபன காங்கிரஸ் என்ற பெயரில் காமராஜ் பின்னாலும், புதிய காங்கிரஸ் என இந்திரா காந்தி பின்னாலும் இரண்டாக உடைந்தது. இரண்டே ஆண்டுகளில் இந்திரா காங்கிரஸ் புகழ் பெற்று ஆட்சியையும் பிடித்தது. இந்திரா காங்கிரஸ் 352 இடங்களில் வெற்றி பெற, ஸ்தாபன காங்கிரஸோ வெறும் 16 இடங்களில் மட்டுமே வென்றது.
தேசிய அரசியலில் இருந்து முற்றிலும் ஒதுங்கிய காமராஜர், திமுக எதிர்ப்பு நிலையை காட்டிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தில் கவனம் செலுத்தினார். 1971 ஆம் ஆண்டிற்கு பிறகு காமராஜர் வாழ்க்கை முற்றிலும் வேறாக இருந்தது. பிரதமர் ஆவதற்கு தகுதி உடையவராக பார்க்கப்பட்ட அவர் இந்தியாவின் ஒரு பகுதியில் தன்னுடைய வாழ்க்கையை சுருக்கிக் கொள்ளும் நிலை உருவானது. இந்திரா காந்தி காமராஜரை நேரடியாக ஒதுக்கவில்லை, ஆனால் அவர் எடுத்த அரசியல் முடிவுகள், புதுமுனை அரசியல் நடைமுறை, மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிளவு, காமராஜரை கட்சியின் வெளிவட்டத்திற்குள் தள்ளியது. தமிழ்நாட்டு அரசியல் சூழல் குறித்தும், காமராஜர் குறித்தும் இந்திரா காந்தி என்ன நினைத்தார் என்பதை ஜேபி நாராயணன் உள்ளிட்டோர் எழுதியிருக்கிறார்கள்.
எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்ட காமராஜரால் இந்திரா காந்தியின் அவசர நிலை அறிவிப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை. தான் வளர்த்து காத்த காங்கிரஸ் கட்சி இப்படி ஆகிவிட்டதே என்று மனம் வெதும்பினார். எமர்ஜென்றியை எதிர்த்தார். ஆனால், தன்னுடைய பாணியிலேயே அமைதியாக எதிர்த்தார். சில கோரிக்கைகளை இந்திரா காந்தியிடம் வைத்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை என்ற வேதனை அவரை வாட்டி வதைத்தது. 1975 அக்டோபர் 2 ஆம் தேதி அந்தக் கவலையிலே அவர் உயிர் பிரிந்தது.
திருச்சி சிவா பேசிய பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் அதற்கு மிக கடுமையாக எதிர்வினை ஆற்றிய பிறகு இது மிகப்பெரிய பேசுபொருளானது. ஆனால், வழக்கம் போல், சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் குறித்து இரு கட்சிகளின் தலைவர்கள் குறித்து மிகவும் தரம்தாழ்ந்த எழுத்துகள் வந்து கொண்டே இருந்தன.
எந்த தலைவர்களும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. மறைந்த தலைவர்களை ஒரு திறனாய்வு அடிப்படையில் அணுகி தவறுகளை அனுபவமாகவும், சரியை எதிர்காலத்திற்கான சிந்தனையாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை விடுத்து, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அளவு கடந்து பேசுவது அவ்வளவு நாகரீகமாக இருக்காது. தலைவர்கள் அவர்கள் செய்த செயல்கள் மூலமாகவே காலம் கடந்து மக்கள் மனதில் நிற்பார்கள்.