கரலா கட்டை
கரலா கட்டை web picture
சிறப்புக் களம்

கரலாக் கட்டையில் இத்தனை வகைகள் இருக்கிறதா; எப்படி தயார் செய்கிறார்கள்? உடற்பயிற்சியின் பலன்கள் என்ன?

Jayashree A

மொழிகளில் மட்டும் தமிழர்கள் முதன்மையானவர்கள் இல்லை. வீரத்திலும், கலைகளிலும் தமிழர்கள் முதன்மையானவர்கள் தான். ஆய கலைகள் 64 என்று கூறுவார்கள். அதில் ஒரு கலை தான் கரலாக்கட்டை சுழற்றுவது.

இதென்ன பெரிய வித்தையா? கட்டையை சுற்றினால் முடிந்தது என்று தான் உங்களைப்போல நானும் நினைத்திருந்தேன். ஆனால், இந்த கட்டைக்குள் ஏகப்பட்ட செய்திகளும் பயிற்சியும் ஒளிந்திருப்பது உங்களுக்கு தெரியுமா?

பண்டைய காலத்தில் இத்தகைய கலையானது மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது. போர் வீரர் ஒருவன் தனது உடலை கட்டமைப்புடன் வைத்துக்கொள்வதற்கு இத்தகைய பயிற்சியை எடுத்துக்கொள்வார். இதற்கென்று ஆசிரியர்களும் இருந்தனர். பின் காலப்போக்கில் இந்த கலையானது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இப்பொழுது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பது வேதனை அளிக்கும் செய்தியாகும்.

இதை ஆண்களும் பெண்களும் செய்யலாம். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடலானது சீராக இருப்பதுடன், நோய்கள் பெரிய அளவில் தாக்குவதில்லை என்று கூறுகின்றனர். சரி இந்த கரலாக்கட்டையில் அப்படி என்ன செய்தி இருக்கு என்பதையும் பார்க்கலாம்.

ஆட்டுக்கல்லில் சுழலும் குழவி போல் பார்ப்பதற்கு இருந்தாலும், மரத்தால் செய்யப்பட்ட இந்த கட்டையானது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கட்டை செய்வதற்கென்று புளியமரம், வாகைமரம், கருவேலமரம், இலுப்பை மரம் போன்ற குறிப்பிட்ட மரங்களை மட்டும் தான் தேர்ந்தெடுத்து செய்கிறார்கள்.

அதுவும் ஒவ்வொரு எடையில் வகைப்படுத்தி இக்கட்டகையானது வடிவமைக்கப்படுகிறது. கை கரலை, பிடி கரலை, புஜ கரலை, குஸ்தி கரலை, இடும்பன் கரலை, படி கரலை என்று இதை வகைப்படுத்தி அதற்கேற்ற எடையில் வடிவமைக்கின்றனர். பிறகு இதற்கென்று மூலிகையால் தயாரிக்கப்பட்ட ப்ரத்யேக எண்ணெய் கொண்டு இக்கட்டையின் மேல் பூசி இதை வழுவழுப்பாக்குகின்றனர்.

முறைப்படி இந்த கலையை கற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கு ஆசிரியர் முதலில் சொல்லித்தருவது சத்திரிய பிரணாயாமம் என்ற மூச்சு பயிற்சிதான். அதன் பிறகு தான் கரலை கட்டை சுற்றுவதை கற்று தருகிறார்கள். மூச்சு பயிற்சி இதில் முக்கியமான ஒன்றாக கூறுகிறார்கள்.

இப்பயிற்சியில் மொத்தம் 64 சுற்றுகள் உள்ளதாம். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு பாடம் என்கிறார்கள். பொதுவாக நின்ற இடத்திலிருந்து கரலாக்கட்டை சுற்றுவதை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் 64 சுற்றுகளில் பலவித உடல் அசைவுடன் கரலை கட்டை சுற்றும் வித்தை உள்ளதாம். இதில் ஒன்று தான் கதை சுற்றுதல் (பீமன், அனுமன் உபயோகப்படுத்தியது) இதில் பெண்களுக்கான கரலை கட்டையின் பெயர் படி கரலாக் கட்டை. இதை பெண்கள் தொடர்ந்து செய்து வந்தால் பெண்களுக்கு உண்டான நோயிலிருந்து குணமாகலாம் என்றும் கூறுகின்றனர்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உள்ளவர். ஒரு முறை சத்யராஜ் எம்.ஜி.ஆரை சந்திக்க வந்த சமயம் அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அதை கண்ட சத்தியராஜ், எம்.ஜி.ஆரிடம் உடற்பயிற்சியைப் பற்றி கேட்டுள்ளார். உடனே சத்யராஜிடம் கரலாக் கட்டை ஒன்றை பரிசளித்து நீயும் தினம் இதைக் கொண்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று எம்.ஜி.ஆர் கூறினாராம். அந்த கரலாக்கட்டையை எம்.ஜி.ஆர் நியாபகமாக தான் வைத்துள்ளதாக சத்யராஜ் ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.