சிறப்புக் களம்

ரகசிய கேமராவை கண்டுபிடிப்பது எப்படி?

webteam

சென்னையில் பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட சம்பவத்தால் தமிழகமே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி? பெண்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதை கண்டறிவது எப்படி?   

சிசிடிவி கேமரா தெரியும், அது என்ன ரகசிய கேமரா' என்று சந்தேகம் எழலாம். இருக்கும் இடம் தெரியாத ஊசி முனையளவுள்ள ஒரு சிறிய கேமரா, உங்கள் அனைத்து அந்தரங்கத்தையும் துல்லியமாக படம்பிடிக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். அதனை மெய்ப்பிக்கும் வகையில் தான் சென்னை ஆதம்பாக்கத்தில் நடந்துள்ளது இந்தச் சம்பவம். ரகசிய கேமராக்கள் பொதுவாக தங்கும் விடுதிகள், பொதுக் கழிவறை மற்றும் குளியலறை, துணிக் கடைகளில் உடை மாற்றும் அறை உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்டிருக்கலாம். 

இதனை எவ்வாறு கண்டறியலாம் என்பது குறித்து காவல்துறை தரப்பில் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ரகசிய கேமராக்கள், பொதுவாக அறையின் கதவுகள், மின்விளக்கு, உடைகளை வைக்க பயன்படுத்தபடும் ஹேங்கர், பூச்செண்டுகள் வைக்கப்பட்டுள்ள குவளைகள் என நாம் அதிகம் கவனம் செலுத்தாத இடங்களில் வைக்கப்பட்டிருக்கலாம். அவற்றை சில எளிய வழிகளின் மூலம் கண்டறியலாம். நீங்கள் தனியார் விடுதிகளில் தங்கினால், அறையில் உள்ள விளக்குகளை அனைத்துவிட வேண்டும். ரகசிய கேமராக்களில் இருக்கும் எல்.இ.டி விளக்கு ஒளிரும் என்பதால், இருளில் அது இருக்கும் இடத்தை உங்களால் கண்டறிய முடியும்.

துணிக்கடையில் உடை மாற்றும் அறையை பயன்படுத்த நேர்ந்தால், அங்குள்ள கண்ணாடியிடம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் விரலை கண்ணாடியின் மீது வைக்கும்போது, விரலுக்கும், கண்ணாடியில் தோன்றும் பிம்பத்திற்கும் இடையே இடைவெளி இல்லை என்றால் அங்கு ரகசிய கேமரா உள்ளது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் கேமராக்களை கண்டறிய பல்வேறு மொலைப் ஆப்-கள் செயலில் உள்ளன. அதுபோன்ற சில செயலிகள் மூலம் உங்கள் மொபைல் ஹேக் செய்யப்படலாம் என்பதால், அதிலும் கவனத்துடன் செயல்பட அறிவுறுத்துகிறது சைபர் காவல்துறை. 

ஏதோ ஒரு இடத்தில் ரகசிய கேமரா இருப்பதைக் கண்டுபிடித்தால், பெண்கள் பதற்றமடையாமல் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், சட்டப்படி 3ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என்கிறார்கள் காவலர்கள். நீங்கள் அசந்த நேரத்தில், உங்கள் அந்தரங்கத்தை படம்பிடித்து ஆபாச இணையதளங்களில் காசாக்க காத்திருக்கிறது ஒரு கும்பல். பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து, படிப்பதற்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் சென்னை வந்து, விடுதிகளில் தங்கியுள்ள பெண்கள், முன்னெச்சரிக்கையுடன் இருப்பதே சாலச் சிறந்தது.

பெண்களுக்கான எச்சரிக்கை : 

தங்கும் விடுதிகள், பொதுக்கழிப்பறை, குளியலறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம்.

துணிக்கடைகளில் உடை மாற்றும் அறைகளிலும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம்.

கதவு, மின்விளக்கு, உடைகளை வைக்கும் ஹேங்கர், கடிகாரம் உள்ளிட்டவற்றில் ரகசிய கேமரா இருக்கலாம்.

பெரும்பாலும் நாம் அதிகம் கவனிக்காத இடத்திலேயே ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம்.

துணிக்கடையில் உடை மாற்றும் அறையில் பெண்கள் உஷாராக இருப்பது மிகவும் அவசியம்.

கண்ணாடியின் மீது ஒரு விரலை வைத்தே கேமரா இருக்கிறதா? இல்லையா? என அறிந்து கொள்ளலாம்.

ரகசிய கேமராக்களை கண்டறியும் மொபைல் செயலிகளிடமும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்.

ரகசிய கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், காவல்துறைக்கு உடனடியாக புகார் கொடுக்கவும்.