கிரிக்கெட் நட்சத்திரம் தோனியின் ஆதார் விவரங்களே வெளியான நிலையில், சாதாரண குடிமகனின் ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்குவதற்காக இந்திய தனிமனித அடையாள ஆணையம் (UIDAI) கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் கீழ் நாட்டு மக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பணியினை தனியார் நிறுவனங்கள் மூலம் அரசு மேற்கொண்டு வருகிறது. ஆதார் அட்டைக்கான விவரங்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் சேகரிக்கப்படுவதால், அதன் பாதுகாப்பு தன்மை குறித்து சமூக ஆர்வலர்களும், எதிர்கட்சிகளும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.
ஆதார் அட்டை விவரம் சேகரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் பெரும்பாலானோருக்கு அதுகுறித்து முறையான பயிற்சி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், தனிமனித விவரங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து அரிச்சுவடி அக்கறை கூட இல்லாத பலர்தான் ஆதார் விவரங்களை பதிவு செய்துவருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு ஆதார் விவரங்களை சரிபார்க்கும் உரிமையை யார் அளித்தது என்ற விடை தெரியாத கேள்வியும் இந்த குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருக்குமோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியிருக்கிறது. ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் சாட்டையெடுத்துக் கொண்டிருந்தாலும், சமையல் எரிவாயு மானியம், ஓட்டுனர் உரிமம், செல்போன் இணைப்பு என ஆதார் இருந்தால்தான் பெற முடியும் என்ற சேவைகளின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டுகொண்டிருக்கிறது. ஆனால் அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்கிறது ஆதார் சட்டம் 2016.
ஆதார் விவரங்களைக் கொண்டு பணபரிமாற்றம் செய்யும் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அது பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த விவரங்களைக் கொண்டு சாமானியன் உழைப்பால் சேர்த்த பணத்தினை திருட முடியும் என்பதால் பாதுகாப்பு விஷயத்தில் அரசு அலட்சியம் காட்டக்கூடாது என்று அலாரம் அடிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இந்திய தனிமனித அடையாள ஆணைத்தின் தலைமை செயலதிகாரி அஜய் பூஷன் பாண்டே, கடந்த 2012ம் ஆண்டு முதல் 32 கோடி முறை ஆதார் விவரங்கள் மூலம் பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 100 கோடி முறை வாடிக்கையாளர்கள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒருமுறை கூட தகவல்கள் திருடப்பட்டதாகவோ அல்லது சட்டவிரோத பணபரிமாற்றமோ நடைபெற்றதாக புகார் எழவில்லை என்கிறார்.