சிறப்புக் களம்

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் திட்டம் எப்படி செயல்படும்?

Rasus

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் திட்டத்திற்கான வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவிக்கிறது.

இந்தத் திட்டம் எப்படி செயல்படும் என்பதை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஸ்மார்ட் கார்டு திட்டத்தின் படி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ‘பாயின்ட் ஆப் சேல்’என்ற இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒருவர் ஆதார் அட்டையுடன் சென்று ஸ்மார்ட் கார்டுக்கு பதிவு செய்ய வேண்டும். அதனை ரேஷன் ஊழியர் ‘பாயின்ட் ஆப் சேல்’ இயந்திரத்தில் ‘ஸ்கேன்’ செய்து தொலை பேசி எண் போன்ற விபரங்களைப் பெற்றுக் கொள்வார். இந்த விபரங்கள் உணவுத்துறை அலுவலகத்திலும் பதிவு செய்யப்படும். அதன் பிறகு இந்த விபரங்கள் அடங்கிய ‘சிப்’ பொருந்திய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

ஸ்மார்ட் கார்டை ‘ஸ்வைப்’ செய்து ரேஷன் பொருட்களைப் பெற முடியும். தான் வாங்கிய பொருட்களின் விபரங்கள் எஸ்.எம்.எஸ்., மூலம் பதிவு செய்த தொலை பேசி எண்ணுக்கு வந்துவிடும். உணவுத்துறை அலுவலகத்திலும் பதிவாகும். மேலும், ரேஷன் கடையில் உள்ள பொருட்களின் இருப்பு குறித்தும் இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.

‘TNEPDS’என்ற குடும்ப அட்டை ஆப் மூலமும் ரேஷன் கடையில் உள்ள இருப்பு மற்றும் மற்ற விபரங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஆதார் ஏன் அவசியம்?

ரேஷன் ஸ்மார்ட் கார்டுக்காக விழி, விரல் ரேகை, புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை மக்களிடமிருந்து தமிழக அரசு பதிவு செய்ய வேண்டும். இதற்கு பல கோடி ரூபாய் செலவாகும். ஆனால் மத்திய அரசின் ஆதார் திட்டத்தில் ஏற்கனவே அந்த விபரங்கள் இருப்பதால், செலவை குறைத்துக்கொள்ள ஆதாரை பயன்படுத்துகிறது தமிழக அரசு. தமிழகத்தில் 1.98 கோடி பேர் ரேஷன் கார்டு வைத்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் இன்னும் முழுமையாக அனைவரும் ஆதார் அட்டை பெறாத நிலையில் இந்த திட்டம் தாமதம் அடைவதாக கூறுகிறது தமிழக அரசு.

திட்டத்தின் பின்னணி:

மத்திய நுகர்வோர் அமைச்சகம் டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டத்தை கடந்த 2010-ம் ஆண்டு அறிவித்தது. இந்த திட்டத்தை முதற்கட்டமாக தமிழகம் உட்பட சில மாநிலங்களில் செயல்படுத்த முடிவு செய்தது. இப்போது மக்கள் பயன்படுத்தும், ரேஷன் கார்டுகள் 2005-ம் ஆண்டு வழங்கப்பட்டது.

அதன் பிறகு, 2011-ம் ஆண்டு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என்று அறிவித்தது தமிழக அரசு. அதனால் ரேஷன் கார்டுகளில் உள்தாள் ஒட்ட ஆரம்பித்தார்கள். ஆறு வருடமாக உள்தாள் ஒட்டப்பட்டு வருகிறது. இந்த ஏப்ரல் மாதம் ஸ்மார்ட் கார்டு முதற்கட்டமாக சில நகரங்களில் வழக்கப்படும் என்று கூறியுள்ளது அரசு.