சிறப்புக் களம்

ரூ.100-ல் இருந்து 1000 வகையான மரபொம்மைகள்....!-சுயதொழிலில் ஜொலிக்கும் இல்லத்தரசி

webteam

சுற்றுச்சூழலுக்கு உகந்த மரத்திலான பொம்மைகள் விற்பனையில் கோவையை சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் கலக்கி வருகிறார். ரூபாய் 5 ஆயிரத்தில் தொடங்கிய தொழில் தற்போது இந்தியா முழுவதும் விற்பனை செய்யும் அளவிற்கு 1000 வகையான பொம்மை வகைகள் விற்பனையில் தொழில்முனைவோராக மாறியது எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.  

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் ஹரிப்பிரியா. இரு குழந்தைகளுக்கு தாயான இவர், தனது முதல் குழந்தைக்கு பிளாஸ்டிக்கிலான பொம்மைகளை தவிர்த்து, பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மரத்தாலான பொம்மைகளை தருவதற்கு தேடியபோது, பொம்மைகள் பெரியளவில் இல்லை என்பதை தெரிந்துக்கொண்டார். சிறு வயதிலிருந்தே தொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வம், மரத்தாலான பொம்மை விற்பனைக்கு சந்தையில் உள்ள தேவை என இரு காரணங்கள் தற்போது ஹரிபிரியாவை தொழில் முனைவோராக்கியுள்ளது.

ரூபாய் 5 ஆயிரத்தில் தொடங்கிய இந்த தொழில், தற்போது இந்தியா முழுவதும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் அளவிற்கு மாறியது என்பது எளிதாக நடந்தது இல்லையென்றும், அதன் பின் சவால்களும், வலிகளும் மட்டுமின்றி கணவர் மற்றும் தாயின் ஒத்துழைப்பும், கடினமான உழைப்பும் உள்ளது எனவும் தனது தொழில்முனைவோர் பயணத்தை விவரிக்கிறார் ஹரிப்பிரியா.  



தற்போது மரத்திலான பொம்மைகள் குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும், அதன் சில்லறை சந்தை விற்பனை என்பது மிக சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளது. ஆனால், மத்திய அரசு இந்த தொழிலை ஊக்குவிக்கவும், குறிப்பாக பெண்களுக்கு அதிகளவு அரசின் சலுகைகள் இந்த தொழிலில் கிடைப்பதாகக் கூறும் ஹரிப்பிரியா, தற்போது பிறந்த குழந்தைகள் முதல் வளர்ந்த குழந்தைகள் வரை பயன்படுத்தும் வகையில் 1000 வகையான மரத்திலான பொம்மை வகைகள் மட்டும் விற்பனை செய்யப்படுவதாகவும், குழந்தைகள் பிறந்ததிலிருந்து 5 வயது வரையிலான காலக்கட்டம் அதன் மூளை வளர்ச்சிக்கு உகந்தது என்பதால், பெரும்பாலும் மூளை வளர்ச்சிக்கும், ஈடுபாட்டுடன் விளையாடும் வகைகளான பொம்மைகள் தயாரித்து வருவதாக கூறுகிறார்.



ஹரிப்பிரியா நடத்தும் இந்த விற்பனையகத்தில் முழுவதும் பெண்கள் மட்டும் வேலை செய்வது என்பது கூடுதல் சிறப்பான தகவல். தற்போது சொந்த பொம்மைகள் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டாலும், இறக்குமதி பொம்மைகளும் அதிகளவில் வாங்கப்படுவதை முற்றிலும் தவிர்த்து சொந்த தயாரிப்பிலேயே விற்பனை என்ற இலக்கை அடைவதே ஹரிப்பிரியாவின் இலக்கு.