சிறப்புக் களம்

இந்திய ரயில்வேயும் பட்ஜெட்டும்... - ஒரு ஃப்ளாஷ்பேக் பயணம்!

இந்திய ரயில்வேயும் பட்ஜெட்டும்... - ஒரு ஃப்ளாஷ்பேக் பயணம்!

jagadeesh

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ரயிலில் பயணிப்பது என்பது அன்றாட வாழ்வோடு அங்கமாகிவிட்ட ஒன்று. அது தொலைதூர பயணமாக இருந்தாலும் சரி, நகரங்களுக்குள் நகர்வதாக இருந்தாலும் சரி, ரயில் பயணம் அத்தியாவசியமானது. அதவும் நடுத்தர வர்கத்தினருக்கும், ஏழை மக்களுக்கும் ரயில் பயணம் ஒரு வரப்பிரசாதம். இப்போதும் இதர போக்குவரத்துகளுடன் ஒப்பிட்டாலும் ரயில் பயணம் மலிவானதாகவே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வேக்கான திட்டங்களும், நிதியும் ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும். 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பொருளாதார அறிஞர் வில்லியம் அக்வொர்த் அடங்கிய கமிட்டி பொது பட்ஜெட்டிலிருந்து ரயில்வே துறையை மட்டும் பிரித்து தனி பட்ஜெட்டாக அறிவிக்க வேண்டும் என்று 1920-ம் ஆண்டு பரிந்துரைத்தது. அதன்படியே ரயில்வே பட்ஜெட் தனியாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு சுதந்திர இந்தியாவிலும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. 2014-இல் பாஜக அரசு பதவியேற்றப் பின்பு மத்திய பொது பட்ஜெட்டுடன் ரயில்வேக்கான நிதி நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்தியாவும் ரயில்வேயும்!

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் மீட்டர் கேஜ் பாதையில் ஆரம்பித்து இன்று புல்லட் ரயில் வரை வளர்ந்து நிற்கும் இந்திய ரயில்வேயின் வளர்ச்சி பிரமாண்டமானது. சரக்கு போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து என ரயில்வே துறை இந்தியாவில் அசுர வளர்ச்சி பெற்றது. இந்தியாவில் முறையான ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது 1853 ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி. மும்பைக்கும் தாணேவுக்கு இடையே முதல் ரயில் இயக்கப்பட்டது. 1925 ஆம் ஆண்டு முதல் மின்சார ரயில் சேவை மும்பை மற்றும் குர்லா நகரங்களுக்கு இடையே தொடங்கப்பட்டது. 1929 ஆம் ஆண்டு 66,000 கிலோ மீட்டருக்கு ரயில்வே இருப்பு பாதை போடப்பட்டது. அப்போது ரயில்வே துறையின் மொத்த மதிப்பு 68.7 கோடி யூரோ.

நாள் ஒன்றுக்கு 2.5 கோடி பயணிகள் இந்திய ரயில்களில் பயணிக்கிறார்கள். ஒரு நாளில் இந்தியாவில் 11,000 ரயில்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கிட்டதட்ட 60,000 கிலோ மீட்டர் பாதையை இந்த ரயில்கள் கடக்கின்றன. விவேக் எக்ஸ்பிரஸ் என்ற ரயில்தான் அதிக தொலைவு செல்லக்கூடிய ரயில். கன்னியாக்குமரி முதல் திப்ரூகர் வரை செல்லக்கூடியது. அதேபோல இந்தியாவின் மிகச் சிறிய தொலைவு இயங்கக்கூடிய ரயில்கள் நாகபுரி - அஜ்னி வழித்தடத்தில் இயங்குகிறது. இதன் தூரம் 3 கிலோ மீட்டர் மட்டுமே. மொத்த தொலைவு 4,286 கிலோ மீட்டர், பயண நேரம் 82.30 மணி நேரம்.

இந்திய ரயில்வேயில் 2015-ம் ஆண்டு தகவலின்படி மொத்தம் 13 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இந்தியாவின் மிகப் பழமையான தற்போதும் இயங்கக்கூடிய ரயில் இன்ஜீன் ஃபேரி குயின். இது 1855-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த ரயில் அவ்வப்போது பொது மக்களுக்காக டெல்லி - ஆல்வார் ரயில் நிலையங்கள் இடையே இயக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மஹாராஜா எக்ஸ்பிரஸ், பேலஸ் ஆன் வீல்ஸ், ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ், தி கோல்டன் சேரியட், டெக்கான் ஒடிஸி என பல்வேறு சொகுசு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதற்கான கட்டணங்கள் லட்சங்களில் வசூலிக்கப்படுகிறது. கடந்தாண்டு பட்ஜெட்டில் மட்டும் ரயில்வே பணிகள் மற்றும் வளர்ச்சிக்காக ரூ70,000 கோடி ஒதுக்கப்பட்டது.