சிறப்புக் களம்

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கடந்து வந்த பாதை

webteam

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெற்றார். அதனையடுத்து ரகுராம் ராஜனுக்குப் பின்னர் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்தது.

அப்போது உர்ஜித் படேலை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மத்திய அரசு நியமித்திருந்தது. அதன்படி உர்ஜித் படேல் 2019-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி வரை இப்பொறுப்பில் இருப்பார் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் இன்னும் ஒருமாதம் பதவிக்காலம் இருக்கும் நிலையில் இன்று தனது ராஜினாமாவை அறிவித்தார் உர்ஜித் படேல்.

தனது ராஜினாமா குறித்து உர்ஜித் படேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில சொந்த காரணங்களால் நான் வகித்த பதவியிலிருந்து உடனே விலகுவது என முடிவு செய்துள்ளதாக” தெரிவித்தார்.

இந்நிலையில் யார் இந்த உர்ஜித் படேல், அவர் கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம். 

சர்வதேச நிதியம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகளில் பதவி வகித்த படேல், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவி வகிப்பதற்கு முன் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்தார். மத்திய அரசின் பல்வேறு குழுக்களில் இடம் பெற்றிருந்த இவர் 1998 - 2001-ல் மத்திய நிதியமைச்சகத்தின் ஆலோசகராகவும் இருந்துள்ளார். குஜராத்தை சேர்ந்த உர்ஜித் பட்டேல், ரிலையன்ஸ் உள்ளிட்ட சில தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். நிதிக் கொள்கை நடைமுறைகளை உருவாக்கும் குழுவின் தலைவராகவும் இவர் இருந்தார்.

ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவி ஏற்றபோது உர்ஜித் முன்பு மிகப்பெரிய இரண்டு சவால்கள் காத்திருந்தன. பணவீக்கத்தை கட்டுப்படுத்தி தொழிற் வளர்ச்சியையும் முடுக்க வேண்டும், வராக் கடன்களை குறைக்க வேண்டும் என்பவைதான் அவை. இந்த சவால்களை உர்ஜித் படேல் எவ்வாறு சமாளிக்கப்போகிறார் எனப் பொருளாதார வல்லுநர்கள் காத்திருந்தனர். ஆனால் உர்ஜித் பொறுப்பேற்று இரண்டாவது மாதத்திலேயே அவர் மிகப்பெரிய சவாலை சந்திக்க நேர்ந்தது. அது பணமதிப்பிழப்பு நடவடிக்கை. 

பிரதமர் மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அதிரடியாக அறிவித்தார். ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் அன்று இரவு முதல் செல்லாது என அவர் அறிவித்தது இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய தோல்வி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் உர்ஜித் படேலுக்கு அது அழுத்தத்தை தந்தது. 

இதற்கிடையே பணமதிப்பிழப்பு குறித்து பேசிய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்  "ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது நல்ல யோசனை அல்ல என்று அரசுக்கு நான் தெளிவுபடுத்தினேன். புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 87½ சதவீத நோட்டுகளை மதிப்பிழக்க செய்தபோது, அதை நன்றாக திட்டமிடாமல் செயல்படுத்தி விட்டனர்" என்று தெரிவித்தார். 

ஆனால் நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பேசிய உர்ஜித் படேல், பிரதமர் நரேந்திர மோடி எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவை தெரிவிக்கிறேன். இந்த நடவடிக்கை ஒரு நல்ல முடிவு. வாராக்கடன் பிரச்சினையில் மெதுவாக முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். நாடே பல பிரச்னைகளை கண்ட நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் நேரடி ஆதரவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே விரிசல் விழத்தொடங்கியது. ரிசர்வ் வங்கியை நிர்வகிக்க ரிசர்வ் வங்கி வாரியக்குழுவை மத்திய அரசு நியமித்து அதிர்ச்சி அளித்தது. 

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தில் மத்திய அரசு தலையிட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அவ்வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா கடந்த அக்டோபர் மாதம் வெளிப்படையாக கூறினார். இதைத் தொடர்ந்து அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்குமிடையிலான உரசல் போக்கு குறித்து ஒவ்வொன்றாக தகவல்கள் வெளியாக ஆரம்பித்தன. 

ரிசர்வ் வங்கி வசம் உள்ள 9 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியில் 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயை அரசு கேட்பதாக தகவல்கள் வெளியாகின. மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த போதிய நிதி இல்லை என்றும் அதை சமாளிக்க ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள பணத்தில் ஒரு பகுதியை தர வேண்டும் என அரசு நிர்பந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அதே சமயம் தன்னிடம் உள்ள உபரி தொகை பொருளாதார நெருக்கடி காலங்களில் தேவைப்படும் என்று கூறி ரிசர்வ் வங்கி பணம் தர மறுத்ததாகவும் தகவல்கள் கசிந்தன. இதைத் தொடர்ந்து அவசியமான சில காரணங்களுக்காக மத்திய அரசின் உத்தரவை ரிசர்வ் வங்கி கட்டயாமாக பின்பற்ற வழிவகுக்கும் விதி எண் 7-ஐ நிதியமைச்சகம் கையில் எடுக்கும் எனவும் தகவல்கள் வெளியாகின. 

மேலும் வங்கி வராக் கடன் விவகாரத்திலும் சிறிய தொழில் நிறுவனங்களுக்கு கடன் தரும் விவகாரத்திலும் ரிசர்வ் வங்கி பின்பற்றும் கடுமையான விதிமுறைகளால் தொழிற்துறை வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அரசு கருதியதாக செய்திகள் வெளியானது. இது போன்ற கடுமையான விதிகளை தளர்த்திக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தரப்பில் ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் தரப்பட்டதாக தெரிகிறது. இந்தப் பின்னணியில் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்யும் மன நிலைக்கு வந்து விட்டார் எனக் கடந்த மாதமே தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் ஒரு மாதம் பதவிக்காலம் இருக்கும் முன்னரே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் உர்ஜித் படேல். இந்நிலையில் அவரின் ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உர்ஜித் படேலின் ராஜினாமா வங்கித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு. அவர் ரிசர்வ் வங்கியின் நிதி நிலையில் நிலைத்தன்மையை ஏற்படுத்தியவர். வங்கிகளில் ஒழுங்கமைப்பை ஏற்படுத்தி அதனை உறுதியும் செய்தார் என்று தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் பதிவிட்டுள்ள நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராகவும் ஆளுநராகவும் பதவி வகித்த உர்ஜித் படேலின் சேவையைப் பாராட்டுகிறோம். அவரது முடிவை இந்த அரசு ஏற்கிறது. அவருடன் நான் பணியாற்றி பலனடைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.