சிறப்புக் களம்

கடந்த ஆண்டு புதிய தலைமுறை பதிவுசெய்த தனித்தடங்கள்

கடந்த ஆண்டு புதிய தலைமுறை பதிவுசெய்த தனித்தடங்கள்

webteam

கடந்துபோன 2018ல் புதிய தலைமுறை அழுத்தமாக பதிய வைத்த செய்திகள் என்ன? கடந்த 12 மாதங்களில் நடந்தது என்ன?   எதைச்சொல்லலாம்? எதை விடலாம்?

கேரளா வெள்ளம் 

பேரிடர்கள் எதிர்பார்த்து வருவதில்லை. எதிர்பாராத தருணத்தில் பேரதிர்ச்சியை விதைத்து விட்டு வேதனையை அறுவடை செய்யும் நிகழ்வுகள் சில இந்த 2018ல் நடந்தேறின. அவற்றில் கேரள பெருவெள்ளம் முக்கியமானது. இதுவரை கண்டிராத மழையையும், அதன் விளைவாக பெருவெள்ளத்தையும் கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்கள் சந்தித்தன. ஓரிரு மாவட்டங்களே பெரும் பாதிப்பில் இருந்து தப்பின. 

அண்டை மாநிலத்தில் நேர்ந்த பேரழிவைக் கண்டு அதிர்ந்து அங்குள்ள மக்களின் தவிப்பை உணர்வுப்பூர்வமாக புதிய தலைமுறை பதிவு செய்தது. அதேபோல் கேரளத்தின் மூலை முடுக்குகளில் தண்ணீருக்குள் தவிக்கும் மக்களின் குரல்களை வெளிப்படுத்தியது.
 
வாழ்வின் ஆதாரங்களை அசைத்துப்பார்த்த பெருவெள்ளத்திற்குப் பின், உதவி செய்யும் கரங்களை இணைத்து கேரளத்திற்காக நிவாரணப்பொருட்களை சேகரித்து அளித்து அவர்களுக்கு கைக்கொடுத்து ஆறுதல் தந்தது. மலையாள மக்களின் மனவேதனையை மிகுந்த சிரமங்களுக்கு இடையே பயணப்பட்டு மண்சரிவு, வெள்ளம் சூழ்ந்த பாதைகளை கடந்து சென்று பதிவு செய்தது. அண்டை மாநிலம்தானே என்ற அலட்சியமின்றி, அங்கு தவிப்போருக்கு தோள் கொடுத்தது பக்கபலமாக துணை நின்றது புதிய தலைமுறை.


மறக்க முடியாத ‘கஜா’

கேரளா பெருமழையால் அனுபவித்த துயரத்தைபோல தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் ‘கஜா’ புயலால் பல இன்னல்களை அனுபவித்தன. எங்கே கரையைக் கடக்கும்? தாக்கம் எப்படி இருக்கும்? என்பதை கணிக்க முடியாமல் போக்கு காட்டிக்கொண்டிருந்த கஜா புயல் கடந்த, நவம்பர் 16 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களை முழு தீவிரத்துடன் வேட்டையாடியது.

இதுவரை புயலையே காணாத மாவட்டங்களைகூட சூறையாடிவிட்டு, கஜா கடந்துபோன பிறகுதான் அதன் கொடூரமான தாக்கம் தெரிய வந்தது. பசியாற்றி, படிக்க வைத்து, படிப்படியாக முன்னேற வைத்த தென்னை மரங்களை அடியோடு இழந்து நின்றார்கள் விவசாயிகள். புயல் சின்னம் உருவான போதிருந்தே அதுகுறித்து தகவல்களை பதிவுசெய்த புதிய தலைமுறை, கரையைக் கடந்தபோது இரவெல்லாம் தொடர் நேரலையில் ஒவ்வொரு நிகழ்வையும் மக்களுக்கு தெரிவித்தது. 

யாரும் செல்லாத இடங்களுக்குகூட முதலில் சென்று தவித்துக்கிடந்த மக்களையும், வீழ்ந்துகிடந்த தென்னை மரங்களையும் நேரடியாக கண்டு ஆதாரப்பூர்வமான செய்திகளை வெளிக்கொணர்ந்தது புதிய தலைமுறை. அங்கு ஒரேநாளில் பணக்காரர்கள் ஏழைகளாகி இருந்தனர். மேலும் ஏழைகள் பரம ஏழைகளானார்கள். ஒரே இரவில் பல்லாயிரக் கணக்கானோர் வீடற்றவர்களாக வீதிக்கு வந்து தவிப்பை பதிவு செய்தது. உணர்வுப்பூர்வமாக டெல்டா மக்களோடு இணைந்து அவர்களின் குரலை ஒலிக்கச் செய்தது புதிய தலைமறை.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டக்களம் கண்டபோது அதனை பதிவு செய்தது இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வாக இருந்தது. தொடர் போராட்டங்களுக்கெல்லாம் உச்சமாக 13 பேரை பலிகொண்ட துப்பாக்கிச்சூடு அமைந்தது. இன்றுவரை தூத்துக்குடியின் மறக்க முடியாத வடுவாக நெருடிக்கொண்டிருக்கிறது அந்தச் சம்பவம். அதன் ஒவ்வொரு நிகழ்வையும் களத்தில் இருந்து பதிவு செய்தது புதிய தலைமுறை.

5 மாநில தேர்தல் களம் 

தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம்,சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களில் இந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல், மினி பொதுத்தேர்தலாக வர்ணிக்கப்பட்டு உற்று நோக்கப்பட்டது. இவற்றில் தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மாநிலங்களின் தேர்தல் களங்களில் இருந்து நேரடித்தகவல்களை அளித்தது புதிய தலைமுறை. பிரசாரம் தொடங்கி, வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வரை புதிய தலைமுறை உடனுக்குடன் செய்திகளை களத்தில் இருந்து அளித்தது. 


ஆசிரியர் ‘பகவான்’

தாயாகவும், தந்தையாகவும் இருந்து மாணவர்களை வழிநடத்துபவர்கள் ஆசிரியர்கள், அர்ப்பணிப்போடு பணியாற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் கொண்டாடித்தீர்க்கிறார்கள். தங்களுக்கான ஒளியாக ஆசிரியர்களை நினைக்கிறார்கள் மாணவர்கள். அப்படி எழுத்தறிவித்த ஒருவர் பள்ளியில் இருந்து மாற்றலாகி செல்லக்கூடாது என்று மாணவ, மாணவியர் கதறிய சம்பவம் புதிய தலைமுறையால் வெளிச்சத்திற்கு வந்தது. திருவள்ளூர் மாவட்டம் வெளியகரம் அரசினர் உயர்நிலைப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் பகவான், பள்ளயை விட்டுச்செல்லக்கூடாது என்று திரண்டு நின்று மாணவர்கள் அழுதக் காட்சிகள் ஒளிபரப்பானபோது நெகிழாத மனங்களே இல்லை. 

ஆங்கில ஆசிரியராக பணியில் சேர்ந்தபிறகு அனைத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஆங்கிலப்பாடத்தில் 100 சதவிகித தேர்ச்சியை பெற்று தந்த பகவான், மாணவர்களிடையே நண்பராக, சகோதரராக, நல்லாசானாக இடம் பிடித்தார். ஆசிரியர் பகவானை புதிய தலைமுறை வெளிச்சமிட்டு காட்டியபோது, தங்கள் நல்லாசிரியர்களை நினைவு கூர்ந்து நெகிழ்ந்தனர் நேயர்கள்.

பெரம்பலூர் மாணவி கனிமொழி

பத்துக்குப் பத்து அளவு கொண்ட வீடு. ஏழ்மையைச் சொல்லும் பொருட்கள். ஒரு கூலித்தொழிலாளியின் இருப்பை உணர்த்தும் இந்த வீட்டில் இருந்து மருத்துவக்கல்லூரியை எட்டியவர் கனிமொழி. கடன் வாங்கி, கல்லூரிக் கட்டணம் கட்டிய தந்தைக்கு கால் உடைந்த நிலையில், மருத்துவக்கல்விக்கட்டணம் செலுத்த வயலில் இறங்கி கூலி வேலை செய்தார் கனிமொழி. 3 ஆண்டு படிப்பை ஒரு அரியர் கூட இல்லாமல் படித்துவிட்டு, இறுதியாண்டு படிக்கும் நேரத்தில் டாக்டர் கனவு கானல்நீராகுமோ என்ற கவலையில் இருந்தார் இந்த மாணவி.

பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து மருத்துவம் படிக்கும் முதல் அருந்ததியர் இன மாணவி இவர். மாணவியின் நிலையை உலகுக்கு உரைத்தது புதிய தலைமுறை. இந்தத் தீப்பொறி ஒரு தீபமேற்ற உதவியது. மாணவி கனிமொழிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் குவிய, நடிகர் கமல்ஹாசனும் கனிமொழி படிப்புக்கு உதவுவதாக கை கொடுத்தார்.