சிறப்புக் களம்

கவனம் ஈர்க்கும் ‘மு’ மற்றும் சி.1.2. திரிபுகள்... பயன்தருமா வழக்கத்திலுள்ள தடுப்பூசிகள்?

நிவேதா ஜெகராஜா

இந்தியாவில் கேரளாவை தவிர பிற இடங்களிலெல்லாம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்துவந்தாலும்கூட, பிற நாடுகளில் சூழல் இப்படியாக இல்லை. அந்தவகையில் தற்போது மிக மோசமான கொரோனா அலையை எதிர்கொண்டு வருகிறது வளர்ந்த நாடான அமெரிக்கா. அமெரிக்காவில் குறிப்பாக குழந்தைகள் மத்தியில் கொரோனா தாக்கம் தற்போது அதிகமாக உள்ளது. கடந்த 3 வாரங்களில் மட்டும், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க தரவுகள் தெரிவித்துள்ளன.

இந்தளவுக்கு அங்கு நோய்ப் பரவ என்ன காரணமென ஆராய்ந்தால், பதில் ஒன்றுதான். அது, வைரஸின் தன்மை! அனைத்து வைரஸ்களும் ஒவ்வொரு கால மாற்றத்திற்கும் ஏற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது. இயல்பில் அனைத்து வைரஸ்களும் (டெங்கு, ஜிகா உட்பட அனைத்தும்) இப்படித்தான் இருக்குமென்றாலும்கூட, கொரோனா சற்று தீவிரமான பண்புகளை கொண்டது. அதனால் அது பல உருமாற்றங்களை எதிர்கொண்டு, நோயெதிர்ப்பு ஆற்றலுக்கு எதிராக பலவாறு தன்னை தகவமைத்துக்கொண்டது. இந்த அறிவியல் விளக்கத்தின் அடிப்படையில்தான் கொரோனா இதுநாள்வரை பல திரிபுகளாக பரவிவந்தது.

கொரோனாவின் அப்படியான திரிபுகள்தான் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ் போன்றவையாவும். இப்படி பல திரிபுகளாக இது உருவெடுத்தாலும், ஒருசில திரிபுகள் மட்டுமே தீவிர விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கும். உதாரணத்துக்கு மேற்குறிப்பிட்டவற்றில் டெல்டாதான் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்ட திரிபாக இருந்தது. பிற அனைத்தும் சாதாரண சளி காய்ச்சல் போன்ற பாதிப்பை ஏற்படுத்தி, வீட்டுத்தனிமையில் இருந்தாலே சரிசெய்யலாம் என்ற அளவிலேயே இருந்தது. இந்தவகையில் மிகத்தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் இன்னும் இரண்டு கொரோனா திரிபுகள் தற்போது பார்க்கப்படுகிறது. அவை, ‘மு’ (அ)  B.1.621 திரிபு மற்றும் சி.1.2. (C.1.2.) திரிபு. இவை இரண்டும் மருத்துவத்துறையினருக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்துவதாக சில உலக நாடுகளில் இருக்கிறது.

இந்த ‘மு’ மற்றும் சி.1.2. திரிபுகளில், ‘மு’ திரிபு கவனம் கொள்ள வேண்டிய திரிபு (Variant of Interest - VOI) என்ற வகையின் கீழ் கொண்டுவரப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் நேற்றைய தினம் தெரிவித்தது.

Variant of Interest என்றால், குறிப்பிட்ட வைரஸ் நோய் தீவிரமாகப் பரவுவதற்கான வாய்ப்பாக அமையும் என்று பொருள். அதாவது ‘நிச்சயம் தீவிர நோய்ப்பரவலை ஏற்படுத்தும் வைரஸ்’ என்ற உறுதிசெய்யப்படுவதற்கு முந்தைய நிலை. அது உறுதிசெய்யப்படும்போது, அந்தத் திரிபு கவலை கொள்ள வேண்டிய திரிபு (Variant of Concern) என்றும், பின் கூடுதல் கவனம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய திரிபு (Variant of High Consequence) என்ற வகையின் கீழும் கொண்டுவரப்படும். இதுவரை கப்பா (பி .1.617.1) உட்பட ஐந்து VOI கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வகைகளின் கீழ்வரும் திரிபுகளின் பரவல் மற்றும் தாக்கத்தை, உலக சுகாதார நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்கும்.

சி.1.2. திரிபு, இப்படியான எந்த வகைப்படுத்தலின் கீழும் இப்போதுவரை வரவில்லை. இருப்பினும் இதன் பரவல் சற்று தீவிரமாக இருப்பதாக இந்த வைரஸ் தாக்கமிருக்கும் நாடுகளில் களத்திலிருக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு திரிபுகள் குறித்தும், சில அடிப்படை தகவல்களை இங்கு பார்ப்போம். குறிப்பாக, இந்த திரிபு கொரோனா வைரஸ் பரவலை தற்போது பயன்பாட்டில் தடுப்பூசி மூலம் தடுத்து நிறுத்த முடியுமா என்பது பற்றி இங்கு தெரிந்துக்கொள்ளுங்கள்.

‘மு’ திரிபு, ஜனவரி 2021-ல் கொலம்பியாவில் முதன்முதலாக கண்டறியப்பட்டது. ஆகஸ்ட் 30, 2021 -ல் இதை கவனம் செலுத்த வேண்டிய திரிபு என்று ஐநா சபையின் பொது சுகாதார அமைப்பு தெரிவித்தது. மேலும் “இந்த திரிபு வைரஸ், நோயெதிர்ப்பு சக்தியிடம் இருந்து எளிதில் தப்பிக்கும் பண்புகளை கொண்டிருக்கிறது” என்றும் தெரிவித்தது. இந்த இடத்தில் நோய் எதிர்ப்பு சக்தி என குறிப்பிடப்படுவது, தடுப்பூசி மூலம் கிடைத்ததாக எதிர்ப்பு சக்தியாகவும் இருக்கலாம் அல்லது நோயிலிருந்து மீண்டபிறகு கிடைக்கும் எதிர்ப்பு சக்தியாகவும் இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் விளக்கம் கூறியுள்ளது. இந்தத் திரிபு, ஆகஸ்ட் 29 கணக்குப்படி 39 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் பரவல் விகிதம் கொலம்பியாவில் 39% என்றும், எக்யுடரில் 13% என்றும் உள்ளது. தென் அமெரிக்காவில் இதன் தாக்கம் அதிகமிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சி.1.2. திரிபு குறித்து ஒரு ஆய்வில், இதன் ஸ்பைக் புரதத்திற்குள் பல மாற்றீடுகள் மற்றும் நீக்குதல்கள் உள்ளன. அவை மற்ற VOC -ல் (டெல்டா போன்ற தீவிர தாக்கம் ஏற்படுத்திய கவனம் கொள்ளப்பட வேண்டிய திரிபு வகைகள் இதன்கீழ் வரும்) காணப்படுபவை போல இருக்கிறது. மேலும், அதிகமாக பரவும் தன்மையும் இதிலுள்ளது. இது அதிகம் பரவும் நாடான தென்னாப்பிரிக்கவின் ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து கூறும்போது இதன் தாக்கத்திலிருந்து தடுப்பூசி எடுத்துக்கொண்டோரால் நிச்சயம் தப்பிக்க முடியும் என உறுதியாக கூறுகின்றனர்.

“தடுப்பூசி எடுத்துக்கொண்டதன்மூலம் இந்த சி.1.2 திரிபு பரவும் எங்கள் பகுதியில் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழலிலிருந்தும் மற்றும் இறப்பு அபாயத்திலிருந்தும் தப்பிக்கின்றனர். அந்தவகையில் தடுப்பூசி என்பது சுகாதார அமைப்பில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைப்பதற்கும், நோய் மெதுவாகப் பரவுவதற்கும் மிகப்பெரிய உதவியாக உள்ளது” என்று கூறி, தடுப்பூசி எடுத்துக்கொள்வதை அவர்கள் ஊக்குவிக்கன்றனர்.

‘மு’ வகை திரிபு, தடுப்பூசி செலுத்திக்கொண்டோரை நோய்த்தாக்கத்திலிருந்து காக்க வாய்ப்புகள் சற்று குறைவாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்போதைக்கு தென் அமெரிக்காவில் பரவும் இந்த ‘மு’ திரிபு, தென் ஆப்ரிக்காவில் முதன்முதலில் உறுதிசெய்யப்பட்டிருந்த பீட்டா திரிபு போலவே இருப்பதாகவும், வரும் நாள்களில் இதுபற்றி மேலும் ஆய்வு செய்யப்படும்போதே தடுப்பூசியின் மீதான இதன் தன்மையும், இதன் பாதிப்பின் வீரியமும் தெரியவரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசியுடன் சேர்த்து காற்றோட்டமான இடம், முறையாக மாஸ்க் அணிதல், அடிக்கடி கைகளை தவறாமல் கழுவுதல் அல்லது சுத்தப்படுத்துதல் மற்றும் முடிந்தவரை மற்றவர்களிடமிருந்து 1.5 மீ சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்றவையும் கொரோனாவை தடுக்க உதவுமெனக்கூறி, ஆய்வாளர்கள் அதையும் ஊக்குவிக்கன்றனர்.