சிறப்புக் களம்

'வெறுப்பரசியலால் லாபம்'- விசில்ப்ளோயர் பெண் அம்பலப்படுத்திய ஃபேஸ்புக்கின் 'உள்ளடி' வேலைகள்

webteam

பயனாளிகள், சமூக நலனைவிட லாபத்தை மட்டுமே மனதில் கொண்டு ஃபேஸ்புக் செயல்பட்டு வருவதை அம்பலப்படுத்தும் ஃபேஸ்புக் கசிவுகளுக்குப் பின்னே இருக்கிறார் 'விசில்ப்ளோயர்' (Whistleblower) பெண் ஒருவர். பிரான்சிஸ் ஹாகன் (Frances Haugen) எனும் அந்தப் பெண் ஃபேஸ்புக்கில் பணியாற்றிய காலத்தில் திரட்டிய ரகசிய கோப்புகள் மூலம் அந்த நிறுவனத்தின் மோசமான வர்த்தக நோக்கத்தை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக், சர்ச்சைக்குரிய நிறுவனமாகவும் இருந்து வருகிறது. பயனாளிகளின் தகவல்களை ஃபேஸ்புக் திரட்டுவதும், அவற்றை லாப நோக்கில் பயன்படுத்தி வருவதும் முக்கிய பிரைவசி பிரச்னையாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. ஃபேஸ்புக் தனது மேடையில் வெறுப்பரசியல் கருத்துகளை கையாளும் விதம் தொடர்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் இருக்கின்றன.

இந்நிலையில், ஃபேஸ்புக்கின் வர்த்தக நோக்கிலான மோசமான செயல்பாடுகள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தின. அமெரிக்காவின் புகழ்பெற்ற நாளிதழான 'வால்ஸ்டிரீட் ஜர்னல்' இது தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் தனது செயல்பாடுகளில் பல, பயனாளிகள் நலனுக்கு பாதகமாக அமைந்திருக்கின்றன எனத் தெரிந்திருந்தும் கூட வர்த்தக நோக்கில் பலன் அளிக்கும் என்பதற்காக அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது என்பதை இந்த நாளிதழ் செய்திக்கட்டுரைகள் அம்பலப்படுத்தின.

பயனாளிகளின் எதிர்வினையைத் தூண்டும் கருத்துகளையே ஃபேஸ்புக் லாப நோக்கில் முன்னிறுத்தி வருவதாகவும் தகவல் வெளியானதோடு, ஃபேஸ்புக்கின் துணை நிறுவனமான இன்ஸ்டாகிராம் செயல்பாடுகள் பல இளம் பெண்கள் நலனுக்கு பாதகமாக அமைந்துள்ளதை ஆய்வு மூலம் அறிந்தும் கூட ஃபேஸ்புக் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் அம்பலமானது.

ஃபேஸ்புக் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் நிறுவனத்திற்குள் பரிமாறிக்கொள்ளப்பட்ட குறிப்புகளின் அடிப்படையில் 'வால்ஸ்டீரிட் ஜர்னல்' இந்த தகவல்களை வெளியிட்டு வந்தது.

ஃபேஸ்புக் செயல்பாடுகள் தொடர்பான விவாதத்தை தீவிரமாக்கியுள்ள இந்த செய்திகளுக்குப் பின்னே உள்ள நிறுவன ரகசிய தகவல்கள் ஃபேஸ்புக் கோப்புகள் அல்லது ஃபேஸ்புக் கசிவுகள் என குறிப்பிடப்படுகின்றன.

இந்நிலையில், இந்த ஃபேஸ்புக் கோப்புகளை பகிர்ந்துகொண்டு நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய செயல்பாடுகளை அம்பலமாக்க உதவிய விசில்ப்ளோயர் யார் என்பது தெரியவந்துள்ளது. ஃபேஸ்புக்கில் பணியாற்றி பின் விலகிய பிரான்சிஸ் ஹாகன் எனும் பெண்தான் அவர் என்பது தெரியவந்துள்ளது.

அவர் வெளியிட்ட ஆவணங்கள், ஃபேஸ்புக் தனது விதிமுறைகளை செல்வாக்கு மிக்கவர்களுக்காக தளர்த்திக் கொள்வதையும் வெளிப்படுத்தியுள்ளது.

37 வயதாகும் ஹாகன், ஃபேஸ்புக் நம்பகத்தன்மை குழுவில் ப்ராடக்ட் மேனேஜராக பணியாற்றினார். ஃபேஸ்புக் நிறுவன செயல்பாடுகளால் வெறுப்படைந்து நிறுவனத்தை விட்டு வெளியேறியதாகவும், அதற்கு முன் நிறுவனத்தின் ரகசிய ஆவணங்களை நகலெடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹாகன் அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் இந்தத் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதற்கு முன் பார்த்துள்ள எதையும் விட ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயல்பாடுகள் மிக மோசமாக இருப்பதை உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமூகத்தில் பிளவுபடுத்தும் வகையில் ஃபேஸ்புக் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

"கோபம், வெறுப்பரசியல், ஒரு பக்க சார்பான கருத்துகள் கொண்ட தகவல் சூழலில் நாம் வாழும்போது, இது பரஸ்பர நம்பிக்கையை பாதிப்பதோடு, மற்றவர்கள் மீது கரிசனம் கொள்வதற்கான எண்ணத்தையும் குறைக்கிறது. தற்போதுள்ள ஃபேஸ்புக் வடிவம் சமூகத்தை பிளவுபடுத்தி, உலகின் பல பகுதிகளில் இன வன்முறைக்கு வித்திடுகிறது" என அவர் கூறியுள்ளார்.

2018-ல் ஃபேஸ்புக், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியிலான உரையாடலை அதிகப்படுத்தும் வகையிலான அல்காரிதம் மாற்றத்தை மேற்கொள்வதாக தெரிவித்தது. இந்த மாற்றமே பிரச்னைக்கு மூலக்காரணம் என ஹாகன் கூறியுள்ளார்.

பயனாளிகள் தனது மேடையில் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக பாதுகாப்பான அல்காரிதத்தை பயன்படுத்தாமல், வெறுப்பரசியல் உள்ளிட்ட எதிர்வினைகளைத் தூண்டும் அல்கோரிதத்தை ஃபேஸ்புக் பயன்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பை விட வர்த்தக லாபத்தையே ஃபேஸ்புக் முக்கியமாக நினைக்கிறது என இந்த நேர்காணல் இறுதியில் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, ஃபேஸ்புக் தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டுள்ளன. இந்தக் கசிவுகள் தவறான எண்ணத்தை ஏற்படுத்துபவை மற்றும் நிறுவனத்தின் ஆய்வுகளை மேலோட்டமாக அணுகியிருப்பதாகவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அமெரிக்க நாடாளுமன்ற குழுவும் ஃபேஸ்புக் செயல்பாடுகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இக்குழு முன் ஹாகன் ஆஜாராகி தனது கருத்துகளை தெரிவிக்கவிருக்கிறார்.