நம் எல்லோருக்கும் மெடர்னிட்டி என்ற மகப்பேறு விடுமுறை தெரியும். அப்பா ஆனதற்கான பேடர்னிட்டி விடுமுறை பற்றியும் தெரியும். பாடெர்னிட்டி லீவ் (Pawternity) தெரியுமா?
நியூயார்க் நகரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும், உலகின் மிகப்பெரிய பதிப்பக நிறுவனமான ஹார்ப்பர் கோலின்ஸ், தனது இந்திய கிளைகளில் பணியாற்றுபவர்களுக்கு, செல்லப்பிராணிகளை பராமரிப்பதற்காக, சம்பளத்துடன் கூடிய விடுமுறையை (ஐந்து நாட்கள்) அனுமதித்துள்ளது.
மேலும், ஹார்ப்பர் கோலின்ஸின் நொய்டா அலுவலகத்தில், பணியாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை அலுவலகத்துக்கு கொண்டு வரலாம். பணியாளர்களின் செல்லப்பிராணிகளை பராமரிக்க அலுவலக வளாகத்துக்குள் பிரத்யேகமான இடத்தையும், பராமரிக்க பணியாளர்களையும் அந்நிறுவனம் நியமித்துள்ளது.
இந்நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி அளித்த பேட்டி ஒன்றில், செல்லப்பிராணிகளைத் தத்தெடுக்க முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்துடனும், ஹார்ப்பர் கோலின்ஸ் பணியாளர்கள் வாழ்க்கையில் அமைதியை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இந்த முயற்சி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதாகக் கூறியுள்ளார்.