சிறப்புக் களம்

காங்., பாஜகவின் சோதனைக் களமான குஜராத்: நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படும் தேர்தல்

காங்., பாஜகவின் சோதனைக் களமான குஜராத்: நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படும் தேர்தல்

webteam

குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய சோதனைக் களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முடிவுகள் அடுத்த மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும் என கணிக்கப்படுவதால், இரு கட்சிகளும் தோள் தட்டி நிற்கின்றன.

குஜராத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு நரேந்திர மோடி அல்லாத ஒரு தலைமையின் கீழ் பாஜ‌க முதன்முறையாக தேர்தலை சந்திக்கிறது. நாடு முழுவதும் பரவலாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள உயர் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை போன்றவற்றின் மீதான கருத்துக்கணிப்பாக குஜராத் தேர்தல் முடிவுகளை பாஜக எடுத்துக் கொள்ளும் எனக் கருதப்படுகிறது.

கடந்த தேர்தல்களைப் போலவே இம்முறையும் இந்துத்துவா அரசியலையே மையாக வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட பாஜக ஆயத்தமாகி வருகிறது. அதையும் தாண்டி பிரதமர் மோடிக்கு இருக்கும் பிரபலமானவர் என்ற பெயர், தேர்தல்களுக்கு வியூகங்களை வகுப்பதில் கட்சியின் தலைவர் அமித் ஷாவுக்கு இருக்கும் மதிநுட்பம் போன்றவையும் இத்தேர்தலில் முக்கிய அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன. இருப்பினும், குஜராத்தில் பெருமளவில் இருக்கும் படேல் சமூகத்தவர், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி நடத்திய தொடர் போராட்டம், பாஜகவுக்கு சற்று பின்னடைவாகக் கருதப்படுகிறது. இவர்களது வாக்குகளை தக்க வைக்க இயலாமல் போனால் குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத சரிவை பாஜக சந்திக்க நேரிடலாம் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, போராட்டத்தில் தீவிரமாக இருந்தவர்களுக்கு பாஜகவும், காங்கிரஸும் வலைவீசி வருவதாகக் கூறுகின்றனர். அதன் விளைவாகவே, ஹர்திக் படேலுக்கு நெருக்கமாக இருந்த சிலர் பாஜகவிலும், காங்கிரஸிலும் ஐக்கியமாகியுள்ளதாகத் தெரிகிறது.

குஜராத் தேர்தலைப் பொறுத்தவரை, பாஜகவைப் போலவே காங்கிரஸ் கட்சிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்கவிருப்பதாக செய்திகள் வருவதால், இந்தத் தேர்தல் அவருக்கும் பெரும் சவாலாகும். ராகுல் பிரச்சாரத்திற்கு செல்லுமிடமெல்லாம் காங்கிரஸ் தோல்வியைத் தழுவும் என்ற அவப்பெயரை நீக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. குஜராத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி கண்டால், அது ராகுலுக்கு மணிமகுடமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டே அவரும், சமூக வலைதளம், ட்விட்டர் என்கிற நவீன யுக அரசியல் செய்து வருகிறார். இதில்‌ நரேந்திர மோடிக்கு அவர் பாணியிலேயே ராகுல் பதிலளித்து வருவதற்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் சங்கர்சிங் வகேலா காங்கிரஸில் இருந்து விலகியது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் வென்றால், இவர்தான் முதலமைச்சராக வருவார் என வாக்காளர்கள் எண்ணும் அளவுக்கு அதில் பிரபலமான நபர் யாரும் இல்லாதது அக்கட்சிக்கு பலவீனமாகும்.