இந்தியாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் சேர்ந்திசைக் குழுக்களில் ஒன்றான சென்னை இளைஞர் சேர்ந்திசை (Madras Youth Choir) பொன்விழாவை கொண்டாடிவருகிறது. சேர்ந்திசை நிபுணர் எம். பி.ஸ்ரீனிவாசன் வழிகாட்டுதலில் 1970ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதியன்று உருவான சேர்ந்திசைக் குழு, சென்னை அகில இந்திய வானொலியின் இளைய பாரதம் அலைவரிசையில் தன் முதல் சேர்ந்திசை நிகழ்ச்சியை அரங்கேற்றியது.
இந்திய சேர்ந்திசை பாணியை இளைஞர்களிடம் பரவச் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை இளைஞர் சேர்ந்திசை என்று பெயர் சூட்டினார் ஸ்ரீனிவாசன். சேர்ந்திசை இயக்கத்தை இந்தியா முழுவதும் பரவச் செய்யவேண்டும் என்ற ஆவலுடன் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் இசை மேதைகளுடன் இணைந்து செயலாற்றினார். அந்தக் கனவின் துவக்கமாகத்தான் இந்தச் சேர்ந்திசைக் குழுவை அமைத்தார்.
(எம். பி. ஸ்ரீனிவாசன்)
தமிழக சேர்ந்திசையின் தலைக்காவிரியாக கருதப்படும் எம். பி. ஸ்ரீனிவாசன் (1925-1988) கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி, மேற்கத்திய இசை என்று பன்முக இசையிலும் ஆழமான அறிவும் புலமையும் பெற்று இசையுலகில் தன் பணியைத் தொடங்கியவர். அவர் இசையும் சேர்ந்திசையும் அமைத்த பாடல்கள் இன்றளவும் அவருடைய இசை மேதைமையைக் காட்டிக்கொண்டு காற்றில் உலவுகின்றன.
குழந்தைகள், இளைஞர்களிடையே சேர்ந்திசையின் மூலம் நாட்டுப்பற்று, ஒற்றுமை, உலக அமைதி, மதச்சார்பின்மை, மனித விழுமியம், இந்திய கலாச்சாரம், பண்பாடு, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு போன்றவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் சென்னை இளைஞர் சேர்ந்திசையின் குறிக்கோளாக இருந்துவருகிறது. மேலும் சப்-ஜூனியர், ஜூனியர் என்று குழந்தைகளுக்காக இருவேறு பிரிவுகளில் பாடல்களைக் கற்பித்துவருகிறார்கள்.
(வாஷிங்டன் டிசி கென்னடி சென்டரில் பாரதியின் 'மழை' வசன கவிதையைப் பாடியபோது...)
சென்னை இளைஞர் சேர்ந்திசை, சங்கீத நாடக அகாதெமியின் அங்கீகாரம் பெற்ற சேர்ந்திசைக் குழுவாக உள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பல்வேறு இசை கலாச்சார அமைப்புகளின் அழைப்பின் பேரில் சேர்ந்திசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்தக் குழுவில் இருப்பவர்கள் யாரும் தொழில்முறைப் பாடகர்கள் கிடையாது என்பதும் பத்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் பல பாடல்களைக் கற்றுக்கொண்டு திறம்பட பாடிவருகிறார்கள் என்பதும் பெருமைக்குரியது.
கடந்த 2017ம் ஆண்டு, கிளாசிக்கல் மூவ்மெண்ட்ஸ் அமைப்பின் அழைப்பை ஏற்று அமெரிக்காவுக்குப் பயணம் செய்துள்ளார்கள். அங்கு நடத்தப்பட்ட முன்னாள் அமெரிக்க அதிபரான ஜான் எஃப். கென்னெடியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று சேர்ந்திசை பாடியுள்ளனர். வாஷிங்டன் டிசியில் இருக்கும் பெருமைவாய்ந்த கென்னடி சென்டர் அரங்கத்தில் எம். பி. ஸ்ரீனிவாசன் சேர்ந்திசை அமைத்த மகாகவி பாரதியின் 'மழை' வசன கவிதையைப் பாடிவந்த நினைவுகளைச் சேகரித்துவைத்துள்ளனர்.
"எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் எங்கள் சேர்ந்திசையைப் பொருத்தவரை ஒன்று மட்டும் மாறுவதேயில்லை. ஒன்றுசேர்ந்து ஒரே குரலில் பாடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் ஊக்குவிப்பும்தான் அது. குழுவில் பாடுவோர் அனைவரின் உள்ளங்களிலும் ஏற்படும் பெருமிதமும் சாதனை உணர்வும் ஈடுஇணையற்றது. இந்த உணர்வுதான் எங்கள் குறிக்கோளை அடைய உந்தித் தள்ளிக்கொண்டே இருக்கிறது" என்கிறார்கள் சென்னை இளைஞர் சேர்ந்திசை குழு உறுப்பினர்கள்.