சிறப்புக் களம்

நாள்தோறும் புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை: என்னதான் காரணம்?

webteam

மற்ற நாடுகளில் தங்கம் என்பது ஒரு முதலீடு மட்டுமே. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் என்பது கலாசாரமாகவே இருந்து வருகிறது. காது குத்து, கல்யாணம் என எந்த விஷேசம் என்றாலும் தங்கத்திற்கே முன்னுரிமை. முறை செய்வது, பாரம்பரிய வழக்கம் என பல பெயர்களில் விஷேசத்தில் முன்னால் நிற்கிறது தங்கம்.

விஷேசங்களில் தங்கம் கொடுக்கும் முறை என்பதும் ஒருவித முதலீடு தானே என தங்கத்திற்காக பணம் சேர்க்கும் குடும்பத்தினரும் இங்குண்டு. எது எப்படியோ? தங்கம் என்பது இந்தியாவில் வெறும் உலோகமல்ல. தங்கம் சேமிப்பது அத்தியாவசியம் என்ற நிலையில் மக்கள் இருக்கும் நிலையில் அதன் விலையேற்றம் அவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்றமே உள்ளது. இந்த விலையேற்றத்திற்கும் கொரோனாவுக்கும் தொடர்பு உண்டு என்றே சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு உலக பொருளாதார மந்தநிலை ஒரு காரணமாகக் கூறப்பட்டாலும், சர்வதேச அளவில் ஏற்படும் பதற்றமான சூழலும் இதன் விலை உயரக் காரணமாகக் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் ஒரு பதற்றம் ஏற்படுகிறது என்றால், அப்போது முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் செய்த முதலீட்டை வெளியே எடுத்து தங்கத்தில் முதலீடு செய்வதுதான் வழக்கம்.

அந்த வகையில் அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக ஜனவரி மாதத்தில் தங்கம் வி‌லை ஒரு சவரன் ரூ. 31,000-ஐ தாண்டி புதிய உச்சத்தை தொட்டது.‌ போர்ப் பதற்றம் குறைந்ததையடுத்து தங்கத்தின்விலை சற்று குறைந்தது. அதன்படி தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உலகளவில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தங்கம் வரலாறு காணாத விலை ஏற்றம் கண்டு வருவதாக கூறப்படுகிறது.

அதாவது, ஜனவரி 8-ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.31,432 என புதிய உச்சம் கண்டது. தொடர்ந்து சில நாட்களில் போர்ப்பதற்றம் தணிந்ததையடுத்து தங்கத்தின் விலையும் சற்று தணிந்து ஜனவரி 14-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.30,112 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தொடர்ச்சியாக, சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. பிப்ரவரி 8ஆம் தேதி ஒரு சவரன் ரூ.31,184-க்கும், பிப்ரவரி 15ஆம் தேதி ரூ.31,392-க்கும், பிப்ரவரி 19 ஆம் தேதி ரூ.31,720-க்கும் விற்பனையானது. அதன்படி இன்று மார்ச் 7ம் தேதி ஒரு சவரன் ரூ.33,656-க்கு விற்பனையாகிறது. அதாவது ஜனவரி 8 முதல் மார்ச் 7 வரை கணக்கிட்டால் தங்கம் சவரனுக்கு ரூ.2,224 அதிகரித்துள்ளது. அதாவது இரண்டே மாதங்களில் ரூ.2ஆயிரத்திற்கும் மேல் தங்கவிலை உயர்ந்துள்ளது.

இப்படி நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்து தங்கத்தை தற்போது வாங்கலாமா? என்று மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். கொரோனா தொடர்பான பரபரப்பு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டால், தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாக முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். அத்தியாவசியத் தேவை உள்ளவர்களைத் தவிர முதலீட்டிற்காக தங்கம் வாங்குபவர்கள் வேண்டுமானால் தங்கம் வாங்குவதை தள்ளிப்போடலாம் என்றும் அறிவுரை வழங்கியுள்ளனர்.