சிறப்புக் களம்

தஞ்சாவூர் டூ லாஸ் ஏஞ்சல்ஸ் - உலக அரங்கில் அசத்தும் தமிழக போட்டோகிராபர்..!

webteam

கொரோனா.... உண்மையில் ஒரு மறக்க முடியாத வடுவாக மாறியிருக்கிறது. பிழைப்புத் தேடி வந்த மக்கள், ஒரு பக்கம் ஆதரவின்றி கிலோமீட்டர் கணக்கில் நடந்துகொண்டிருக்க, பலரும் அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வதென்று விழிப்பிதுங்கி நிற்கிறார்கள்.

மானுடம் இப்படி ஒரு நெருக்கடியான காலக்கட்டத்திற்குள் வலுக் கட்டயாமாகத் தள்ளப்படும்போது, நம்பிக்கை வளையத்தை ஏற்படுத்துவதில் கலை முக்கியப் பங்கு வகிக்கும். ஆனால் கொரோனா  கலைஞர்களையும் இந்தக் காலத்தில் விட்டுவைக்கவில்லை. சாமானியனுக்கே இந்த நிலைமை என்றால், ஒரு கலைஞனுக்கு... அதிதேடலுடன் இருக்கும் ஒரு கலைஞனை கூட்டிற்குள் அடைத்து வைத்தால் அவனது மனநிலை என்னவாக மாறும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் அண்மையில் இணையத்தில் வைரலான விஜய் சேதுபதியின் புகைப்படங்கள்.

தொற்றால் எதிர்கொள்ளும் தனிமை எவ்வளவு மனதில் கணத்தை தருகிறதோ, அதே அளவு கணத்தை விஜய் சேதுபதியின் தாடியும், அவரது முகத்தில் தெரிந்த ஏக்கமும் நம்முள் கடத்திச் சென்றன. அதைக் கணக்கச்சிதமாக நமக்குள் கடத்தியவர் ப்ளே பாய் பத்திரிகையின் புகைப்படக்காரர் எல்.ராமச்சந்திரன். காலை நடக்க இருக்கும் அடுத்த புகைப்பட படப்பிடிப்பிற்கு நிதானமாக தயாராகி கொண்டிருந்த ராமச்சந்திரனிடம் பேசினோம்.

நான் பிறந்தது திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் என்ற கிராமம். விவசாயக் குடும்பம் தான். எங்கள் பகுதியில் ஓவியம் வரையும் நபர்கள் மிக அதிகம். எனக்கும் ஓவியம் மீது ஆர்வம் இருந்ததால் சிறு வயதில் நானும் அவர்களுடன் சென்று விடுவேன். ஒரு ஓவியத்திற்காக அவர்கள் எடுக்கும் சிரத்தைகள் என்னை மிகவும் கவர்ந்தன.

ஆனால் அப்பாவிற்கு என்னை மருத்துவத் துறையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற ஆசை இருந்தது. இருப்பினும் வீட்டை எதிர்த்து கும்பகோணம் கலைக் கல்லூரியில் ஓவியப் படிப்பைத் தொடர்ந்தேன். அப்பாவுக்கு எதிரான முடிவு, தொடர்ந்து வீட்டில் சலசலப்புகள் ஏற்படுத்தி வந்தன. அதனால் அதை பாதியில் விட்டு விட்டு சென்னைக்கு வந்தேன்.

நண்பர் ஒருவரின் ஒரு மருந்துக் கடையில் வேலை கிடைத்தது. எனக்கு முரண்பட்ட தொழிலாக இருந்த போதும் நான் அதை முழு அர்ப்பணிப்போடு செய்தேன். அதன் பின்னர் அங்கிருந்து மருந்துகளை மொத்தமாக விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலைக் கிடைத்தது. காலங்கள் சென்றன. ஆனால் என்னால் நான் நினைத்தைச் செய்யமுடியவில்லை.

உடனே கையில் இருந்தப் பணத்தை வைத்து மல் டிமீடியா சம்பந்தமான அனிமேஷன் படிப்புகளை பகுதி நேரமாக படிக்க ஆரம்பித்தேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கட் அவுட்டுக்கான பட வடிவமைப்பு, நிறுவனங்களுக்கான லோகோ வடிவமைப்பு உள்ளிட்டவற்றிலும் வேலை செய்தேன். இதனைத் தொடர்ந்து D - சினிமா என்ற இதழில் பணியாற்றி வந்த நண்பர் சீனிவாசனுடன் இணைந்து களத்தில் இறங்கி பணியாற்றினேன்.

தொடர் முயற்சியால் அடுத்தடுத்த பணிகள் எனக்கு வர ஆரம்பித்தன. உடனே மருத்துவ வேலையை உதறிவிட்டு நண்பர் ராஜேஷ் என்பவருடன் இணைந்து சென்னையில் ஒரு விளம்பர நிறுவனத்தை தொடங்கினேன். தொடர்ச்சியாக விளம்பரங்கள் வர ஆரம்பித்தன. அப்போது நாங்கள் எடுக்கும் விளம்பரப் புகைப்படங்களை எடுக்க சிலப் புகைப்படக்காரர்களை வைத்திருந்தோம். அவர்களுக்கும் எங்களுக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தன.

ஒரு முறை முருகன் இட்லி கடை விளம்பரத்திற்காக நாங்கள் தயாராகிக் கொண்டிருந்தோம். எல்லாம் தயாராகி விட்டது. ஆனால் புகைப்படக்காரர்கள் மட்டும் வரவில்லை. உடனே முருகன் இட்லி கடையின் உரிமையாளர் மனோகர் நீங்களே எடுத்து விடுங்கள் என்றார். அவரும் மிக உறுதியாகச் சொன்னதால் நான் முயற்சி செய்தேன். புகைப்படங்கள் நன்றாக வந்தன. அவரும் இதுவே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார். அப்படித்தான் எனது புகைப்பட பயணம் தொடர்ந்தது.

அதன் பின்னர் நிறைய விளம்பரங்கள், நிறைய கதாநாயகர்கள், கதாநாயகிகளுடன் பணி புரிந்தேன். இருப்பினும் எனக்கு தேங்கி நிற்பது போன்ற உணர்வே ஏற்பட்டது. அப்போதுதான் எனக்கு இந்த நிர்வாண படக் கலை பற்றி தெரிய ஆரம்பித்தது. அதனைப் பற்றி தெரிந்துகொள்ள, அந்த நுண்கலை மீதான ஆர்வம் அதிகரித்தது. தொடர்ந்து தேட ஆரம்பித்தேன்.

அந்தத் தேடலில் தான் ஒரு முறை முகநூல் பக்கத்தில் ப்ளே பாய் பத்திரிகையின் ஜார்மோ பொஜ்ஜானெமி அவர்களுக்கு எனது புகைப்படங்களை அனுப்பி கருத்துக் கேட்டேன். அதில் நிறைய திருத்தங்களைச் சொன்ன அவர் அவரது செமினார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அழைத்தார். அதற்காக அமெரிக்காச் சென்ற நான், மற்றவர்களுக்கு முன்னதாகவே செமினார் நடக்கும் இடத்திற்குச் சென்று அங்கு பணிபுரிந்தவர்களுடன் இணைந்து நானும் வேலை செய்ய ஆரம்பித்து விட்டேன் அவர்கள் யாரும் என்னை எதுவும் கேட்கவில்லை.

மாலையில் நான் ஜார்மோவுடன் பணி புரிய ஆசைப்படுவதை அவர்களுக்குத் தெரிவித்தேன். ஆனால் அது அப்போது நடக்க வில்லை. அதன் பின்னர் நானே இங்குள்ள மாடல்களை வைத்து புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன். அதன் பின்னர் மீண்டும் ப்ளேபாய் பத்திரிகை சம்பந்தமாக புகைப்படக்காரர்கள் மட்டும் பங்கேற்கும் ஒரு செமினார் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் எனக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட 300 புகைப்படக்காரர்களில் 3 புகைப்படகாரர்களை பத்திரிகைக்காக தேர்ந்தெடுத்தார்கள். அதில் நானும் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அங்கு ஆரம்பித்த பயணம் இன்று வரை தொடர்கிறது.

இந்தியாவில் ஏன் எல்லா புகைப்படக்காரர்களும் பெரிய அளவிலான வெற்றியைப் பெறுவதில்லை?

இந்தியாவில் உள்ள புகைப்படக்காரர்கள், புகைப்படத்துறையில் உள்ள வாய்ப்புகளை இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இன்னொன்று நாம் எடுக்கும் புகைப்படமானது யாருக்கானது என்பதை முடிவு செய்வதுடன், அந்தப் புகைப்படமானது விற்பவர் மற்றும் வாங்குபவர் ஆகிய இருவரின் மனநிலைக்கும் ஏற்ப அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம் நமது புகைப்படங்களை விற்கும் கலையை மிகத் தெளிவாக கற்றுக்கொள்ள வேண்டும். இங்கு அதுதான் மிகப்பெரிய சவால்.

இந்திய புகைப்படக்காரர்கள் பல கோணங்களில் பார்க்கும் திறமை கொண்டவர்கள். அதனால் திறமையில் தாழ்வு மனப்பான்மை வேண்டாம். முறையான முயற்சியும் சரியான தேடலும் மட்டுமே வேண்டும்.

உங்கள் குடும்பத்தின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?

எனது திருமணம் காதல் திருமணம். எனது மனைவியாக மட்டுமல்லாமல் நண்பனாகவும் இருப்பதால் என்னால் இதனை எந்தவித இடையூறுமின்றி செய்ய முடிகிறது.

நிறைய கதாநாயகர்கள் உடன் பணியாற்றி உள்ளீர்கள்? அவர்களுடனான மறக்க முடியாத அனுபவங்கள்?

நான் அப்படியான எந்தக் கோணத்திலும் நான் பார்ப்பதில்லை. காரணம் அங்கு நான் ஒரு புகைப்படக்காரனாக மட்டுமே இருக்கிறேன்.

நீங்கள் இந்த அளவு உயரத்திற்கு வந்ததற்கு உங்களிடம் இருக்கும் எந்த குணாதியங்கள் உதவியது என நினைக்கிறீர்கள்?

1. நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்ப்பது.

2. என்னிடம் வருபவர்களிடம் எனக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவாக கூறுவது மட்டுமல்லாமல் நான் சொன்னதை தவிர்த்து முறை தவறி வேறு ஏதேனும் செய்யாமல் இருப்பது.

3. எப்போதுமே தீவிரமானத் தேடலில் இருப்பது. மனிதர்களிடம் பழகும் முறை.

விஜய் சேதுபதி போட்டோஷீட் முடித்தவுடன் என்ன சொன்னார்?

நான் உங்களோட வேலை பார்க்க கொடுத்து வச்சுருக்கனும்னு சொன்னார்.

எதிர்கால திட்டங்கள் என்ன?

அடுத்ததாக வாழ்கை வரலாறுகளை டாக்குமென்ட்ரியாக மாற்றும் யோசனை இருக்கிறது.