சிறப்புக் களம்

ஒரே வாரத்தில் 90% உயர்ந்த கொரோனா தொற்று எண்ணிக்கை - இந்தியாவில் தொடங்கியதா நான்காம் அலை?

ஒரே வாரத்தில் 90% உயர்ந்த கொரோனா தொற்று எண்ணிக்கை - இந்தியாவில் தொடங்கியதா நான்காம் அலை?

நிவேதா ஜெகராஜா

இந்தியாவில் கொரோனா நான்காவது அலை தொடங்கப்பட இருப்பதாக சில தகவல்கள் பரவிவருகின்றன. இதன் முழு பின்னணி குறித்து ஆராய்ந்தோம். கடந்த சில வாரங்களில் வெளிவந்த கொரோனா தரவுகளின்படி, இந்தியாவில் 12 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கிறது.

கடந்த ஞாயிறிலிருந்து நேற்று வரைக்குட்பட்ட காலகட்டத்தில்மட்டும், இந்தியாவில் கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. அந்தவகையில் இந்தியாவில் ஏப்ரல் 18 முதல் 24 வரைக்குட்பட்ட காலத்தில் சுமார் 15,700 பேருக்கு புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 8,050 என்றே இருந்தது. கிட்டத்தட்ட 95% அதிகம் பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. கிட்டதட்ட 11 வாரம் பாதிப்பு குறைந்தே பதிவாகி வந்த நிலையில், தற்போதான் அது உயர்ந்துள்ளது.

பாதிப்பு அதிகம் உறுதிசெய்யப்படும் மாநிலங்களாக டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகியவை உள்ளன. இந்த வரிசையில் தற்போது கேரளா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாம் ஆகிய மாநிலங்களும் இணைந்துள்ளன. கடந்த ஒரு வாரத்தில் டெல்லியில் 6,326 புதிய தொற்றாளர்கள்; ஹரியானாவில் 2,296 புதிய தொற்றாளர்கள்; உ.பி.-ல் 1,278 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளன. இவையே நாட்டின் ஒட்டுமொத்த புதிய தொற்றாளர்களில் மூன்றில் இரண்டு பங்காக இருக்கிறது.

புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வந்தாலும்கூட, இதன் பின்னணி இன்னும் சரியாக அறியப்படவில்லை. இந்த உயர்வுக்கு ஒமைக்ரான் அல்லது ஒமைக்ரானின் புதிய பிற திரிபுகள் தான் காரணமா, அல்லது கொரோனா தடுப்பூசிகளின் ஆயுட்காலம் முடிவடைந்து மக்கள் மத்தியில் நோய் எதிர்ப்புதிறன் குறைந்துவிட்டதா என்பது பற்றிய முழு தரவுகள் இல்லை. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்தபோதிலும்கூட, தீவிர நோயாளிகள் எண்ணிக்கையோ கொரோனாவால் இறப்பவர்கள் எண்ணிக்கையோ உயரவில்லை என்பது இப்போதைக்கு ஆறுதலான விஷயமாக உள்ளது.

ஆகவே இது நான்காம் அலையாக இருக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. சில நிபுணர்கள், `இது நான்காம் அலையாக இருக்காது. ஏனெனில் இதற்கு முந்தைய அலைகள் ஒவ்வொன்றின் இறுதியிலும் குறிப்பிட்ட அந்த திரிபு கொரோனா வலுவிழந்ததே முடிவாக இருந்தது. அதன்பின் வலுவிழந்த அந்த திரிபு மீண்டும் பரவவில்லை. ஆக எல்லா அலை கொரோனாவும் ஆல்பா, டெல்டா, ஒமைக்ரான் என வெவ்வேறு திரிபுகளால்தான் ஏற்பட்டதே தவிர ஒரே திரிபால் மீண்டும் மீண்டும் எழவில்லை. இந்த அடிப்படையில் பார்த்தால், இப்போது வேறு புதிய திரிபு எதுவும் இந்தியாவில் இல்லை. ஒமைக்ரானின் நீட்சியே இருக்கிறது. அது நான்காம் அலைக்கு காரணமாக அமையாது’ என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் கொரோனாவை நாம் எப்போதும் கணிக்க முடியாது என்பதும் நிதர்சனம். ஆகவே சுயபாதுகாப்பு மூலம் நம்மை நாம் தற்காத்துக்கொள்வதே பல பிரச்னைகளுக்கு தீர்வு. மாஸ்க் அணிவோம்; சமூக இடைவெளி கடைப்பிடிப்போம்!