P Chidambaram PT
சிறப்புக் களம்

சிந்திக்கத் தூண்டும் சிந்தனைகள் 1 | 90 மணி நேர வேலை.. மட்டுமீறிய கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறதா?

“நாராயணமூர்த்தி சுப்பிரமணியத்தின் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், மட்டுமீறிய எதையும் அவர்கள் சொல்லிவிடவில்லை என்பது புரியும்” - ப.சிதம்பரம்

ப. சிதம்பரம்

தமிழில்: ராகவாச்சாரி

சிந்தித்தாக வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துவோரை மிகவும் மதிக்கிறேன். அவர்களுடைய கருத்துகளில் சிலவற்றை என்னால் ஏற்க முடியாவிட்டாலும் சில வேளைகளில் என்னுடைய வேலைகளை நிறுத்திக் கொண்டு சிந்திக்கவும், ஏற்கெனவே கொண்ட சிந்தனைகளில் மறு சிந்தனையை உருவாக்கவும் உதவுகிறார்களே என்று மகிழ்கிறேன்.

ப சிதம்பரம்

அப்படி சிந்திக்க வைக்கிறவர்கள் எண்ணிக்கையில் அதிகமில்லை என்றாலும் என். ஆர். நாராயணமூர்த்தி (என்ஆர்என்), எஸ்.என், சுப்பிரமணியன் (எஸ்என்எஸ்) போன்றவர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக நாம் நன்றி செலுத்த வேண்டும். மிகச் சிறந்த சிந்தனையாளர்களாக – செயல்வீரர்களாக உலகில் தங்களுக்கென்று தனியிடத்தை நீண்டகால தொடர் உழைப்பாலும் தனித்துவமான செயல்பாடுகளாலும் பெற்றவர்கள் அவர்கள். தங்களுடைய மனதில் பட்டதை நாகரிகமாகவும் வெளிப்படையாகவும் பேசும் தரமுள்ளவர்கள். என்ஆர்என், எஸ்என்எஸ் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டு, பலர் எதிர்வினையாற்றுவார்கள் – சிலர் சற்றே காட்டமாகவும் கூட பதில் அளிப்பார்கள்!

வேறுபட்ட உலக கண்ணோட்டம்

என்ஆர்என், எஸ்என்எஸ் இருவருமே குடும்ப சொத்தாக (பரம்பரையாக) பெருஞ்செல்வத்தைப் பெற்றவர்கள் அல்லர்; எந்த நிறுவனத்திலும் ஊழியர்களாகவோ, தொழிலகத்தில் உழைப்பாளர்களாகவோ வேலை செய்தவர்களும் அல்லர். நன்கு படித்த, சுயமாகத் தொழில்செய்து உலக அளவில் முக்கிய இடத்தைப் பெற்ற முதல் தலைமுறைத் தொழில் முனைவோர்கள்.

அந்த வகையில், அவர்களுடைய நிறுவனங்கள் ஈட்டும் லாபத்தின் ஒரு பகுதியைப் பங்காகப் பெறுகிறவர்கள். உலகைப் பற்றிய அவர்களுடைய கண்ணோட்டம் - பரம்பரையாக வரும் தொழிலதிபர்கள், மாத ஊதியத்துக்கு வேலை செய்யும் ஊழியர்கள் ஆகியோரிடமிருந்து வேறுபட்டது. இதனால்தான் ‘உழைப்பு – குடும்ப வாழ்க்கை’ ஆகியவற்றுக்கிடையிலான ‘சமநிலை’ எவ்விதம் இருக்க வேண்டும் என்பதில் அவர்களுடைய கருத்துகளும் வேறுபடுகின்றன.

பரம்பரை உரிமை காரணமாகத் தொழிலதிபர்களாவோர், உயர் பதவியை அடைய கடுமையாக உழைத்தாக வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கும் தெரியும், அந்தத் தொழில்துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும் - ஒரு நாள் இவர் அந் நிறுவனத்தின் தலைமைப் பதவியில் அமர்ந்துவிடுவார் என்று. பெரும்பாலான பரம்பரைத் தொழிலதிபர்கள் – சுமார் 12 தொழில் குடும்பங்கள் நீங்கலாக – நிறுவனத்துக்குக் கூடுதலாக மதிப்பையோ செல்வத்தையோ சேர்க்கவில்லை. அவர்களில் சிலர் துரதிருஷ்டவசமாக, நிறுவனத்தின் மீதான மதிப்பையும் செல்வத்தையும் கூட நாசப்படுத்திவிட்டார்கள். 

இதை அறிந்துகொள்ள விரும்பினால் 1991-க்கு முன்னால் இந்தியாவின் முதல் நூறு இடங்களில் இருந்த தொழிலதிபர்கள் பட்டியலையும் இன்றைக்குள்ள தொழிலதிபர்கள் பட்டியலையும் அருகருகில் வைத்து ஒப்பிட்டுப்பாருங்கள். முதல் தலைமுறையாக வெவ்வேறு துறைகளில் தொழில்செய்ய வந்தவர்கள்தான் செல்வத்தைக் குவித்துள்ளனர்.

பெரும்பாலான ஊழியர்கள் – தொழிலாளர்கள் தங்களுடைய வேலைக்கான ஊதியம் அல்லது வருமானம் கிடைப்பதிலேயே திருப்தி அடைந்து விடுகிறார்கள் (ஆனால் அவ்வப்போது அது உயர வேண்டும் என்றும் கவனம் செலுத்துகிறார்கள்); இப்போதுள்ள நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு உயர வேண்டுமென்ற தன்முனைப்பு பெரும்பாலும் அவர்களிடம் இருப்பதில்லை. அவ்வாறு அடுத்த நிலைக்கு உயர்வதற்கான திறன்களும் அவர்களுக்கு இருப்பதில்லை, அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இல்லை. ஒரு வாரத்தில் ஒருவர் அதிகபட்சம் எத்தனை மணிநேரம் உழைக்க வேண்டும் என்று என்ஆர்என், எஸ்என்எஸ் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தவர்களில் பெரும்பாலானவர்கள், பரம்பரையாக தொழிலதிபர் பதவியைப் பெற்றவர்களும் ஊழியர்களும்தான்.

அடிப்படையானது - இயல்பானதல்ல!

ஒரு வாரத்தில் ஒருவர் மொத்தம் 70 மணிநேரம் உழைக்க வேண்டும் என்றார் நாராயணமூர்த்தி; சுப்பிரமணியமோ வாரத்தில் 90 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று ‘சொன்னதாக’ பேச்சு. அவர்களுடைய கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், மட்டுமீறிய எதையும் அவர்கள் சொல்லிவிடவில்லை என்பது புரியும். “உலகிலேயே இந்தியாவில்தான் (தொழிலாளர்களின்) உற்பத்தித் திறன் மிகவும் குறைவு; இது என்னுடைய நாடு, நான் வாரந்தோறும் இனி 70 மணி நேரம் உழைப்பேன் என்று இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும்” என்றுதான் கூறினார் நாராயண மூர்த்தி. இது தொடர்பாக கடுமையான வாத-பிரதிவாதங்கள் சமூக ஊடகங்களில் உச்சம் பெற்ற நிலையிலும் அவர் தன்னுடைய கருத்திலிருந்து பின்வாங்கவில்லை.

நாராயண மூர்த்தி - சுப்ரமணியம்

சுப்பிரமணியனோ காணொலி ஒன்றில், “உங்களையெல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை செய்ய வைக்க என்னால் முடியவில்லையே என்பதற்காக வருந்துகிறேன், நீங்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலைக்கு வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன், நான் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை செய்கிறேன்” என்றார்.

தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அன்றாடம் 8 மணி நேரம்தான் வேலை என்று ஜெர்மனி நாட்டில் 1918-ல் முதலில் சட்டமாக இயற்றப்பட்டது. அன்றிலிருந்து ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் உழைப்பு, 8 மணி நேரம் பொழுதுபோக்கு, 8 மணி நேரம் ஓய்வு என்ற கருத்து உலகளாவியதாக ஏற்கப்பட்டது. ‘8-8-8’ என்பது அழகிய நேரப் பிரிவினையாகத் தோற்றமளிக்கிறது. அன்றாடம் 8 மணி நேரம் பொழுதுபோக்குக்கு செலவிடுவது எத்தனை பேர் என்று தெரியவில்லை.

8 - 8 - 8 Rule

ஆனால் இந்தப் பொழுதுபோக்கில்தான் உண்பது, குளிப்பது, உடல் பயிற்சி செய்வது, மனதுக்குப் பிடித்த விளையாட்டுகளில் ஈடுபடுவது, திரைப்படங்களைப் பார்ப்பது, செய்தித்தாள்கள் – புத்தகங்களை வாசிப்பு, கடைகளுக்குப் போய் தேவையானவற்றைக் கொள்முதல் செய்வது, நண்பர்கள் – உறவினர்களுடன் பேசுவது ஆகியவற்றுக்கான நேரம் அடங்கும் என்று புரிகிறது. அப்படிப் பார்த்தால் இந்த 8 மணி நேரம் பொழுது போக்குக்கு போதாது என்றுகூடத் தோன்றுகிறது

தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பெரும்பாலும் அன்றாடம் செய்த வேலைகளையே செய்கின்றனர். அதைவிட சிக்கலான அல்லது அல்லது அடுத்த கட்ட வேலைகளுக்குத் தேவைப்படும் புதிய செய்திறன்களைக் கற்று மேலே உயர்வது மிகச் சிலர் மட்டுமே. எழுத்து வேலையைப் பெரிதும் செய்யும் ஊழியர்களுக்கும் இதே ‘8-8-8’ வழிமுறையில் 8 மணி நேர வேலையைப் புகுத்தினர் நிர்வாகத்தார். ‘எழுத்துழைப்பு’ செய்யும் மேஜையடி ஊழியர்களும் அன்றாடம் செய்த வேலைகளையேதான் பெரும்பாலும் செய்கின்றனர்.

பெரும்பாலான தொழிலாளர்களும் எழுத்துழைப்பாளிகளும் ‘8-8-8’ மணி நேரப் பிரிவினையை ஏன் தொடர்ந்து கடைப்பிடிக்க விரும்புகிறார்கள் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. மதிப்பு மிக்க உற்பத்தி வேலைகளில் மனிதர்களுக்குப் பதிலாக நவீன இயந்திரங்கள், இயந்திர மனிதன், செயற்கை நுண்ணறிவு என்று உயர் தொழில்நுட்ப வேலைகளில் பெரிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இது நீடித்தால், மனித உழைப்புக்கான வேலை நேரம் மேலும் குறையக்கூட வாய்ப்பிருக்கிறது. புதிய வேலைகளில் தாங்களும் பங்குபெற அவர்கள் நவீனக் கருவிகளையும் உற்பத்தி முறைகளையும் தொழில்நுட்பங்களையும் கையாளும் கல்வித் தகுதி அல்லது பயிற்சியைப் பெறுவது கட்டாயமாகக் கூடும். நாராயண மூர்த்தியும் சுப்பிரமணியனும் கூறிய கருத்துகள் அத்தகைய உயர் தொழில்நுட்பத்தவர்களுக்காக அல்ல.

விவசாயிகள், மற்றவர்கள்

இதற்கு நேர் மாறாக, விவசாயிகள், சொந்தமாகத் தொழில் அல்லது சேவையில் ஈடுபடுவோர் எந்தக் காலத்திலும் ‘8-8-8’ நேரப் பகுப்பைப் பின்பற்றுவதில்லை. விவசாய வேலை என்பது 10 மணி நேரம் 12 மணி நேரம் என்றுகூட முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகும். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், கட்டிடக் கலை நிபுணர்கள், கணக்குத் தணிக்கையாளர்கள், அறிவியல் ஆய்வாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் - அத்துறையைச் சேர்ந்தவர்கள் என்று எவருமே அன்றாடம் 8 மணி நேரம் மட்டுமே வேலை என்பதைக் கடைப்பிடிப்பதில்லை.

சுயமாகத் தொழில் செய்யும் படித்தவர்களில் பலர், அன்றாடம் 12 மணி நேரம் வேலை செய்வதுடன் தேவை காரணமாக சனி – ஞாயிறு ஆகிய நாள்களில்கூட வேலையைத் தொடர்கின்றனர். இப்படி நேரம் - நாள் பார்க்காமல் வேலை செய்வோர்களில் மிகச் சிலர் கூட தங்களுடைய வேலைநேர நீட்சி குறித்து சலித்துக் கொண்டு நான் பார்த்ததில்லை. எனவே அன்றாடம் 8 மணி நேரம் மட்டும்தான் வேலை செய்ய வேண்டும் என்பது அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தும் பொதுவான விதியாக இல்லை.

சுயத்தை அறிய வாய்ப்பு

அன்றாடம் நீண்ட நேரம் உழைப்பதில் எனக்கு மகிழ்ச்சியே, ஆனால் என்னுடைய வேலை என்பது ஒரேயொரு வேலையல்ல; வழக்கறிஞராக சட்டம் தொடர்பான வேலைகளைச் செய்கிறேன், நாடாளுமன்ற உறுப்பினருக்குரிய கடமைகளை மேற்கொள்கிறேன், படிக்கிறேன், எழுதுகிறேன், கூட்டங்களில் பேசுகிறேன், மக்களுடைய குறைகளைக் கேட்கிறேன், கட்சித் தொண்டர்களுடன் கலந்துரையாடுகிறேன், சில சமூக நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறேன். நான் தூங்காத நேரம் தவிர அனைத்துமே எனக்கு வேலை நேரம்தான். வேலை செய்வதற்கும் குடும்பத்துடன் செலவிடுவதற்குமான நேரப் பங்கீட்டை ஒவ்வொரு தனி மனிதரும்தான் தீர்மானிக்க வேண்டும், எனக்கானதை நான் தீர்மானித்துவிட்டேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

ப சிதம்பரம்

நீண்ட காலம் கடுமையாக உழைத்து தங்களுடைய துறைகளில் உச்ச நிலையை அடைந்திருக்கும் நாராயணமூர்த்தி, சுப்பிரமணியன் இருவருமே, ‘இந்தியர்கள் அதிக நேரம் உழைக்க வேண்டும்’ என்று அறிவுரை வழங்க மிகவும் தகுதியுள்ளவர்கள். இந்தக் கருத்துகளுக்கு சமூக ஊடகங்களில் பதில் கருத்துகளைக் கூறியவர்கள் நினைப்பதைப்போல, இது உழைப்பைச் சுரண்டும் உத்தியோ அல்லது உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கான மறைமுக உத்தியோ அல்ல. 

அளவுகடந்த செல்வத்துக்கு சொந்தக்காரர்களாக இருந்தாலும் அவற்றால் தங்களுடைய தனித்தன்மைக்கு எந்தவித சேதமும் ஏற்பட்டுவிடாமல் எளிமையாகவும் கனிவாகவும் கண்ணியமாகவும் வாழும் பல பணக்காரர்களை அறிவேன்; குறைந்த அளவே உண்டு, மதுபானம் போன்றவற்றைத் தொடாமல், பகட்டாக ஆடை அணியாமல் - தேவைக்கு ஏற்ற கண்ணியமான ஆடைகளையே அணிந்து, துளியும் கர்வம் அகம்பாவம் இல்லாமல் பொது இடங்களுக்கும் சென்றுவருவோர் பலர் உள்ளனர்.

அப்படிப்பட்டவர்களான நாராயண மூர்த்தியும் சுப்பிரமணியனும், இந்திய இளைஞர்கள் லட்சிய வாழ்க்கை வாழ்ந்து நாட்டையும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் முன்னேற்ற முன்வர வேண்டும் என்ற நோக்கிலேயே உழைப்பு நேரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

நாராயண மூர்த்தி - சுப்ரமணியம்
இருவரும் சர்ச்சைக்கிடமான எதையும் கூறிவிடவில்லை என்பதே என்னுடைய கருத்து. அவர்கள் தெரிவித்த கருத்து, அவர்கள் எதிர்பார்க்காத வகையில் சிலரைச் சிந்திக்க வைத்து எதிர் வினையாற்ற வைத்திருக்கிறது.

உழைப்பு – குடும்ப வாழ்க்கை ஆகியவற்றுக்கிடையே சமநிலையை ஏற்படுத்த அவரவர் ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தில் தவறேதும் இல்லை.