சிறப்புக் களம்

நம்மை பொய் சொல்ல வைக்கின்றனவா சமூக ஊடகங்கள்? - ஆய்வும் சில புரிதல்களும்

webteam

சமூக ஊடகங்கள் வாயிலாக பரவும் பொய்ச்செய்திகள் பெரும் பிரச்னையாக இருக்கின்றன என்றால், சமூக ஊடகங்கள் நம்மை அதிகம் பொய் சொல்லவும் தூண்டுகின்றனவா எனும் கேள்வியும் முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் நம் காலத்து சமூக ஊடகம் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களை அளிப்பதாக அமைந்துள்ளன.

இந்த ஆய்வு பற்றி பார்ப்பதற்கு முன், முதலில் ஆய்வு முடிவுகளை சுருக்கமாக பார்க்கலாம். சமூக ஊடகங்கள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் வாயிலாக உரையாடும்போது பயனாளிகள் அதிகமாக பொய் சொல்வதாகவும், இ-மெயிலில் தொடர்புகொள்ளும்போது குறைவாக பொய் சொல்லப்படுவதாகவும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. நேரடி உரையாடலுக்கு நிகரான வீடியோ சந்திப்பிலும் பயனாளிகள் அதிகம் பொய் சொல்லும் வழக்கம் கொண்டிருக்கின்றனர்.

சமூக உரையாடலுக்கான தகவல் தொடர்பு வழிகளுக்கு ஏற்ப பொய் சொல்லும் அளவு மாறுபடுவதற்கான காரணமாக, குறிப்பிட்ட தகவல் தொடர்பு வழிகளின் அம்சங்கள் அமைவதாகவும் தெரியவந்துள்ளன.

சமூக ஊடக பயன்பாட்டின் தாக்கம் தொடர்பாக ஆய்வு செய்து வரும் அமெரிக்க பேராசிரியர் ஜெப் ஹான்காக் (Jeff Hancock) கடந்த 2004-ம் ஆண்டு இதுதொடர்பான முதல் ஆய்வை மேற்கொண்டார். அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக பேராசிரியரான ஹான்காக், தகவல் தொடர்பு துறையில் வல்லுனராக விளங்குவதோடு, சமூக ஊடக ஆய்வுக்கான மையத்தையும் (Stanford Social Media Lab) உருவாக்கியவர். சமூக ஊடகப் பயன்பாட்டின் உளவியல் மற்றும் சமூகவியல் அம்சங்களில் ஆர்வம் கொண்டவர்.

ஹான்காக் மற்றும் குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் 28 மாணவர்களிடம் நேரடிப் பேச்சு, தொலைபேசிப் பேச்சு, இணைய செய்தி பரிமாற்றம் மற்றும் இ-மெயில் உரையாடல்களின்போது எத்தனை முறை பொய் சொல்கின்றனர் எனும் தகவல் சேகரிக்கப்பட்டது.

இ-மெயில் உரையாடலில் பொய்கள் குறைவாக இருப்பதும், நேர் பேச்சு மற்றும் தொலைபேசி உரையாடலில் பொய்கள் அதிகம் இருப்பதும் இந்த ஆய்வு முடிவாக அமைந்தது. தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்பட்ட ஊடகத்தின் தன்மைக்கேற்ப பொய் சொல்லுதல் நிகழ்வதாகவும் ஆய்வில் தெரியவந்தது. அதாவது, தொலைபேசி அல்லது இணைய உரையாடல் போன்ற ஒரே நேரத்தில் பேசிக்கொள்ளும் தகவல் தொடர்பு முறையில் அதிக பொய்கள் சொல்லப்படுகின்றன என்றால், இ-மெயில் பரிமாற்றம் போன்ற வெவ்வேறு நேரத்தில் நிகழும் தகவல் பரிமாற்ற முறையில் குறைந்த பொய்கள் சொல்லப்படுகின்றன.

ஹான்காக் இந்த ஆய்வை மேற்கொண்ட காலகட்டத்தில் ஃபேஸ்புக் சேவை கல்லூரி மாணவர்கள் மட்டுமே பயன்படுத்தும் சேவையாக இருந்தது. மேலும், ஐஃபோனும் அறிமுகமாகியிருக்கவில்லை. சமூக ஊடக பயன்பாடு இந்தக் காலகட்டத்தில்தான் பிரபலமாகத் துவங்கியிருந்தது.

இந்தப் பின்னணியில், சமூக ஊடகம் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு பரவலாக அமைந்துள்ள சூழலில், தற்போது வேறு ஒரு குழுவினரால், இதே போன்ற ஆய்வு மேலும் விரிவான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 250 பயனாளிகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள் ஹான்காக் ஆய்வை முடிவை மெய்பிக்கும் வகையில் இருப்பதாக ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் டேவிட் மார்கோவிட்ஸ் எனும் ஆஸ்திரேலிய சமூக ஊடகத் துறை துணை பேராசிரியர் 'தி கான்வர்சேஷன்' இணைய இதழ் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

இடையே கோவிட்-19 பாதிப்பு காரணமாக இணையப் பயன்பாட்டில் பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கும் நிலையிலும், சமுக ஊடகம் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் உரையாடலில் பயனாளிகள் அதிகம் பொய் சொல்வது தெரியவந்துள்ளது. இ-மெயில் உரையாடலில் பொய்கள் குறைவாக உள்ளன.

ஒவ்வொரு விதமான ஊடகத்திலும் பொய் சொல்லும் விகிதம் வேறுபடுவதற்கான காரணங்களை அறிய மேலும் ஆழமான ஆய்வு தேவை என்றாலும், சமூக உரையாடலின்போது பொய் சொன்னாலும் அதன் விளைவுகளை மோசமாக்கும் தன்மை தொலைபேசி, வீடியோ போன்றவற்றில் குறைவாக இருப்பது ஒரு காரணமாக கருதப்படுகிறது. அதாவது, பொய் சொன்னது கண்டுகொள்ளப்படாமல் போகலாம் அல்லது அப்படியே தெரியவந்தாலும் சமாளித்துவிடலாம் என்பதாக இதைப் புரிந்துகொள்ளலாம்.

அதேநேரத்தில் இ-மெயில் தொடர்பை பெரும்பாலும் தொழில்முறையாக மற்றும் அலுவல் நோக்கில் பயன்படுத்துவதால் இதில் பொய் சொல்வதன் விளைவும் அதிகமாக இருக்கலாம் என்பதையும் புரிந்து கொள்ளலாம். தகவல் தொடர்பு சாதனத்தை பயன்படுத்தும் நோக்கத்தின் அடிப்படையிலும் இது அமையலாம் என்கின்றனர்.

புதிய ஆய்வின் அடிப்படையில் பேராசிரியர் மார்கோவிட்ஸ் முன்வைக்கும் கருத்துகள்தான் மிகவும் சுவாரஸ்யமானவையாக அமைகின்றன. சமூக உரையாடலுக்கு நாம் பயன்படுத்தும் ஊடகங்களின் தன்மைக்கு ஏற்ப பொய் சொல்வது வேறுபட்டாலும், ஒட்டுமொத்த நோக்கில் பார்க்கும்போது பொய் சொல்லும் விகிதத்தில் பெரிய அளவில் வேறுபாடு இல்லை என்பதே பேராசிரியர் மார்கோவிட்ஸ் சொல்லும் முதல் கருத்து.

அதாவது, சமூக ஊடகத்தில் அதிகம் பொய் சொல்லப்படுவதாக அமைந்தாலும், அதற்கும் மற்ற வழிகளில் சொல்லப்படும் பொய் விகிதத்திற்குமான வேறுபாடு அதிகம் இல்லை. இரண்டாவதாக ஒட்டு மொத்த நோக்கில் பொய் சொல்லும் விகிதம் மிக குறைவாகவே உள்ளது. பெரும்பாலானோர் நேர்மையாக இருப்பதை ஒப்புக்கொள்வது மற்றும் சமூகத்தில் பொய் சொல்பவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது ஆகியவற்றை இது உணர்த்துகிறது.

ஆக, தொழில்நுட்ப பயன்பாட்டால் உரையாடல்களின் தரம் குறைவதாக பரவலாக கருதப்படுவதற்கு மாறாக, உண்மை அமைந்திருப்பதாக பேராசியர் மார்கோவிட்ஸ் கருதுகிறார். மேலும், சமூக ஊடகங்கள் வாயிலாக அதிக பொய் சொல்வதாக கருத போதுமான ஆதாரம் இல்லை என்கிறார்.