இன்னும் ஒரு மாதத்தில் 2020ம் ஆண்டில் கால் பதிக்க இருக்கிறோம். நிலவின் தென் துருவத்துக்கு ஆளில்லா விண்கலம் பூமியில் இருந்து அனுப்பப்பட்டுகிறது. நிலவுக்கு ஆட்களை அனுப்பும் பணி தொடங்கி இருக்கிறது. அதில் பெண்களும் இடம் பெறுவார்கள் என்கிறது இஸ்ரோ. அரசியலில், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் சாதிக்கிறார்கள் பெண்கள். ஒவ்வொரு வருடமும் தவறாமல் பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கென பல திட்டங்களை அரசுகள் முன்னெடுக்கின்றன. ஆனாலும் இங்கு நடப்பது என்ன?
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல பெண் குழந்தைகளின் நிலை குறித்து அறிய கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் நடந்த இரு வேறு சம்பவங்களே போதுமானதாக இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து 17 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஆற்று மணலில் உயிருடன் புதைக்கப்பட்டது. பச்சிளம் குழந்தையை துணியைச் சுற்றி ஆற்று மணலில் தந்தையே புதைத்து கொடூரமாகக் கொன்ற இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு பச்சிளம் குழந்தையின் உயிரை பறிக்கும் அளவுக்கு தந்தையை தூண்டியது 4 ஏக்கர் நிலம்.
குழந்தையின் தந்தை வரதராஜன். அவரது தந்தை துரைக்கண்ணு. இவர்களுக்கு 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ஆண் குழந்தை பிறக்கும் வரை நிலத்தை கொடுக்க முடியாது என வரதராஜனை தந்தை துரைக்கண்ணு எச்சரித்துள்ளார். தன்னுடைய மனைவிக்கு பெண் குழந்தை பிறந்ததை அடுத்து எங்கு தன்னுடைய தந்தை சொத்தில் உரிமை கொடுக்க மாட்டார் என வரதராஜன் அச்சமடைந்துள்ளார். அதனையடுத்தே, தான் பெற்ற குழந்தையையே ஈவு இரக்கமின்றி மண்ணில் புதைத்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். 10 மாதங்கள் குழந்தையை தாங்கி வளர்த்து பெற்றெடுத்த தாய் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார். தான் ஏன் கொல்லப்பட்டோம் என தெரியாமலேயே ஒரு சிசு இறந்துள்ளது.
அதேபோல், மற்றொரு பதபதக்கும் சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ள்து. 3 பெண் குழந்தைகள் இருந்தும் ஆண் குழந்தை மீதுள்ள ஆசையால் தன் கணவருக்கு மனைவியே ஒரு சிறுமியை திருமணம் செய்துவைத்துள்ளார். கடலூரைச் சேர்ந்த அசோக்குமார்-செல்லக்கிளி தம்பதிக்கு 3ம் பெண் குழந்தைகள். ஆனால் அவர்களுக்கு ஆண் குழந்தை மீதே ஆசை.
இதனால் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை திருமணம் செய்துகொள்ள அசோக்குமார் வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிறுமி திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து செல்லக்கிளியே மாணவியை கடத்தி தன் கணவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். தற்போது தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். தனக்கு 3 பெண் குழந்தைகள் இருந்தும், மனைவியே ஆண் குழந்தைக்காக தன் கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த இந்த சம்பவத்தை எந்தக் கணக்கில் சேர்ப்பது?
இந்தியாவைப் பொறுத்தவரை தென் மாநிலங்கள் கல்வியிலும், விழிப்புணர்விலும் ஓங்கியே இருக்கின்றன. குறிப்பாக தமிழகம் முன்மாதிரியான மாநிலம் தான். ஆனால் இங்கேயே பெண் குழந்தைகள் புதைக்கப்படுவதும், ஆண் குழந்தைக்காக இரண்டாவது திருமணம் அரங்கேறுவதும் கொடுமையிலும் கொடுமை. தமிழகமே இந்த நிலை என்றால் வட மாநிலங்களில் என்ன நடந்து கொண்டிருக்கும் என்பதை யூகித்தாலே அச்சம் ஏற்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதும், பெண் குழந்தைகளுக்காக புதுப்புது திட்டங்களை அரசு கொண்டுவருவதுமே போதுமானதாக இருக்கிறதா? 2020ல் நின்று கொண்டிருக்கும் இவ்வேளையில் புதைக்கப்பட்ட பெண் குழந்தையிடம் நாம் என்ன சொல்ல போகிறோம்? வாழும் பூமி பூமித்தாய். நம் நாடே பாரதத்தாய். ஓடும் ஆறுகளும் பெண்பால் தான். வணங்கும் கடவுளிலும் பெண்ணுக்கு பஞ்சமில்லை. ஆனால் கருவில் பிழைத்தும், பூமியில் பிறந்து வளர்வதற்குமே பெண் குழந்தைகள் போராட வேண்டி இருக்கிறது. ஏனென்றே தெரியாமல் கருவாகவும், சிசுவாகவும் பெண்பால் இன்றும் இறந்து கொண்டிருப்பது கொடுமை. ஆபத்து. வெட்கக்கேடு.