சிறப்புக் களம்

நாடாளுமன்றத் தேர்தலும் மமதாவும் !!

நாடாளுமன்றத் தேர்தலும் மமதாவும் !!

webteam

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் கட்சிகள் அதற்கான பணிகளை தொடங்கி விட்டன. இப்போது வரை மூன்றாம் அணி என்ற பேச்சு , நனவாக வாய்ப்பில்லை. காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையில் இரு அணிகள் போட்டியிட வாய்ப்பு என்றே தெரிகிறது. பாஜகவை வீழ்த்தி வேறு ஒருவர் ஆட்சியில் அமர வேண்டும் என்ற எண்ணம் பல எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்துள்ளது. ஆட்சியில் இருப்பதால் பாஜக வெளிப்படையாக எதையும் சொல்லாமல் தனது கூட்டணி வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறது.

தேர்தல் ஜுரம் தொடங்கியுள்ள நிலையில் இரு தலைவர்கள் பற்றிய செய்தி அடிக்கடி வெளிவந்த வண்ணம் உள்ளது. ஒருவர் ராகுல் காந்தி, மற்றொருவர் மமதா பானர்ஜி. இருவருமே பாஜகவை எதிர்ப்பவர்கள், ஏற்கனவே கூட்டணியில் இருந்தவர்கள். மமதாவை பொருத்தவரை மூன்றாம் அணியை அமைப்பதில் மிகுந்த ஆர்வமாக இருந்தார். தன்னோடு ஒத்துப் போகும் நபர்கள் யார் என கண்டறிந்து அவர்களை சந்தித்தார். ஆனால் பெரிய அளவில் எடுபடவில்லை. பாஜகவும் ,காங்கிரசும் மூன்றாம் அணி ஒன்றை நம்பத் தயாராக இல்லை. அதனை கனவு அணி என கிண்டல் செய்தனர். ஏனெனில் இருவருக்கும் உள்ள மாநில பலம் அப்படி. 

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவ கௌடா, திமுக ஸ்டாலின் எனப் பலரையும் பல மாதங்கள் முன்னே தேர்தல் குறித்த பார்வையோடு சந்தித்தார் மமதா. ஆனால் மூன்றாம் அணியில் இவர்கள் இணைவார்களா என்ற சந்தேகம் இருக்கவே செய்தது. இந்நிலையில் கர்நாடகாவில் குமாரசாமி முதல்வரான பின்னர் , பாஜகவை வீழ்த்த வேண்டுமென்றால் காங்கிரசோடு இணைந்து செயல்படுவதே சரி என மூன்றாம் அணிக்கு உறைத்திருக்கிறது என எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் அதற்குப் பிறகான மமதாவின் சந்திப்புகள் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்பதை போலவும், மாநில கட்சியை சேர்ந்தவருக்கு பிரதமர் பதவி என்பதை போலவும் மாறியது. ஆனால் எதுவாகினும் தேர்தலுக்குப் பின்னரே என அவர் சமாளிக்கவும் செய்தார்.

மமதாவின் திடீர் டெல்லி பயணமும் தலைவர்களின் சந்திப்பும் தேர்தல் கூட்டணிக் குறித்த அவரது நடவடிக்கைகளை , அவர் மீதான கவனத்தை திருப்பியுள்ளது. காலையிலேயே பாஜக மூத்த தலைவர் அத்வானியுடன் சந்திப்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல்,சோனியா சந்திப்பு, மாநில கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளோடு சந்திப்பு, டெல்லி முதல்வர் கெஜிரிவாலுடன் சந்திப்பு என ஒரு ரவுண்ட் அடித்திருக்கிறார்.

அனைத்து இடங்களிலும் தேர்தல் மட்டுமே அவரது சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது. மாயவதியை இதற்கு முன் சந்தித்த போதும் அதைப்பற்றி இருவரும் உரையாடியதும் உண்டு. இப்படி தலைவர்களை சந்திக்கும் தருணங்களில் மமதா 2019 தேர்தலை வைத்தே காய நகர்த்துகிறார். ராகுலுக்கு கிடைக்கும் அதே கவனத்தை அவரும் பெறுகிறார். தேர்தல் வந்தால் காட்சிகள் மாறலாம். நாற்காலிகள் கிடைக்கலாம்.