தேசிய அரசியலில் 3ஆம் அணிக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக இந்தப் பேச்சை தொடங்கியவர் தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் தான். “தேசிய அரசியலில் மாற்றத்தை கொண்டுவர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்த 70 ஆண்டுகளில் 64 வருடங்கள் காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சியில் இருந்துள்ளது. 70 ஆண்டுகள் ஆகியும் மக்கள் பிரச்னையில் சிக்கி தவிக்கின்றனர். மக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லை. அதனால், பாஜக, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அது மூன்றாவது முன்னணியாக இருக்கலாம்” என்ற கருத்துடன் இதனை தொடங்கி வைத்தார்.
சந்திர சேகர் ராவ் சொல்லிய உடனேயே, காத்திருந்தவர் போல, மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி முதலில் வரவேற்றார். தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வரவேற்பை தெரிவித்தார். அதேபோல், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லீம் இயக்கத் தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியை சேர்ந்தவருமான ஹேமந்த் உள்ளிட்ட பலரும் உடனடியாக வரவேற்றனர். மம்தா வாழ்த்து தெரிவித்ததோடு மூன்றாவது அணிக்கான முயற்சியிலும் ஈடுபட்டார். திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு கூட தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசித்தார்.
பாஜகவுக்கு எதிரான வலுவான அணியை காங்கிரஸ் கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி குறித்த பேச்சு நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. உத்தரப்பிரதேசம், பீகார் இடைத்தேர்தல் முடிவுகள் வந்தவுடன் வெற்றி பெற்ற சமாஜ்வாடி மற்றும் ராஷ்டிர ஜனதா தளம் கட்சிகளுக்கு முதல் ஆளாக வாழ்த்துக்களை தெரிவித்தார். அதோடு, இது பாஜகவின் முடிவுக்கான தொடக்கம் இது என்றும் வெற்றியை வர்ணித்தார் மம்தா.
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் இரண்டு நாள் மாநாட்டில் சோனியா, ராகுலின் ஆவேசமான பேச்சு இனி மூன்றாவது அணி குறித்த பேச்சு இருக்காது என்பதை போல் தோன்றியது. அதில், ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்பது வெளிப்படையாக அறிவித்தார்கள். இதனால், ராகுல் தலைமையில் புதிய அணி உருவாகும் என்று பேசப்பட்டது.
ஆனால், புதிய அணியை உருவாக்கும் முயற்சியாக மம்தா பானர்ஜியை, கொல்கத்தாவில் சந்திர சேகர ராவ் சந்தித்து பேசினார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த தேசிய அளவில் 3ஆவது அணி அமைக்கும் முயற்சிகளில் எதிர்க்கட்சிகள் தீவிரம்காட்டி வருவதை இது காட்டுகிறது. சந்திப்புக்கு பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், நாட்டின் வளர்ச்சிக்கான தொடக்கமே இந்த சந்திப்பு என தெரிவித்தனர்.
மம்தா பானர்ஜி பேசுகையில், “இது ஒரு நல்ல தொடக்கமாகும். இரு மாநிலங்களின் வளர்ச்சி குறித்து ஆலோசித்தோம். நான் அரசியலை ஒரு தொடர்ச்சியான நல்ல செயல்பாடு என்று கருதுகிறேன். நாட்டின் வளர்ச்சிக்கான நோக்கம் குறித்து இருவரும் விவாதித்தோம்” என்றார். “நாட்டின் வளர்ச்சிக்காக இதுவரை ஆண்ட காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் எதுவும் செய்யவில்லை. தற்போது நாட்டின் வளர்ச்சிக்கு நல்ல தலைமை தேவைப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கான கொள்கை குறித்து இருவரும் விவாதித்தோம். இது மூன்றாவது அணி அல்ல. கூட்டாட்சிக்கான அணி” என்றார் சந்திரசேகர ராவ்.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையை சில கட்சிகள் ஏற்க மறுப்பதாக கூறப்படும் நிலையில், 3ஆவது அணிக்கு மம்தா பானர்ஜியை தமைமையேற்க முயற்சிகள் நடந்து வருவதாக தெரிகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை, மம்தா பானர்ஜி விரைவில் சந்திக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இதேபோல், முன்னாள் மத்திய அமைச்சரான சரத் பவாரும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இதில் ஒன்று மட்டும் நிச்சயம் நாட்டின் மிகப்பெரிய தேசிய கட்சியான காங்கிரஸ் மற்றொரு கட்சியின் தலைமையின் கீழ் வராது. மற்ற கட்சியில் இருந்து ஒருவரை பிரதமர் வேட்பாளரையும் ஆதரிக்கமாட்டார்கள். அப்படியிருக்கும் பட்சத்தில் காங்கிரஸ் உள்ளடக்கிய மம்தா தலைமையிலான அணி உருவாகாது. காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி மம்தா தலைமையில் அமைவதற்கான முயற்சிகள் நிச்சயம் நடக்கும். ஆனால், இந்த முயற்சிகளுக்கு பலன் கிட்டி இறுதியில் வலுவான அணி கிடைக்குமா? அல்லது அப்படி அமையும் மூன்றாவது அணியும் தமிழகத்தில் உருவான மக்கள் நலக் கூட்டணி போல் பாஜகவுக்கு சாதகமாக முடியுமா? என்பதை காலம்தான் சொல்லும்..