சிறப்புக் களம்

காவிரியில்‌ ஆலைக்கழிவு கலப்பு: புதிய தலைமுறை கள ஆய்வில்‌ அம்பலம்

காவிரியில்‌ ஆலைக்கழிவு கலப்பு: புதிய தலைமுறை கள ஆய்வில்‌ அம்பலம்

webteam

ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் காவிரி ஆற்றில் சாயம் மற்றும் தோல் தொழிற்சாலைக் கழிவுகளும், சாக்கடையும் ரகசியமாகக் கலக்கப்படுவது, புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட ஆவத்திபாளையம் பகுதி, காவிரி ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகளில் இருந்து ரகசியமாகத் திறந்துவிடப்படும் சாயக் கழிவுகள், காவிரி ஆற்றில் கலந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளும் காவிரி ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் 20 நாட்களாக விநியோகிக்கப்படும் குடிநீர், கடுமையான துர்நாற்றத்துடனும், அடர்ந்த நிறத்துடன், புழுக்களுடன் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து கண்டறிய, புதிய தலைமுறை நேரடி கள ஆய்வு மேற்கொண்டது. ஆவத்திபாளையம் பகுதியில் கள ஆய்வு நடத்திய போது, ஈஸ்வரன் கோயில் பின்பகுதியில் பாறைகளுக்கு இடையே ரகசியமாகச் சாயக்கழிவு நீர் வெளியேற்றப்பட்டு காவிரி ஆற்றில் கலக்கப்படுவதைப் பதிவு செய்ய முடிந்தது. இதேபோல் ஈரோடு மாவட்ட கரையோரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளும் காவிரியில் நேரடியாகக் கலந்திருப்பதை காணமுடிந்தது. பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவு நீரும் அதே பகுதியில் கால்வாய் மூலம் கொண்டு வரப்பட்டு காவிரியில் கலப்பதையும் நேரடியாக காணமுடிந்தது.