சிறப்புக் களம்

நியூஸ்ஃபீடை துடைத்தெறியும் 'ஆப்' - ஃபேஸ்புக்கை அலறவிட்டவரை நீக்கியதன் அதிர்ச்சி பின்புலம்!

webteam

பயனாளிகளின் ஃபேஸ்புக் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு செயலியை யாராவது உருவாக்கினால் ஃபேஸ்புக் என்ன செய்யும் தெரியுமா? - அந்த செயலியை தடை செய்வதோடு, அதை உருவாக்கிய நபரையும் ஃபேஸ்புக் தனது மேடையில் இருந்து நிரந்தரமாக தடை செய்துவிடும் என்பது லூயிஸ் பார்க்லேவின் அனுபவத்தில் இருந்து தெரிகிறது.

பார்க்லேவின் அனுபவத்தை தெரிந்துகொண்டால் உங்களுக்கு கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கும். ஏனெனில், பயனாளிகளுக்கு ஃபேஸ்புக் அனுபவம் போதையாக மாறிவிடாமல் இருக்கும் நோக்கத்துடன் அவர் உருவாக்கிய சேவையை ஃபேஸ்புக் நீக்கியதோடு, ஃபேஸ்புக்கில் தடையும் விதித்துள்ளது. அதுமட்டும் அல்ல, எதிர்காலத்தில் ஃபேஸ்புக் சார்ந்த சேவையை உருவாக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளது.

ஃபேஸ்புக்கிடம் இருந்து இத்தனை கடுமையான நடவடிக்கையை பெறும் அளவுக்கு பார்க்லே அப்படி என்ன சேவையை உருவாக்கினார் என்பதை அறிந்து கொள்வதில் இப்போது உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கும்.

'அன்ஃபாலோ எவ்ரிதிங்' (Unfollow Everything) என்பதுதான் பார்க்லே உருவாக்கிய சேவை. ஃபேஸ்புக் பயனாளிகளின் பக்கத்தில் தோன்றும் நியூஸ்ஃபீட் (Newsfeed) அம்சத்தையே முற்றிலுமாக நீக்கிவிட வழி செய்யும் வகையில் இந்த சேவையை பார்க்லே உருவாக்கியிருந்தார்.

நியூஸ்ஃபீட் இல்லாத ஃபேஸ்புக் பக்கம் எப்படி இருக்கும் தெரியுமா? - நிச்சயம் இந்த அனுபவத்தை நீங்கள் பெறுவதற்கான சாத்தியமே இல்லை. ஏனெனில், உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் நியூஸ்ஃபீட் அம்சம் நீங்காமல் இடம் பெற்றிருக்கிறது. அதை நீங்கள் விரும்பினாலும் நீக்க முடியாது.

ஃபேஸ்புக் பக்கத்தில் நீங்கள் தவறாமல் பார்க்கும் அம்சம் என்றாலும், நியூஸ்ஃபீட் பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வது அவசியம். செய்தி ஊட்டம் என புரிந்து கொள்ளக்கூடிய நியூஸ்ஃபீட் என்றால், இணையதளத்தில் புதிதாக வெளியாகும் அல்லது பதிப்பிக்கப்படும் தகவல் என புரிந்துகொள்ளலாம்.

ஆனால், இணைய உலகில் இப்போது நியூஸ்ஃபீட் என்றால் பெரும்பாலும் ஃபேஸ்புக் தளத்தில் தகவல்கள் தோன்றும் வசதி என்றே புரிந்து கொள்ளப்படுகிறது. அதாவது, ஃபேஸ்புக் பயனாளிகளின் நட்பு வலைப்பின்னலில் வெளியாகும் புதிய தகவல்கள், பயனர்களின் செயல்பாடுகள், பகிர்வுகள், விருப்பங்கள் ஆகியவை தோன்றும் இடமாக நியூஸ்ஃபீட் அமைகிறது. வலைப்பின்னல் தகவல்கள் மட்டும் அல்ல, விளம்பரங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு தகவல்களும் இதில் தோன்றுகின்றன.

ஃபேஸ்புக்கிற்கு முன்னும் பின்னரும் எத்தனையோ சமூக வலைதளங்கள் தோன்றினாலும், ஃபேஸ்புக்கே ஆகச் சிறந்த சமூக வலைப்பின்னல் தளம் போல ஆதிக்கம் செலுத்துவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இந்த நியூஸ்ஃபீட் அம்சம் அமைகிறது.

ஃபேஸ்புக்கின் வெற்றிக்கு காரணம் மட்டும் அல்ல, பயனாளிகள் ஃபேஸ்புக்கை மிகவும் விரும்புவதற்கான காரணங்களில் ஒன்றாகவும் நியூஸ்ஃபீட் அமைகிறது. ஏனெனில் பயனாளிகள் எப்போது ஃபேஸ்புக் பக்கத்தை திறந்தாலும், நியூஸ்ஃபீட் பகுதியில் புதிய தகவல்கள் தோன்றிக்கொண்டே இருக்கும்.

நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் பகிரும் புதிய தகவல்கள் தவிர, அவர்களின் ஃபேஸ்புக் செயல்பாடுகள் தொடர்பான அப்டேட்களையும் இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம். நண்பர்கள் லைக் செய்தவை முதல் அவர்கள் பிறந்த நாள் முன்னறிவிப்புகள் வரை எண்ணற்ற தகவல்களை நியூஸ்ஃபீடில் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

ஆக, பயனாளிகள் ஃபேஸ்புக்கில் நுழையும் போதெல்லாம் நியூஸ்ஃபீடில் புதியவற்றை எதிர்பார்க்கின்றனர் அல்லது இந்த தகவல்களை எதிர்பார்த்தே ஃபேஸ்புக்கில் நுழைகின்றனர். ஃபேஸ்புக்கில் பெரும்பாலனோர் தங்களை மறந்து அதிக நேரத்தை செலவிடுவதற்கான காரணமும் இதுதான்.

நியூஸ்ஃபீட் அடிப்படையில் நல்ல வசதிதான். ஆனால் அதில் எங்கு வில்லங்கம் இருக்கிறகு என்றால், ஃபேஸ்புக் ஒருவரின் நட்பு வட்டத்தில் இருந்து இயற்கையான முறையில் தகவல்களை தோன்றச்செய்யாமல், எந்த வகையான தகவல்கள் தோன்ற வேண்டும் என அல்காரிதம் மூலம் தீர்மானிக்கிறது.

எந்த தகவல்கள் அதிக விருப்பங்களை பெறுகிறது, அதிக ஆர்வத்தையும், தொடர்பையும் உண்டாக்குகிறது என்பது போன்ற பல்வேறு அம்சங்களை இந்த அல்காரிதம் கணக்கில் கொண்டு செயல்படுவதாக ஃபேஸ்புக் தெரிவிக்கிறது.

ஆனால், விஷயம் என்னவென்றால், உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் என்ன தோன்ற வேண்டும் மற்றும் எவை தோன்றக்கூடாது என்பதை ஃபேஸ்புக் தீர்மானிக்கிறது என்பதுதான். இதில் பயனாளிகளுக்கு எந்த பங்கும் இல்லை என்பதோடு, ஃபேஸ்புக் வர்த்தக நோக்கில் தனக்கு சாதகமான விஷயங்களையே இவ்வாறு முன்னிறுத்துவதாக சொல்லப்படுகிறது.

இப்படி ஃபேஸ்புக் நியூஸ்ஃபீடில் முன்னிறுத்தும் விஷயங்கள் (திணிக்கும் என்றும் சொல்லலாம்), அதற்கு விளம்பர வருவாயை அள்ளித்தரும் வகையில் அமைவதோடு, பயனாளிகளின் ஆர்வம் மற்றும் எதிர்வினையை தூண்டும் வகையில் இருப்பதாக தீவிர விமர்சனம் இருக்கிறது.

மேலும், பயனாளிகள் ஃபேஸ்புக்கில் அதிக நேரத்தை செலவிடு தூண்டும் வகையில் இந்த அம்சம் அமைவதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

அண்மையில் ஃபேஸ்புக்கிற்கு எதிராக விசில்ப்ளோயர் பிரான்சிஸ் ஹாகன் கூறிய முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று, ஃபேஸ்புக்கில் பயனாளிகள் செலவிடும் நேரம் அதற்கு வருமானமாக அமைகிறது மற்றும் இந்த நேரத்தை அதிகமாக்குவதிலேயே ஃபேஸ்புக் குறியாக இருக்கிறது என்பதுதான்.

பெரும்பாலும் ஃபேஸ்புக் எதிர்வினையை அதிகரிக்கச் செய்யும் வகையிலான உள்ளடக்கத்தையே முன்னிறுத்துகிறது என்பதும், இத்தகைய உள்ளடக்கம் பயனாளிகள் மற்றும் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும் ஃபேஸ்புக் அதுபற்றி கவலைப்படுவதில்லை என்பதும் அவரது முக்கியக் குற்றச்சாட்டு. | விரிவாக வாசிக்க > 'வெறுப்பரசியலால் லாபம்'- விசில்ப்ளோயர் பெண் அம்பலப்படுத்திய ஃபேஸ்புக்கின் 'உள்ளடி' வேலைகள் |

நியூஸ்ஃபீட் வசதி இவ்வாறு பயனாளிகள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காமல், அதை முற்றிலுமாக நீக்கிவிட வழிசெய்யும் ஆப் (App) ஒன்றைத்தான் பிரவுசர் நீட்டிப்பு வசதியாக பார்க்லே உருவாக்கியிருந்தார்.

ஃபேஸ்புக் முன்னிறுத்தும் வசதி தவிர, பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது, பயனாளிகள் இவற்றை எல்லாம் தேடிக் கண்டுபிடித்து பயன்படுத்த வேண்டும். இத்தகைய வசதிகளில் ஒன்றுதான், குறிப்பிட்ட நண்பர் அல்லது பயனாளியை அன்ஃபாலோ செய்யும் வசதி. ஒருவரை அன்ஃபாலோ செய்தால் அவரது தகவல்கள் நியூஸ்ஃபீட் பகுதியில் தோன்றாது.

பார்க்லே இந்த வசதியை பயன்படுத்தி தனது நண்பர்களை எல்லாம் அன்ஃபாலோ செய்து பார்த்தார். இந்த அனுபவம் அவருக்கு புதுவிதமாக இருந்தது. நியூஸ்ஃபீடில் எதுவும் தோன்றாதது கவனச் சிதறலை குறைத்தது என்றாலும், அவர் எதையும் இழக்கவில்லை. ஏனெனில் நண்பர்கள் நடவடிக்கை பற்றி அறிய வேண்டும் என்றால், அவர்களின் ஃபேஸ்புக் பக்கத்திற்கு சென்றால், அவரால் தகவல்களை தெரிந்துகொள்ள முடியும்.

ஆக, நியூஸ்ஃபீடில் இருந்து விடுபட்டது அவருக்கு பெரும் சுதந்திரமாக இருந்தது. ஃபேஸ்புக் பயன்பாடு அவரது கட்டுப்பாட்டில் இருப்பதை உணர முடிந்தது. தேவையில்லாமல் ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ளடக்கத்தைக் காண ஸ்கிரோல் செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை.

இந்த வசதி அருமையானது என்பதை உணர்ந்தவர், ஒவ்வொரு முறை அன்ஃபாலோ செய்வதையும் கையால் செய்ய வேண்டியிருப்பதை சிக்கலாக உணர்ந்தார். இந்த வசதியை தானியங்கிமயமாக்கினால் நன்றாக இருக்குமே என நினைத்தார். இந்த வசதி மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நினைத்தவர், இதற்காக 'அன்ஃபாலோ எவ்ரிதிங்' சேவையை உருவாக்கி பிரவுசர் நீட்டிப்பு வசதியாக அறிமுகம் செய்தார்.

2020-ம் ஆண்டு ஜூலை மாதம் குரோம் பிரவுசருக்கான சேவையாக இது அறிமுகமானது. பயனாளிகள் பலரும் இந்த சேவையை விரும்பினர். இதன்மூலம் ஃபேஸ்புக் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட முடிந்ததாகவும் பலர் தெரிவித்தனர்.

பயனாளிகள் மத்தியில் இந்த வசதி பிரபலமானதோடு, சுவிட்சர்லாந்தில் உள்ள பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த வசதியை பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ளவும் விருப்பம் தெரிவித்தனர்.

இதற்கு சில மாதங்கள் கழித்து ஃபேஸ்புக் பார்க்லேவுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. இந்த சேவையை உடனே நீக்க வேண்டும் என கூறியதோடு, ஃபேஸ்புக்கில் இருந்தும், அவருக்கு தடை விதிப்பதாக தெரிவித்தது. ஃபேஸ்புக் சார்ந்த சேவைகளை இனி உருவாக்க கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தது.

ஃபேஸ்புக்கின் தாக்கம் தொடர்பாக அண்மையில் வெடித்திருக்கும் சர்ச்சை பின்னணியில் இந்த சம்பவம் பற்றி பார்க்லே விரிவாக கட்டுரை ஒன்றை ஸ்லேட் இணைய இதழில் எழுதியிருக்கிறார்.

ஃபேஸ்புக் தன் மீதான விமர்சனங்களை பெரும்பாலும் நிராகரித்து, அலட்சியம் செய்தாலும் அதன் மேடையில் உள்ள மோகத்தை கட்டுப்படுத்தும் விதமான செயல்களுக்கு மட்டும் உடனடியாக எதிர்வினை ஆற்றுவதை இதில் இருந்து புரிந்துகொள்ளலாம்.

அதுமட்டும் அல்ல, நியூஸ்ஃபீட் வசதியின் தாக்கத்தையும், அதை ஏன் ஃபேஸ்புக் தொடர்ந்து முன்னிறுத்துகிறது என்பதையும் இதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.

ஆக, பயனாளிகளே நினைத்தாலும் ஃபேஸ்புக் நியூஸ்ஃபீட் ஆதிக்கத்தில் இருந்து விடுபட முடியாது.

பார்க்லே எழுதிய கட்டுரை இங்கே > Facebook Banned Me for Life Because I Help People Use It Less