சிறப்புக் களம்

'ஆப்' இன்றி அமையா உலகு 24: மனித உரிமை மீறல்களை ஆதாரப்படுத்த உதவும் செயலி!

EllusamyKarthik

உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் அரங்கேறுகிற போர் குற்றங்கள் மற்றும் பிற பிரச்சனைக்குரிய பகுதிகளில் நடைபெறும் அட்டூழியங்களை ஆவணப்படுத்தவும், ஆதாரப்படுத்தவும் EyeWitness to Atrocities என்ற மொபைல் போன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை சர்வதேச சட்ட வல்லுனர்கள் சங்கம் (International Bar Association), LexisNexis என்ற தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே போர் மூண்டுள்ள நிலையில் இச்செயலி குறித்து இந்த வார அத்தியாயத்தில் பார்க்கலாம். 

EyeWitness to Atrocities செயலியின் நோக்கம்!

குற்றம் செய்தவர்கள் தப்பவே கூடாது என்ற நோக்கத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி போட்டோ, வீடியோ மற்றும் ஆடியோ முதலியவற்றை செல்போனில் பதிவு செய்து அதனை சட்ட வல்லுனர்களிடம் சமர்பிக்கும் வசதி இதில் உள்ளது. 

மனித உரிமை மீறல்கள் குறித்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை சட்டரீதியாக செல்லுபடியானதாக பதிவு செய்யும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல இந்த அப்ளிகேஷன் மூலம் எடுக்கப்படும் போட்டோ, வீடியோ மற்றும் ஆடியோ முதலியவை செல்போனில் மட்டுமே பதிவாகமால், eyeWitness அமைப்பின் வெர்ச்சுவல் எவிடன்ஸ் லாக்கரில் தானாகவே பதிவாகிவிடும். அதன் மூலம் அந்த வீடியோ அல்லது போட்டோ எந்த நேரத்தில், எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பதை GPS டிராக்கிங் சிஸ்டத்தின் உதவியுடன் இணையத்தின் மூலம் அந்த வீடியோவின் நம்பகத் தன்மையை அறியலாம்.

அதோடு வீடியோ எடுக்கப்பட்ட இடத்திற்கு அருகே உள்ள செல்போன் டவர்கள், வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள பிக்சல் வேல்யூ மற்றும் வீடியோக்கள் நேரடியாக eyeWitness அமைப்பின் வெர்ச்சுவல் எவிடன்ஸ் லாக்கரில் தானாக பதிவாகியுள்ளதா என்பதை eyeWitness அமைப்பின் சட்ட வல்லுனர்கள் குழு ஆராய்ந்த பின்னரே அந்த வீடியோக்கள் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். வீடியோ எடுப்பதற்கு முன்னதாகவும் அந்த அமைப்பிடம் விவரத்தை சொல்லிவிட்டு இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தலாம். ஏனெனில் அதன் பிறகு அந்த வீடியோவை எங்கு சமர்ப்பிக்க வேண்டும். அதை ஆதாரமாக வைத்து குற்றம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் உதவுகிறது இந்த செயலி.  

அதன் பின்னர் அந்த வீடியோ காட்சிகளை மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் முதலியவற்றை விசாரித்து வரும் நெதர்லாந்து நாட்டின் Hague -ல் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

22MB அளவுள்ள இந்த அப்ளிகேஷனை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து ஸ்மார்ட் போன்களில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இணையத்தின் உதவியுடன் செயல்படும் இந்த அப்ளிகேஷனை ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் அதற்கு மேலுள்ள வெர்ஷன்களில் பயன்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அப்ளிகேஷன் மூலம் இதற்கு முன்னதாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விவரங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது.