சிறப்புக் களம்

'நெஜமாத்தான் சொல்றியா?’.. பிரபாகர்களும், ஆனந்திகளும் வாழும் காதல் உலகம்.. ’கற்றது தமிழ் ‘!

கலிலுல்லா

(கற்றது தமிழ் படத்தில் பிரபாகர் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவாவும், ஆனந்தி கதாபாத்திரத்தில் அஞ்சலியும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது)

பிரபாகரர்களின் உலகம் ஆனந்திக்களால் நிறைந்தது; ஆனந்திக்களின் கைகளில் சமைத்த ஒரு கோப்பை சுடு தண்ணீரின் அன்புச்சூட்டால் நிரம்பியது. ஆனந்திக்கள் ஜீவிக்கும் அந்த உலகில் எல்லாமுமே ஆனந்திக்களின் முகங்கள் தான்; எங்கும் அவர்களின் பிரதிகள் தான்.ஆனந்திக்கள் பிரபாகரர்களுக்காகவே பிறப்பெடுத்தவர்கள். தமிழ்சினிமாவின் ஆகச்சிறந்த காதலர்களான பிரபாகர் ஆனந்தியை காதலர் தினத்தை முன்னிட்டு கொண்டாட மறப்பது பெரும்பாவம். 'கற்றது தமிழ்' கோலிவுட்டின் divine piece of love ஏன்?. பார்ப்போம்.

''இந்த உலக்கத்துல உன் பேர விட ஒரு பொருத்தமான பேர் கிடைக்கவா போகுது ஆனந்தி?. 'your a Divine piece of god!''என ஆனந்தியை பிரபாகர் அறிமுகப்படுத்தும்போது கிபோர்டின் கீ'க்கள் சில்லிடுகின்றன. அதுவரை வெறுமையாக சென்றுகொண்டிருக்கும் காட்சிகளுக்கு யுவன் உயிரூட்ட தொடங்குகிறார். படத்தில் காதல் சொட்டு கலக்க தொடங்குகிறது.

படம் முழுக்க ஆனந்தி என்ற ஒற்றை வார்த்தை பிரயோகத்திற்காகவே தனி இசையை மீட்டிருப்பார் யுவன். பிராபகருக்கு ஆனந்தியை நினைவுப்படுத்த ஓராயிரம் காரணங்கள் இருக்கின்றன. அந்த ஆயிரம் காரணங்களுக்கு இணையானது 'நெஜமாத்தான் சொல்றியா?' என்ற ஒற்றை வார்த்தை. எல்லாருக்கும் அப்படித்தானே! விரும்பும் ஒருவரின் சிறு வார்த்தை, ஏன் சைகை கூட நினைவுகளின் மீட்சியாகத்தானே இருக்கிறது. பிரபாகரனுக்கும் அப்படித்தான். இறுதிவரை அவனுக்கு 'நெஜமாத்தான் சொல்றியா?" என்ற வார்த்தை ஆனந்தியின் நினைவை மீட்டிக்கொண்டேயிருக்கிறது.

பிரபாகரின் சொல்லும் பொய்களை பொய் என கூறி ஆனந்தி கடந்திருக்கலாம். இயக்குநர் ராம் கூட அதை எழுதியிருக்கலாம். ஆனால், காதலில் அப்படி நிகழ்வதில்லையே! காதல் பொய்களை விரும்பி ஏற்றுக்கொள்ளகூடியது தானே. அப்படித்தான் ஆனந்தியும் ஏற்றுகொள்கிறாள். 'பொய் சொல்றியா?' என நேரடியாக கேட்கும் வார்த்தைகளில் என்ன இருக்கப்போகிறது. பொய் என தெரிந்தும், 'நெஜமாத்தான் சொல்றியா?' எனக்கேட்கும் வார்த்தைகளில் தானே அன்பின் ஆகிறுதியே அடங்கி கிடக்கிறது! குறிப்பாக நெஜமாத்தான் சொல்றியா என குட்டி ஆனந்தி அப்பாவியாக கேட்கும் அந்த காட்சியின் முடிவில் வரும் Wide angle ஷாட், யுவனின் இசை, காற்றில் அலைபாயும் காதல், இயக்குநர் ராமின் வசனம் என அந்த காட்சியை ஒரு கவிதையைப்போல இயக்கியிருப்பார் ராம்.

நெஜமாத்தான் சொல்றியா என்பது வெறும் வார்த்தையல்ல. அது ஆற்றுப்படுத்தலுக்கான மருந்து. தந்தை இறப்பின் துக்கத்தால் ஆனந்தி அழுது கொண்டிருப்பாள். தேற்றுவதற்கு அவள் அருகில் அமர்ந்திருக்கும் பிரபாகர், 'என்ன இருந்தாலும் கோழி இறக்க பிடிச்சு கொடுத்த அதே குட்டி ஆனந்திதானே எனக்கு' என கூறும்போது, தன் அத்தனை கவலைகளையும், அழுகையையும் முழுங்கிவிட்டு, 'நெஜமாத்தான் சொல்றியா' என சொல்லி முடித்ததும், 'இன்னும் காதல் அடர்த்தி பத்தல என ராம் சொல்லிருப்பார் போல'. உடனே யுவன், 'நான் பாத்துக்குறேன்' என 'உனக்காகத்தானே இந்த உயிருள்ளது..உன் துயரம் சாய என் தோளுள்ளது' என அந்த மென்சோகத்தை தனது ஈரம்கலந்த குரலில் வருடிக்கொடுப்பார். ஒட்டுமொத்த காட்சியிலும் காதல் வழியும்!

சின்ன சின்ன விஷயங்களை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் ராம். காதலை அழகாக்குவதே சின்ன சின்ன விஷயங்கள் தானே. மொத்த படத்திலும் ஆனந்தியும், பிரபாகரும் நேரில் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் குறைவு தான். ஆனால், நினைவுகளால் இணையும் ப்ரேம்கள் அதிகம். நினைவுகளில் வாழ்வது தானே காதலின் பெரும்பகுதி. அப்படியான ஆனந்தியின் நினைவை மீட்க பிரபாகருக்கு இருக்கும் மற்றொரு மீட்பர் 'கோகுல் சாண்டால்' பவுடர்.

தான் ஹாஸ்டலுக்கு செல்லும் காட்சிகளில் தன் பை முழுவதும் கோகுல் சாண்டலை நிரப்புவார். கூடவே அவரது காதலின் வாசமும் அதில் கலந்திருக்கும். வாசனைகள் வழி வாழும் காதல் அற்புதமானது. ஏதோ முச்சந்தியின் மூலையில் எப்போதாவது பிரபாகர் நடந்து செல்லும்போது கூட கோகுல்சாண்டாலின் வாசம் ஆனந்தியின் நினைவை மீட்காமலிருக்காது தானே?

'எல்லாம் கிடைக்கும். ஒரு டம்ளர் சுடு தண்ணி கிடைக்குமா?' என்கிறான் பிரபாகர். வெறும் சுடு தண்ணி தானே என கடந்துவிட்டால் நீங்கள் இன்னும் காதலிக்க தொடங்கவில்லை என அர்த்தம். சுடு தண்ணீர் என்பது வெறும் சுடுதண்ணீரல்ல, ஆதிக்காதலின் நீரூற்று. ஆனந்தி சமைத்த அருஞ்சுவை நீர். இவையாவும் பிரபாகரனால் மட்டுமே அறிய முடியும்!.

அதனால் தான் 'எப்போ நாக்கு பொத்துபோனாலும் அவளையே நினைப்பேன். burn your lips and remeber the people who remembers you!' என்கிறார். இப்படியாக 'நெஜமாத்தான் சொல்றியா' வார்த்தையும், கோகுல்சாண்டாலும், சுடு தண்ணியும் என பிரபஞ்சத்தின் அனைத்து இடங்களிலும் விரவிக்கிடக்கிறது ஆன்ந்தியின் நினைவு.

பிராபகர் மட்டும் தான் ஆனந்தியை உருகி உருகி காதலித்தானா என்றால் இல்லவே இல்லை. ஆனந்தியின் காதல் முட்டையை அடைகாக்கும் குருவியைப்போல. மனதுக்குள் பொத்தி பொத்தி பாதுகாத்துக்கொண்டிருப்பாள். ஆனந்தியை பிரபாகரனோடு ஒரே தட்டில் வைத்து சமன் செய்துவிட முடியாது. பிரபாகர்களுக்கான சுதந்திரம் ஆனந்திக்களுக்கு வாய்ப்பதில்லை என்பதை கவனிக்க வேண்டியிருக்கிறது. பிரபாகரை வழியனுப்ப செல்லவேண்டியிருந்தாலும் கூட அம்மாவிடம் ஆயிரம் பர்மிஷன்கள் ஆனந்திகளுக்கு தேவை.

எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். 'பறவையே எங்கு இருக்கிறாய்' பாடலுக்கு முன், பின்னான காட்சிகளை மட்டும் பேச அத்தனை விஷயங்கள் உண்டு. ஆயிரம் முறை சலிக்காமல் பார்க்கும் காட்சி அது. தொலைத்த ஒரு பொருளை தேடுவதும், தேடிய பொருள் மீண்டும் கிடைபதும் வாழ்வின் கண்ணாமூச்சி விளையாட்டு. அப்படியான விளையாட்டில் ஆனந்தியை, தேடி அலையும்போது, நம்மையும் கைபிடித்து பிரபாகருடன் அழைத்துச் செல்கிறார் இளையராஜா . அந்த காட்சிகளில் பிரபாகரை மறந்து அந்த இடத்தில் நம்மையே பொருத்திக்கொண்டு பறப்பதான உணர்வை மேஸ்ட்ரோவைத்தவிர யாராலும் தந்துவிட முடியாது.

எல்லா நேரமும் காதல் இனிக்காது தானே! அறியாத நிலப்பரப்பில், தெரியாத மக்களிடம் பழகி காடு, மலைகளைக்கடந்து வந்தவனிடம், 'இங்க எப்படி வந்த' என்று கேட்கிறார் ஆனந்தி. எல்லாவற்றையும் விவரித்தவரிடம், 'நெஜமாத்தான் சொல்றியா' என ஆனந்தி சொல்லும்போது 2 இரவு தூங்காமல் தவித்த பிரபாகரின் அத்தனை களைப்பும் ஒரு வார்த்தையில் கரைந்துவிடுகிறது. காதலின் மாயம் அது!

குறிப்பாக ஆனந்திக்கு துணி எடுக்கும் காட்சிகள் அழகியல். 'எனக்கு தான் ப்ளூ பிடிக்காதுன்னு தெரியும்ல' என தன் விருப்பத்தில் தொடங்கி
'இத வாங்கிகொடுக்குறதா இருந்தா வாங்கி கொடு இல்லன்னா வேணா' என காதலால் அதட்டி காட்சி அழகுபடுத்தியிருப்பார் ஆனந்தி என்னும் அஞ்சலி. காதலனின் பொருளாதார நிலைமையை கருத்தில்கொண்டு பிடித்த சுடிதாரை தவிர்க்கும் காட்சிகள் ஏழைக்காதலின் ஐகான். ராமின் டையலாக்குகளும், பின்னணியில் ஒலிக்கும் ஜீவாவின் குரலும் படத்துக்கு மிகப்பெரிய பலம். டையலாக்குகளுக்கு பின்னால் ஒலிக்கும் யுவனின் இசை, காதலின் காருண்யத்தை நமக்கு கடத்தும்.

'கடைசிவரைக்கும் நீ என் கூட வரவா போற' என அதுவரை மனதுக்குள் இருக்கும் வார்த்தைகளை உதிர்த்து, இறுக்கத்தை பிரபாகருக்கு கடத்துவார் ஆனந்தி. ஒரு நிமிடம் ஜனிக்கும் மௌனத்தை தனது கிட்டாரால் ஈடுகட்டி, பிராபகரின் எண்ண ஓட்டத்தை அறிய வைப்பார் யுவன். அடுத்த காட்சியில் வண்டியில் ஏறி பயணிக்கும்போது தனக்கு பிடிக்காததை பிடித்தாக ஆனந்தி சொல்வது அழகு. பொய் என்பது பிரபாகரும் தெரியும். அந்த பொய்களுக்கு நடுவே காதல் ஊசாலடும்போது, இளையராஜா அங்கே தாலாட்டு பாடிக்கொண்டிருப்பார்.

இப்படியாக படம் முழுவதும் காதலால் தழும்பிக்கொண்டிருக்கும். ஆனால் படம் முழுக்க காதலியை நேசிக்கும் ஒருவன், திடீரென அந்த காதலியை தான் நினைத்துக்கூட பார்க்காத ஒரு இடத்தில் காணும்போது, அவனின் மனநிலை என்னவாக இருக்கும்? வாழ்வின் எல்லாமுமாக இருந்த ஒரு உயிர் விபச்சார விடுதியிலிருக்கும்போது, 'என்கூட வந்திடு' என பிரபாகர் அழைப்பது காதலின் ஆழத்திலிருந்து பிறக்கும் வார்த்தை. அந்த புள்ளியில் வழக்கமான டெம்ப்ளேட்டுகளிலிருந்து படம் வேறுபடுகிறது. அதுவரை கூறியதைக்காட்டிலும், அப்போது கூறும், 'நெஜமாத்தான் சொல்றியா?" என வார்த்தை உண்மையில் கணமானது.

எப்படியிருந்தாலும், ஆனந்தியை பிரபாகரன் எங்கே கண்டெடுத்தாலும், அவனுக்கு அவள் எப்போதும் கோழி இறகை கொடுத்த குட்டி ஆனந்தி தானே!

-கலிலுல்லா