சிறப்புக் களம்

பசி vs உணவின்மீதான ஈர்ப்பு - வித்தியாசத்தை தெரிந்துகொள்ளுங்கள்

பசி vs உணவின்மீதான ஈர்ப்பு - வித்தியாசத்தை தெரிந்துகொள்ளுங்கள்

Sinekadhara

என்றைக்காவது குறிப்பிட்ட ஓர் உணவின்மீது அதீத பசியை உணர்ந்திருக்கிறீர்களா? அதாவது அழகிய ப்ரவுன் நிற சாக்லெட் கேக்கை பார்க்கும்போது அல்லது சீஸ் மூடிய பீட்சாவை பார்க்கும்போது அடிவயிற்றிலிருந்து பசி சுண்டி இழுக்கிறதா? பலநேரங்களில் இதுபோன்ற உணவுகளைப் பார்க்கும்போது, சாப்பிட்ட 2 - 3 மணி நேரத்திற்குள்ளேயே ஏன் பசிக்கிறது என்பதே நமக்கு புரிவதில்லை. இதுபோன்ற பசி ஏற்பட்டால் அது உண்மையிலேயே பசியில்லை, நாம் ஒரு உணவை காணும்போது அதனால் ஈர்க்கப்படுகிறோம் என்றே அர்த்தம் என்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நாமி அகர்வால். பசிக்கும், உணவின்மீதான ஈர்ப்பிற்கும் உள்ள தொடர்பை விளக்குகிறார் அவர்.

பசி vs ஈர்ப்பு - வித்தியாசத்தை அறிந்துகொள்ளுங்கள்!

தலைசுற்றல், வயிற்றிலிருந்து சத்தம் மற்றும் உணவு பற்றிய யோசனை உண்டானால் பசிக்கிறது என்று அர்த்தம். அதே ஒரு குறிப்பிட்ட உணவை சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற எண்ணம் குறிப்பாக இனிப்பு அல்லது வாசனைமிக்க ஒரு உணவு குறித்த அதீத எண்ணம் பசியினால் வராது. அது அந்த உணவின்மீதான ஈர்ப்பு.

பசி என்பது அனைவரும் அனுபவிக்கக்கூடிய ஒரு அத்தியாவசிய தேவை. ஆனால் உணவின் மீதான ஈர்ப்பு என்பது அத்தியாவசியமானது அல்ல. அடிக்கடி இந்த உணர்வு ஏற்பட்டால் நீங்கள் உடல் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்யவேண்டியது அவசியம்.

ஈர்ப்பு உணர்வானது சாக்லெட் மற்றும் இனிப்புகள் போன்ற பிடித்த உணவுகளை முதலில் சாப்பிடத் தூண்டும். ஆனால் சாப்பிட்டபிறகு, ஏன் இந்த உணவை சாப்பிட்டோம் என்று அதுகுறித்த ஒரு குற்ற உணர்வை உருவாக்கிவிடும். இந்த உணர்வானது கர்ப்பிணிகள் மற்றும் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அதிகமாக இருக்கும். குறிப்பாக பிடித்த உணவை தவிர்த்து டயட்டை பின்பற்றுகிறவர்களுக்கு இந்த உணர்வு மேலோங்கும் என்கிறார் நாமி.

இதே சில மணிநேரங்கள் சாப்பிடாமல் பசி உணர்வு மேலோங்கும்போது வயிற்றில் சத்தம், தலைவலி மற்றும் உடல் பலவீனம் போன்ற அறிகுறிகள் தென்படும். அப்போது ஆரோக்கியமான உணவு சாப்பிட்டாலே திருப்தி ஏற்படும் என்கிறார் அவர். பசிக்கும்போது கண்முன்னால் இருக்கும் கீரை வகைகளானாலும் சரி, பருப்பு வகைகளானாலும் சரி அதை சாப்பிடத்தோன்றும்.

எனவே உங்களுக்கு ஏற்படுவது பசி உணர்வா அல்லது அடிக்கடி ஒரு குறிப்பிட்ட உணவின்மீதான ஈர்ப்பா என்பதை கவனித்து உடல் ஆரோக்கியத்தை ஆராய்ந்து அதை மேம்படுத்துவது நல்லது என்கிறார் நாமி.