சிறப்புக் களம்

ஊட்டச்சத்து வாரம்: சூரிய மறைவுக்குப்பின் பழங்கள் சாப்பிடலமா? - நிபுணர் விளக்கம்

Sinekadhara

வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது பழங்கள். ஒரு நாளைக்கு இரண்டுமுறை பழங்களை எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் பழங்கள் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. ஆனால் உணவை எப்படி குறிப்பிட்ட நேரத்தில் உண்கிறோமோ அதேபோல்தான் பழங்களையும் குறிப்பிட்ட நேரத்தில் உண்டால் அதிலுள்ள அனைத்துவிதமான ஊட்டச்சத்துகளும் உடலில் சேரும் என்கிறது ஆயுர்வேதம். குறிப்பாக சூரியன் மறைவதற்கு முன்பு பழங்களை உண்பதே சிறந்தது எனக் கூறுகிறது.

ஏன் சூரியன் மறைவுக்கு முன்பு பழங்களை சாப்பிடவேண்டும்?

பழங்களை ஏன் சூரிய மறைவுக்கு முன்பு சாப்பிடவேண்டும் என்பது குறித்து வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கிய பயிற்சியாளர் லூக் கோடின்ஹோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ஆயுர்வேதத்தில், இந்தியாவின் மருத்துவ முறைப்படி, மாலை நேரங்களில் பழங்கள் சாப்பிடுவது தூக்கத்துக்கு இடையூறு விளைவிக்கும் எனவும், செரிமான பிரச்னையை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

பெரும்பாலான பழங்கள் விரைவில் செரிக்கக்கூடிய மெலிதான கார்போஹைட்ரேட்டுகளால் ஆனவை. உடனடியாக உடலுக்கு ஆற்றல் தரக்கூடியவைதான் என்றாலும் ரத்த சர்க்கரை அளவை விரைவில் அதிகரிக்கும். இரவு நேரத்தில் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவை மேலும் அதிகரிக்கும் என்கிறார் லூக். மேலும் சூரிய மறைவுக்குப் பிறகு உடலின் மெட்டபாலிசம் குறையத்தொடங்கும். இதனால் செரிமானமும் குறைந்துவிடும் என்கிறார். எனவே உட்கொள்ளும் கார்போஹைட்ரேட்டுகளின் அளவைக் குறைத்துக்கொள்வது சிறந்தது என்கிறார்.

பழங்கள் சாப்பிட உகந்த நேரம் எது?

லூக்கின் அறிவுரைப்படி, காலை நேரத்தில் பழங்களை உண்பதே சிறந்தது. குறிப்பாக காலை உணவுக்கு முன்போ அல்லது உணவிற்குப் பிறகோ பழங்கள் சாப்பிடுவது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் என்கிறார். உணவிற்கு பிறகு பழங்கள் சாப்பிட்டால் உணவுக்கும் பழங்கள் சாப்பிடுவதற்கும் நடுவே குறைந்தது 3.5 முதல் 4 மணிநேரமாவது இடைவெளி இருப்பது அவசியம் என்கிறார். உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும்கூட பழங்களை எடுத்துக்கொள்வது சிறந்தது என்கிறார். கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சூரிய மறைவுக்கு முன்பு எடுத்துக்கொள்வது சிறந்தது என்கிறார்.

பழங்களை தனியாகத்தான் சாப்பிடவேண்டும்

பழங்களைத் தனியாகத்தான் சாப்பிடவேண்டும். குறிப்பாக பால் பொருட்களுடனோ அல்லது காய்கறிகளுடனோ சேர்த்து சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிடும்போது சரியான செரிமானமின்மை மற்றும் ஊட்டச்சத்துக்களை உள்ளிழுத்தல் போன்றவற்றை தடுத்து உடலில் நச்சுகளை உருவாக்கும். மேலும் இதயம் மற்றும் உடலில் பல பிரச்னைகள் வரும் வாய்ப்புகளையும் அதிகரிக்கும் என எச்சரிக்கிறார் லூக்.