சிறப்புக் களம்

வரி வசூலில் முன்னாள் ராணுவ வீரர்கள் முறைகேடு.. புதிய தலைமுறை களஆய்வில் அதிர்ச்சி!

webteam

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளில் வசூலிக்கப்படும் பசுமை நுழைவு வரி மற்றும் சுங்க நுழைவு வரியில் முறைகேடு செய்திருப்பது புதிய தலைமுறையின் கள ஆய்வில் ஆதாரங்களோடு தெரிய வந்திருக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பர்லியாறு, கக்கநல்லா சோதனை சாவடிகளில் பசுமை நுழைவு வரியும், குஞ்சபன்னை, நாடுகாணி, சோலாடி, பாட்டவயல், தாளூர் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் சுங்கநுழைவு வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியை மேற்கொள்ளும் முன்னாள் ராணுவத்தினர், பசுமை நுழைவு வரியை மாவட்ட ஆட்சியர் அலுவலக வங்கிக் கணக்கிலும், சுங்க நுழைவு வரியை அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக  அலுவலர்களிடமும் ஒப்படைத்து வருகின்றனர்.

இந்நிலையில், வரி வசூல் செய்த தொகையை அரசுக்கு செலுத்துவதில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் புதியதலைமுறை சென்ற ஜூம் மாதம் 18 ஆம் தேதி களஆய்வு மேற்கொண்டது. அதில், கக்கநல்லா உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் அரசின் முத்திரை இல்லாமல் போலியாக ரசீது கொடுத்து நாள்தோறும் பல ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது அம்பலமானது. இதுகுறித்து புதியதலைமுறை மாவட்ட ஆட்சியரிடம் கேட்டதற்கு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார்.

இதுதொடர்பாக புதியதலைமுறையில் செய்தி ஒளிபரப்பப்பட்ட மறு தினமே சோதனை சாவடிகளில் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. முறைகேடுகள் தொடர்வதாக புகார் எழுந்ததால், கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் புதியதலைமுறை களமிறங்கியது. அதில், குறிப்பிட்ட 3 தினங்களில் நாடுகாணி சோதனை சாவடியில் வரி வசூல் செய்யப்பட்ட தொகையில், பல ஆயிரம் ரூபாய் அரசுக்கு செலுத்தாமல் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, சென்ற ஜனவரி மாதம் 12ஆம் தேதி நாடுகாணி சோதனை சாவடியில் மொத்தமாக 28 ஆயிரத்து 80 ரூபாய் வசூல் செய்யப்பட்ட நிலையில், மொத்த தொகையும் அரசுக்கு செலுத்தப்படவில்லை எனப் புகார் எழுந்தது.

இதையடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்கப்பட்டது. அதில், அன்றைய தினம் 13 ஆயிரத்து 30 ரூபாய் மட்டுமே செலுத்தி மோசடியில் ஈடுபட்டிருந்தது அம்பலமானது. இதுபோல ஜனவரி மாதம் 25ஆம் தேதி நாடுகாணி சோதனை சாவடியில் இரண்டு இயந்திரங்களைக் கொண்டு வரி வசூல் செய்த நிலையில், முதல் இயந்திரம் மூலம் வசூலான 30 ஆயிரத்து 312 ரூபாயை மட்டுமே அரசிற்கு செலுத்தியுள்ளனர்.

2ஆவது இயந்திரத்தில் வசூலான ஆயிரத்து 100 ரூபாயை மோசடி செய்தது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அனைத்து சோதனைச் சாவடிகளிலும் TICKET VENDING MACHINE வழங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை வரி வசூல் செய்யப்பட்ட விவரங்களை ஆய்வு செய்தால் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருப்பதை கண்டுபிடிக்க முடியும் எனக் கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.இதுக்குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் இடம் கேட்ட போது, கிடைக்க பெற்ற ஆதாரங்களை கொண்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்துள்ளார்.