சிறப்புக் களம்

“முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கைகள் அம்மா அரசுபோல் உள்ளது பாராட்டுக்குரியது”- ஆ.பி.உதயகுமார்

sharpana

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று  கடந்த ஏப்ரல்-7 ந்தேதி மு.க. ஸ்டாலின்  முதல்வர் பதவியேற்று சரியாக ஒரு மாதமாகிவிட்டது. 30 நாட்கள் அவரது செயல்பாடுகள் குறித்து, பல்வேறு அரசியல் தலைவர்கள் விர்சித்துக்கொண்டிருக்க, முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி உதயகுமாரிடம் பேசினோம்,

அவர் அளித்த பேட்டியில்,

”முதல் நூறு நாளில் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இல்லாமல், எல்லோரும் முதல்வர் ஸ்டாலினை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். முதல் நூறு நாட்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது. அதனால், பெரிய விமர்சனங்கள் இல்லை..எங்கள் ஆட்சியில் அதிகபட்சமே 6 ஆயிரம்வரைதான் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையாக இருந்தது. ஆனால், இந்த ஆட்சியில் 36 ஆயிரம்மேல் கூடிவிட்டது. இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இருந்தாலும் தமிழக  முதல்வர் மக்களின் உயிரைக் காப்பாற்ற போராடுகிறார்.

புதிய ஆட்சிக்கு எடுத்தவுடனேயே கொரோனா தொற்று என்பது மிகப்பெரிய சவால். கொரோனா மிகப்பெரிய பேரிடர். அதனை சவாலாக அம்மா அரசு மாதிரியே முன்மாதிரியாக எடுத்தது பாராட்டுக்குரியது. வரவேற்கத்தக்கது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் ஒத்துழைப்பும் தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளும்  மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. அதேசமயம், ஆட்சி மாற்றம் வருவதற்குமுன்பு மு.க ஸ்டாலின் ஊரடங்கு கிடையாது என்றார். விமர்சனம் செய்தார். தற்போது, ஊரடங்கு அமல்படுத்தியதால்தான் தொற்று கட்டுக்குள் வந்திருக்கிறது என்று கூறியியிருப்பது அம்மா அரசை பின்பற்றுகிறார் என்பதைக் காட்டுகிறது”.

- வினி சர்பனா