சிறப்புக் களம்

110 வது பிறந்த நாள் கொண்டாடிய எவர் கிரீன் தாத்தா !

110 வது பிறந்த நாள் கொண்டாடிய எவர் கிரீன் தாத்தா !

webteam

தள்ளாடும் வயதாக இருந்தாலும் மது உள்ளிட்ட எந்தவித தீய பழக்கங்களும் இல்லாததால் திடகார்த்தமாகவும் உற்சாகமாகவும் வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக கூறுகிறார் எவர் கிரீன் தாத்தா பெருமாள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடுபட்டியில் 1910 ஆம் ஆண்டு பிறந்தவர் பெருமாள். 5ஆம் வகுப்பு வரை படித்த இவர் குடும்பத்தில் நிலவிய வறுமையின்  காரணமாக சிறு வயதிலேயே வேலை செய்வதற்காக மதுரை வந்துள்ளார். பின்னர் தனியார் பஞ்சாலையில் வேலை செய்துள்ளார். தனது ஓய்வுக்கு பிறகு தங்களது பூர்வீக 4 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்வது,  ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பது உள்ளிட்ட பணிகளில் அதிக ஆர்வம் கொண்டு அதன் மூலம் குடும்பம் நடத்தி வந்துள்ளார். 

1941 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவருக்கு 7 மகன்களும் 4 மகள்கள் என 11 பிள்ளைகள்  உள்ளனர். சிறு வயது முதல் வறுமையின் பிடியில் சிக்கிய இவர் வேலை, வீடு, நேரத்திற்கு உணவு என பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்ததோடு அப்போதையை உணவு முறைகளான கேழ்வரகு, கம்பு, திணை உள்ளிட்ட தானிய வகை உணவுகளை விரும்பி உண்ணுவதை சிறு வயது முதலே வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். இதனால் இதுவரை உடல் நலத்தில் எந்தவித  பாதிப்பும் ஏற்பட்டதில்லை என பெருமையுடன் தெரிவிக்கிறார். 110  ஆண்டு காலத்தில் ஒருநாள் கூட பெருமாள்  உடல் நலக்குறைவினால் மருத்துவமனைக்கு சென்றதில்லை எனவும் தெரிகிறது. 

மேலும் தான் மது அருந்துவது  புகைப்பிடிப்பது, புகையிலை பயன்படுத்துவது என எந்தவித தீய பழக்கத்திற்கும் உட்படாமல் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்ததாகவும் தான் மேற்கொண்ட பழக்க வழக்கங்களை தனது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்து அவர்களையும் நோய் நொடி இல்லாமல் வளர்த்து வந்ததாகவும் கூறும் இவர் உடல் ஆரோக்கியத்துடன் வாழ உரிய நேரத்தில் அளவான உணவு, நடைப்பயிற்சி, தீய பழக்கங்களை தவிர்ப்பது உள்ளிட்டவற்றை கடைபிடித்தால் தன்னைப் போல் 100 ஆண்டுகளை கடந்தும் யாருடைய தயவுமின்றி தன்னம்பிக்கையுடன் வாழலாம் எனவும் நம்பிக்கையும் தெரிவிக்கிறார்.

110 வயதிலும் தனது முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை கற்றுக்கொடுத்த ஆசிரியரின் பெயரை நினைவுடன் வரிசைபடுத்தி கூறுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

தன்னம்பிக்கையான வாழ்கையை துவங்கிய இவர் தற்பொழுது வரை தனது தேவைக்காக மற்றவர்களை எந்தவித தொந்தரவும் செய்வதில்லை. தனது ஆடைகளை தானே சலவை செய்வது, வீட்டை சுத்தம் செய்து கொள்வது, எந்தவித துணையும் இல்லாமல் தாமாகவே நடைப்பயிற்சி செல்வது என தன்னம்பிக்கையின் கதாநாயகனாக திகழ்கிறார். 110 வயதை கடந்த பெருமாளை அனைவரும் எவர்கிரீன் தாத்தா என பிரியமாக அழைக்கின்றனர்.

ஒவ்வொரு பிறந்த நாளையும் தாத்தாவின் பிள்ளைகள், பேரன் பேத்திகள் என குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் முறையான அழைப்பு விடுத்து தவறாமல் கேக் வெட்டி கொண்டாடுவார்கள். பிறந்த நாள் விழாவை குடும்ப விழாவாக கொண்டாடுவதால் குடும்ப ஒற்றுமையும் மேலோங்குவதாகவும் கூறுகின்றனர் உறவினர்கள். 

எந்த ஊர்களில் பணி செய்தாலும் தாத்தாவின் பிறந்த நாளை கொண்டாட பிறந்த நாள் அன்று  தவறாமல் கலந்து கொண்டு தாத்தாவிடம் ஆசி பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் அவரது தன்னம்பிக்கை, பாசம், நினைவாற்றல், எளிமை என அனைத்தும் தங்களுக்கு ஒரு முன்னுதாரணம் எனவும் பெருமிதம் கொள்கின்றனர் தாத்தாவின் பேரன் பேத்திகள். அவரது நடைமுறைகளை கடைபிடித்து நல்வழியில் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்ற நம்பிக்கையுடன் அவரின் ஆசியை பெறுவதாகவும் கூறுகின்றனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு பெருமாள் தாத்தாவின் மனைவி ராஜம்மாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது சொந்த உழைப்பில் கட்டப்பட்ட மண் சுவரால் ஆன ஓட்டு வீட்டில் எளிமையான வாழ்க்கை முறையில் வாழ்ந்து வருகிறார் பெருமாள். இவரின் பிள்ளைகள் சற்று வசதி வாய்ப்புடன் இருந்தாலும் அவர்களுடன் வாழ மறுக்கும் அவர் தான் கட்டிய வீட்டில் தனது சுய முயற்சியுடன் வாழ வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டு வாழ்ந்து வருகிறார்.

தனது பிள்ளைகள், பேரன் பேத்திகள், கொள்ளுப்பேரன் பேத்திகள் என குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய பெருமாள் தாத்தாவிற்கு மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரும் வரத்துவங்கியது.

 எப்பொழுதும் வேலை வேலை என ஓடிக்கொண்டு உரிய நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ளாமலும் பாஸ்ட் புட் உணவுகளை உட்கொண்டும் சிறு வயதிலேயே அளவில்லாத நோய்களுக்கு சொந்தக்காரர்கள் என எண்ணிக்கை அதிகரிக்கும் இந்த காலத்திலும் அளவான உணவை உண்டு ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்து 110 வயதை கடந்து வரும் மதுரையின் எவர்கிரீன் தாத்தா மதுரைக்கு மட்டுமல்ல உலகத்திற்கே ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்கு முன்னுாதரணமாக திகழ்கிறார்.