சிறப்புக் களம்

இதற்கெல்லாம் கொலையா? அதிகரிக்கும் எமோஷனல் க்ரைம்

இதற்கெல்லாம் கொலையா? அதிகரிக்கும் எமோஷனல் க்ரைம்

webteam

சரியாக சொல்லணும்னா பிப்ரவரி 10-ம் தேதி ஜீவன் மற்றும் அவரது நண்பர் சேர்ந்து சமைச்சு சாப்பிடலானு முடிவெடுக்குறாங்க. வர்ற பில்லுல ஆளுக்கு பாதி கொடுக்கணும்னு பேச்சு. சரின்னு கடைக்கு போயிட்டு சிக்கன், அரிசி, மசாலா எல்லாம் வாங்கிட்டு வர்றாங்க. சமைக்க ஆரம்பிக்கிறப்போ மொத்தம் எவ்வளவு வந்திருக்கு, யாரு எவ்வளோ தரணும்னு பாக்குறாங்க. அப்போ ஜீவன், கூடுதலா 10 ரூபாய் தரணும்னு கணக்கு வருது. ஆனால் ஜீவன் தர முடியாதுனு மறுக்கிறார். அப்போ நீ சாப்பிட கூடாதுனு நண்பர் சொல்றார். ஜீவனோ மறுப்பு தெரிவிக்க, வாக்குவாதம் சண்டையா மாறுது. ஜீவன் கொல்லப்படுகிறார். 

பீகார்ல ஒரே கம்பெனில கூலி வேலை செய்யிற நௌசத், ஷார்னு இரண்டு நண்பர்களுக்கு உரிய சில்லறை இல்லனு மொத்தமா பணம் கொடுத்து பிரிச்சிக்கோங்கனு சொல்றாரு முதலாளி. நண்பர்கள்தானே பிரிச்சுப்பாங்கனு நம்பிக்கை. பணத்தை பிரிக்கிறப்போ 50 ரூபாய் கொறைச்சு குடுக்குறாரு ஷார். ஏன்னு கேட்டதுக்கு கடனா குடு, திருப்பித் தர்றேனு சொல்றாரு. சரி என்கிறார் நண்பர். குடுத்த கடன வாங்க, அடுத்த நாள் வீட்டுக்கு போறாரு நௌஷத். பணம் கேட்க போன இடத்துல 50 ரூபாய வச்சு வாக்குவாதம். கடைசில நௌசத் கொல்லப்படுகிறார். 

இதே மாதிரி கான்பூர்ல 2016-ல் ஒரு சம்பவம். மஹேந்திரானு ஒருத்தர். ஹோட்டலுக்கு போயி பார்சல் வாங்கியிருக்கார். 160 ரூபாய் பில்லுக்கு 100 ப்ளஸ் 50 ரூபாய் தாளாகவும், 10 ரூபாய் நாணயமாகவும் கொடுத்தார் மஹேந்திரா. வழக்கம் போல 10 ரூபய் நாணயத்தை வாங்க கடைக்காரர் மறுக்கிறார். தன்னிடம் வேறு பணம் இல்லைனு சொல்லியும், இது செல்லும்னு சொல்லியும் மஹேந்திரா வாக்குவாதம் பண்றாரு. கடைக்காரர் கோபத்துல அடிக்க, மகேந்திரா இறந்துடுறார்.

சாதாரணமாக ஒருவர் மீது கொண்ட பகை கராணமாக, சொத்துப் பிரச்னைக்காக, ஆணவத்துக்காக கொலை நடந்ததெல்லாம் போக, இப்போது எமோஷனல் அதாவது உணர்ச்சி மேலோங்க நடக்கும் கொலைகள் அதிகரித்திருக்கிறது. கூலி வேலைக்கு செல்பவர்கள், சிறிய அளவில் தொழில் செய்பவர்கள் இடையே இது போன்ற கொலைகள் அதிகரித்திருக்கிறது. அந்த நேரத்தில் ஏற்படும் கோபம் வேறு மாதிரியக மாறி, உணர்ச்சி மேலோங்கி என்ன செய்வதென அறியாமல் கோபத்தால் கட்டுண்டு கொலை செய்யும் அளவுக்கு செல்கின்றனர். 

மேலே சொன்ன மூன்று சம்பவங்களிலும் கொலை செய்யும் அளவுக்கு எந்தச் சூழலும் இல்லை. ஆனால் கொலை நடக்கிறது. திட்டம் போட்டு எதையும் யாரும் செய்யவில்லை. கோபத்தின் மிகுதியில், ஏதோ தவறான வார்த்தைகளின் வெளிப்பாட்டில் இவையெல்லாம் நடக்கிறது. சமீப காலத்தில் காவல்துறை இது போன்ற வழக்குகளை அதிகம் சந்திப்பதாக உத்தரப் பிரதேச காவல்துறை தலைவர் கூறுகிறார்.


 
கடந்த ஆண்டு உ.பி பல்ராம்பூர் பகுதியில் சம்பவம் ஒன்று நடைபெற்றது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட ஜெய்ராம் யாதவ் என்பவர் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனக்கு முன்பு சென்று கொண்டிருந்த வாகனத்தை ஓவர்டேக் செய்து செல்கிறார். அப்போது திடீரென ஜெய்ராமை நோக்கி யாரோ சுடுகிறார்கள். சுடப்பட்ட அவர் நிலை தடுமாறி வாகனம் குப்புற கவிழ, இறந்து விடுகிறார். சமாஜ்வாதி எம்.எல்.ஏவின் உறவினர்தான் சுட்டதாக காவல்துறை விசாரணையில் தெரிய வருகிறது.  

சில நாட்களுக்கு முன்பு இதே போன்ற சம்பவம் பீகார்ல நடக்குது. நகராட்சி கவுன்சிலரின் மகன் ஒருவர் தன்னுடைய வாகனத்தை ஓவர்டேக் செய்த நபரை சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டது. பின்னர் கவுன்சிலரின் பாதுகாவலர் கைது செய்யப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்தச் சம்பவங்களும் கூட, ஏதோ ஒரு கோப மிகுதி அல்லது உணர்ச்சிவயப்படுவதால் நடந்தவையே. வாகனத்தை ஓவர்டேக் செய்வது என்பது அனைத்து சாலைகளிலும் மிக இயல்பாக நடக்கக் கூடிய ஒன்று. 

ஏன் இப்படி இது போன்ற நிகழ்வுகள் நடைபெற ஆரம்பித்துள்ளது என மனநல மருத்துவர்களை கேட்ட போது, “மனிதர்கள் மன அழுத்தம் கொண்டவர்களாக, எதையும் ஏற்றுக் கொள்ளும் இயல்பில்லாதவர்களாக இருந்தால் எளிதில் கோபப்பட கூடியவர்களாக அல்லது தங்களையே வருத்திக் கொள்பவர்களாக இருப்பார்கள். உணர்ச்சி வயப்பட்டு கொலை செய்பவர்களை பொருத்தவரை , தோல்வியை ஏற்றுக் கொள்ளாதவகள், புரிந்துக் கொண்டு செயல்படாதவர்கள் இதனைச் செய்பவர்களாக இருக்கிறார்கள். கோபத்தை குறைப்பதும், அமைதியாக செயல்படுதலுமே இதனை குறைக்கும். ஆனால் சமீப காலமாக எதற்கெடுத்தாலும் கோபமடைபவர்களாக மனிதர்கள் மாறி வருகிறார்கள்.. புறக்காரணிகளே (சினிமா,அரசியல்,பதவி..) இதனை தீர்மானிப்பதாக உள்ளது” என்றனர்.