எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து 2 மணி நேரப்பயணத்தில் உள்ளது செரபியம் காடுகள். 340 ஹெக்டேரில் பரந்துவிரிந்துள்ள இந்தக் காடு, சுற்றுச்சூழலின் அதிசயமாகத் திகழ்கிறது. பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள இந்தக் காட்டில் மண்ணின் மரங்களும், அந்நிய மரங்களும் செழித்து வளர்ந்துள்ளன. ஆராய்ச்சியாளர்கள் பாலை நிலங்களில் வளம் மிக்க நிலங்களாக மாற்றும் முயற்சியில் இறங்கி, வெற்றியும் பெற்றுள்ளனர்.
நகரங்களில் இருக்கும் கழிவு நீரை, குறிப்பிட்ட அளவுக்கு சுத்திகரிக்கிறார்கள். இந்த நீரை நீண்ட குழாய்கள் மூலம், பாலைவனத்துக்கு அனுப்புகிறார்கள். விதைகள், மரங்கள், செடிகள் என்று நடப்பட்ட இடங்களில் குழாய் மூலம் கழிவு நீர் வந்து சேர்கிறது. மழையை எதிர்பார்த்து இந்தத் தாவரங்கள் வாழ வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். கழிவு நீரை ஓரளவு சுத்தம் செய்து பயன்படுத்துவதால் செடிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் இந்த நீரை மனிதர்கள் பயன்படுத்த முடியாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இங்குள்ள மரங்களில் இருந்து பெறப்படும் காய், கனிகள் நூறு சதவீதம் பாதுகாப்பானவையாக இருக்கிறது.கழிவு நீரில் இருக்கும் சத்துக்களும், சூரிய ஒளியும், செரபியம் காடுகளை வேகமாக வளர வைக்கின்றன. 15 ஆண்டுகளில் மரம் வெட்டக்கூடிய அளவுக்கு வளர்ந்துள்ளது. மரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. செரபியம் காடுகளில் ஆக்கப்பூர்வமான விஷயங்களையும் செய்ய முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.