தமிழ்நாட்டின் சமீபத்திய அரசியல் வரலாற்றில் அதிமுக - பாஜக கூட்டணி முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. 1998-இல் தொடங்கிய அதிமுக-பாஜக கூட்டணி, இடைவேளை முறிவுகள், மீண்டும் இணைவுகள், தேர்தல் தோல்வி-வெற்றிகள், தலைமை மாற்றங்கள் என பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து, தற்போது 2026 தேர்தலை நோக்கி மீண்டும் இணைந்துள்ளது.
1998 முதல் 2025 வரை.. அதிமுக - பாஜக கூட்டணி!
முதன்முறையாக, 1998ஆம் ஆண்டில் வாஜ்பாய் தலைமையில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக-பாஜக கூட்டணி உருவானது. இந்தக் கூட்டணி வெற்றிகரமாக 30 தொகுதிகளைக் கைப்பற்றியது. 1999-இல் இந்தக் கூட்டணி முறிந்தது. இதனால் வாஜ்பாய் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அதிமுக பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து தேசிய அரசியலில் அன்று மாற்றங்கள் ஏற்பட்டன.
2004 மக்களவைத் தேர்தலையொட்டி இந்தக் கூட்டணி மீண்டும் அமைந்தது. ஆனால், திமுக கூட்டணி 39 தொகுதிகளையும் வென்றது; அதிமுக-பாஜக கூட்டணி படுதோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து மதமாற்றத் தடைச் சட்டம் வாபஸ், ஜெயேந்திரர் கைது போன்ற விவகாரங்கள் காரணமாக கூட்டணி முறிந்தது. 2014 மக்களவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, "லேடியா.. இல்லை மோடியா" என மோடியை எதிர்த்து தனித்துப் போட்டியிட்டார். பாஜகவுடன் உறவு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். அதன் பயனாக, அதிமுக 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் இரட்டை தலைமையாக (இபிஎஸ் - ஓபிஎஸ்) அமைந்தபின், 2019 மக்களவைத் தேர்தலில் மீண்டும் கூட்டணி அமைந்தது. ஆனால், அதிமுக ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது; பாஜக ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. பின்னர், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தொடர்ந்தது. மொத்தம் 75 தொகுதிகளில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றதில், கோவை தெற்கு உள்ளிட்ட 4 தொகுதிகளில் பாஜக வென்றது. பின்னர், பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை, அதிமுக, ஜெயலலிதா குறித்து விமர்சனம் செய்ததால், கூட்டணி முறிந்தது. இரு கட்சிகளும் தனித்தனியாகச் செயல்பட்டன. இந்தக் கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பே முறிந்தது. மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்ட நிலையில், இரு தரப்பினரும் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை.
2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மீண்டும் அதிகாரபூர்வமாக அதிமுக-பாஜக கூட்டணி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இது 2025 ஏப்ரலில் அமித் ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அறிவிக்கப்பட்டது. கூட்டணியின் தலைமையில் இபிஎஸ் இருப்பார் என்றும், தேசிய அளவில் மோடி தலைமையிலும் செயல்படும் என்றும் கூறப்பட்டது.
சுருக்கமாக:
அதிமுக - பாஜக தலைமையில் தற்போது அமைந்துள்ள இந்த கூட்டணி, அது அறிவிக்கப்பட்ட நாள் முதலே சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த போதும், பாஜக உடனான கூட்டணி இல்லை என்றே இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் தெரிவித்து வந்தனர். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீண்டும் பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று உறுதியாக கூறி வந்தனர். இதற்கிடையே அதிமுக தலைவர்கள் தொடர்ச்சியாக டெல்லிக்கு சென்று வந்தனர்.
பின்னர், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) முன்னிலையில் சென்னையில் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பாஜக -அதிமுக கூட்டணியை அமித்ஷா அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்தக் கூட்டணியில், அதிமுகவின் தலைமையை இபிஎஸ் தாங்குவார் என்றும், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவரங்கள் பின்னர் முடிவாகும் என்றும் அமித் ஷா தெரிவித்தார். இந்தக் கூட்டணி அறிவிப்பு, அதிமுகவில் இபிஎஸ் தலைமையை மத்திய பாஜக முழுமையாக ஏற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தியது. கடந்த காலத்தில் ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற பாஜக முயற்சி செய்து வந்த நிலையில், அதனை புறம்தள்ளிவிட்டு, இபிஎஸ் தலைமையை ஆதரிக்கும் முடிவுக்கு வந்துசேர்ந்தது.
ஆனால், இந்த அறிவிப்பு முதலே இந்தக் கூட்டணி தொடர்பான சர்ச்சை தொடங்கியது. சொல்லப்போனால், அதற்கு முன்பாகவே விமர்சனங்கள் உருவாகிவிட்டது. அதாவது அதிமுக தலைவர்கள் டெல்லியில் தஞ்சம் அடைந்திருந்தபோது சந்திப்புகள் நடந்து கொண்டிருக்கும்போது கூட்டணி தொடர்பான அறிவிப்பை சூசகமாக அமித்ஷா சமூக வலைதளத்தில் தெரிவித்துவிட்டார். இதுவே விமர்சனத்திற்கு அடித்தளமிட்ட தொடக்கப்புள்ளி. அத்துடன், கூட்டணி தொடர்பான அறிவிப்பு நடந்த செய்தியாளர் சந்திப்புதான் பல கேள்விகளை உண்டாக்கியது.
கூட்டணியை அறிவிக்க வேண்டியது கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெரிய கட்சிதான். என்னதான் இந்திய அளவில் பாஜக பெரிய கட்சியாக இருந்தாலும் தமிழ்நாடில் அதிமுகதான் பெரிய கட்சி. ஆனால், அன்று கூட்டணியை அறிவித்தது பாஜக தலைவரான அமித்ஷா. இதுவே முதலில் சிக்கலான விஷயம். அத்துடன் அந்தச் சந்திப்பில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. கூட்டணி அறிவிப்பின்போது பெரிய கட்சியாக அதிமுக தரப்பில் ஒரு வார்த்தைகூட பேசப்படவில்லை என்பது ஆச்சர்யமாக இருந்தது. இது இரண்டாவது சிக்கல்.
மூன்றாவது கூட்டணி ஆட்சி என்ற பதத்தை அமித்ஷா பயன்படுத்தி இருந்தார். என்னதான் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, அதிமுக தலைமை தாங்கும் என்று கூறி இருந்தாலும் கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையை அமித்ஷா பயன்படுத்தியது தமிழ்நாட்டு அரசியல் களத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியது. தற்போது ஆளும் கட்சியாக உள்ள திமுகவும், ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவும் கூட்டணி ஆட்சி என்பதை ஒருபோதும் ஒப்புக் கொண்டதில்லை. தற்போதும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றனர். விசிக இந்த விஷயத்தைத் தொடர்ச்சியாக பேசி வருகிறது. தவெக தலைவர் விஜய் விக்கிரவாண்டி மாநாடில் அதை ஓர் அஸ்திரமாக பயன்படுத்தி பார்த்தார். ஆனால், அது பெரிய சலனத்தை ஏற்படுத்தவில்லை.
மற்றவர்கள் சொல்வதைக் காட்டிலும் அமித்ஷா ஒரு வார்த்தையை பயன்படுத்தும்போது அதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதனால், பலரும் இதுதொடர்பாக அதிமுகவை நோக்கி கேள்விகளை எழுப்பினர். அதற்கு இபிஸ் உள்ளிட்ட தலைவர்கள் கூட்டணி ஆட்சி இல்லை என்பதை தெளிவுபடுத்தி வந்தனர்.
அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ச்சியாக முதல்வர் வேட்பாளர் குழப்பத்தை பாஜக தலைவர்கள் உருவாக்கி வருகின்றனர். அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஏற்கனவே 4 ஆண்டுகள் முதலமைச்சர் ஆக இருந்தவர். அவர்தான் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் என்பது தெள்ளத்தெளிவான உண்மை. இப்போதைக்கு பெரிய அளவில் கட்சிக்குள் குழப்பங்கள் இல்லை. செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி போன்றவர்களின் விவகாரங்கள் இருந்தபோதும் தலைமைக்கு கேள்வி எழுப்பும் அளவிற்கு அது வளரவில்லை. எனினும், கட்சியின் நிர்வாகிகள் பெரும்பாலும் இபிஎஸ் வசமே உள்ளனர்.
ஆனால், பாஜக தொடர்ச்சியாக இதில் குழப்பை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. அதாவது, தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை தமிழ்நாட்டில் அதிமுகவில் இருந்துதான் முதலமைச்சர் இருப்பார் என்று பொத்தாம் பொதுவாக கூறி வருகிறது. நேரடியாக எடப்பாடி பழனிசாமி என்ற வார்த்தையை அது சொல்வதில்லை. ஏன் என்று கேட்டால், அது அதிமுகவின் உட்கட்சி விவகாரம், வெற்றி பெற்ற பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி அவர்களது முதல்வரை தேர்வு செய்வார்கள் என்று கூறுகின்றனர்.
திமுகவில் பல மூத்த தலைவர்கள் இருந்தபோதும் மு.க.ஸ்டாலிதான் முதல்வர் வேட்பாளர் என்பது அனைவருக்கும் தெரியும். இதில் குழப்பத்திற்கு இடமேயில்லை. முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் அவர்கள் இருக்கும்வரை அவர்கள்தான் முதல்வர் வேட்பாளர்கள். மாற்றுப் பேச்சுக்கே இடமில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி இருக்கும்போது ஏன் பாஜக தலைவர்கள் அவரது பெயரை பயன்படுத்தத் தயங்குகிறார்கள். திட்டமிட்டே தவிர்க்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. அதிமுக தலைவர்கள் தரப்பில் பலரும் இதற்குப் பதில் அளித்து வருகிறார்கள். ஆனால், பாஜக தலைவர்கள் மழுப்பலாகவே பேசி வருகிறார்கள்.
ஒருவேளை செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி என யாரேனும் ஒருவரை மனதில்வைத்து பாஜக யோசிக்கிறதோ, என்ற ஐயமும் வருகிறது. ஏனெனில், அமித்ஷா கூட்டணியை அறிவித்தபோதும்கூட முதல்வர் வேட்பாளர் என்று நேரடியாக பெயர் குறிப்பிடவில்லை. பாஜக தலைவர்கள் முதல்வர் வேட்பாளர் குறித்து நேரடியாக உறுதி செய்யாமல், "கூட்டணியில் முடிவு செய்வார்கள்" என்ற பொதுவான பதில் அளிப்பதால் குழப்பம் தொடர்கிறது.
மறுபுறம், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது தொடர்பாக அமித்ஷா தொடர்ச்சியாக பேசி வருகிறார். ஒவ்வொரு முறை அமித்ஷா பேசும்போதும் அது விவாதம் ஆகிறது. பின்னர் இபிஸ் மற்றும் அதிமுக தலைவர்கள் விளக்கம் கொடுக்கின்றனர். இது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் ஆங்கில நாளிதழுக்கு அமித்ஷா நேற்று அளித்திருந்த பேட்டியில் ’தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைந்தால் பாஜக அதில் பங்கேற்குமா’ என்ற கேள்விக்கு ’ஆம்’ என்று பதிலளித்து மீண்டும் விவாதத்திற்கு அடிகோலியுள்ளார். இன்று காலை முதல் அமித்ஷாவின் பேச்சு விவாதமான நிலையில், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.
ஒருவகையில், அதிமுகவின் பொறுமையை அமித்ஷா சோதித்து வருகிறார் என்றே பார்க்கப்படுகிறது. அமித்ஷா பேச மீண்டும் முதலில் இருந்து அதனை மறுத்து அதிமுக தலைவர்கள் விளக்கம் அளிக்க என இது தொடர்கிறது. ஒன்று பாஜக தலைவர்கள் இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் அல்லது அதிமுக கண்டிப்புடன் பேச வேண்டும். இரண்டில் ஒன்று நடந்தால்தான் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வரும்.