Silfra fissure  chatgpt
சிறப்புக் களம்

2 கண்டங்கள் பிளக்கும் இடம்.. மனிதர்கள் விரும்பும் சொர்க்க வாசல்! இயற்கையின் பேரதிசயம்!

உலகில் உள்ள இயற்கை அதிசயங்களில் ஒன்று என சிலகிரா பிளவை நிச்சயமாக கூறலாம்.

PT WEB

ஐஸ்லாந்து நாட்டின் சிலகிரா பிளவு, வடஅமெரிக்கா மற்றும் யூரேசியா கண்டங்களின் டெக்டானிக் தட்டுகள் சந்திக்கும் இடமாகும். இந்த பிளவின் அருகே உள்ள நீர் உலகிலேயே மிகவும் தெளிவாக காணப்படும். சுற்றுலா பயணிகள் இரண்டு கண்டங்களுக்கு நடுவே நீந்தும் அனுபவத்தை பெறுவதால், இது ஒரு பிரபலமான சுற்றுலா தளமாக மாறியுள்ளது.

செய்தியாளர் - கார்த்திகேயன்

ஐஸ்லாந்து நாட்டின் கிங்வெட்லிர் தேசிய பூங்காவில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற நிலப்பகுதி தான் சிலகிரா பிளவு. இது வடஅமெரிக்கா மற்றும் யூரேசியா ஆகிய இரு கண்டங்களின் டெக்டானிக் தட்டுகள் சந்திக்கும் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு சென்றால், இரண்டு கண்டங்களையும் ஒரே நேரத்தில் சந்தித்தது போன்றதாகும். இந்த பிளவு திடீரென ஒரே நாளில் உருவான ஒன்று கிடையாது. இந்தத் தகடுகள் ஆண்டுக்கு சுமார் 2 சென்டி மீட்டர் என்ற அளவில், தொடர்ச்சியாக விலகிச் சென்று வருகிறது. குறிப்பாக, 1789-ல் ஏற்பட்ட தொடர்ச்சியான நிலநடுக்கங்களால், இந்த நிலப்பகுதி பிளந்து இந்த ஆழமான இடைவெளி ஏற்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த தகடுகள் விலகுவது குறித்த முறையான அறிவியல் தகவல்கள், 20-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான் உலகிற்கே தெரியவந்தது. மேத்யூ ஃபாண்டைன் மௌரி போன்ற அறிவியலாளர்கள் அட்லாண்டிக் கடலின் நடுவே ஒரு பெரிய மலைத்தொடர் இருப்பதை முதலில் கண்டறிந்தனர். பின்னர் 1950கள் மற்றும் 60களில் வந்த புவியியல் ஆய்வாளர்கள், ஐஸ்லாந்து நாடு அந்த மலைத்தொடரின் மீதுதான் அமைந்திருக்கிறது என்பதையும், அந்தத் தகடுகள் ஆண்டுதோறும் விலகிச் செல்வதையும் நவீன அறிவியல் கருவிகள் மூலம் உறுதிப்படுத்தினர். இந்த பகுதியில், மற்றொரு சிறப்பும் உள்ளது.

அதாவது, இதன் அருகில் உள்ள லாங்ஜோகுல் பனிப்பாறையில் இருந்து உருகும் நீர், நிலத்தடியில் உள்ள பாறை அடுக்குகள் வழியாக வடிகட்டப்பட்டு, இந்த விரிசலை வந்து சேரும். பல்வேறு அடுக்குகள் மூலமாக, இந்த நீர் வடிகட்டப்படுவதால், இந்த நீர் மிகவும் தெளிவாக இருக்கும். இந்த தெளிவு எந்த அளவுக்கு என்றால், சுமார் 100 மீட்டர் ஆழம் வரை நீருக்கடியில் என்ன உள்ளது என்பதை, வெறும் கண்களாலே தெளிவாக பார்க்க முடியும். இவ்வளவு தெளிவு மிகுந்த இந்த நீர், 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை மிகவும் குளிராக இருக்கும். உலகிலேயே மிகவும் சுத்தமான நீர் நிலைகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இரண்டு கண்டங்களுக்கு நடுவே தண்ணீருக்கு அடியில் நீந்தக் கூடிய வகையில் இது இயற்கையாகவே அமைந்துள்ளதால், வருடந்தோறும் பல்லாயிரம் சுற்றுலா பயணிகள் இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர். இந்த சுற்றுலா தளம், பிக் கிராக், சில்ஃபிரா ஹால், சில்ஃபிரா கேதீட்ரல், சில்ஃபிரா லகூன் என்று 4 முக்கிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் பல்வேறு சுற்றுலா பயணிகள் வருவதால், இந்த இயற்கை சூழலை பாதுகாக்க பல்வேறு கடுமையான விதிகள் இங்கு நடைமுறையில் உள்ளன.