ஒவ்வொரு சமயத்திலும் ஒரு சில வார்த்தைகள் அதிக புழக்கத்தில் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு Work life balance என்னும் வார்த்தையை சர்வசாதாரணமாக கேட்கமுடியும். இரு இளைஞர்கள் பேசும்போது work life balance இல்லை என்பதுதான் அவர்கள் பேச்சின் சாரமாக இருக்கும். தற்போது வீட்டில் இருந்து வேலை பழக்கமாகிவிட்டதால் work life balance என்னும் வார்த்தையை நம்மால் கேட்கமுடியவில்லை. ஆனால் வேறு ஒரு வார்த்தை குறித்துவிவாதிக்க தொடங்கிவிட்டார்கள். அது Early retirement.
இன்றைய தேதியில் வேலைக்கு செல்லும் நபர்களிடையே அதிகம் பயன்படுத்தும் வார்த்தையாக இது இருக்கிறது. ‘வாழ்க்கை முழுவதும் ஒரே வேலையில் இருக்க முடியாது’, வேலை இழப்பு அதிகரிப்பு போன்றவற்றால் விரைந்து ஓய்வு பெறும் எண்ணம் சமூகத்தில் இயல்பானதாக மாறிவிட்டது. இதன் பின்னுள்ள நியாயமான வாதங்களை, early retirement-கான காரணங்களை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
பிரச்னை எங்கு வருகிறதென்றால், Early Retirement-ஐ திட்டமிடும் பலர், அதனை யோசித்தே தங்களின் நிகழ்காலத்தை இழக்கின்றனர். உண்மையில் நிதி சார்ந்து தன்னிறைவாக இருப்பது என்பது வேறு, விரைவாக ஓய்வை பெற்றுவிடுவது என்பது வேறு. சொல்லப்போனால், சீக்கிரம் ஓய்வை பெறுவதால் என்னதான் பயன்? ஓய்வை அறிவித்த பின் பிடித்த மாதிரி ‘சம்பளம் குறைவாக இருந்தாலும் கூட எனக்கு பிடித்த வேலையை செய்வேன்’ என்று சொல்வதற்கும், early retirement என்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. முதாலவது, நிதிநிலைமையை ஸ்திரமாக்கிக் கொண்டு மனதுக்கு பிடித்தமான வேறொரு விஷயத்தை நாடுவது. இரண்டாவது, நிதிநிலைமை ஸ்திரமாக்கிக் கொண்டு முழுவதுமாக ஓய்வெடுப்பது (அதுவும் இளவயதில்).
இரண்டாவது விஷயத்தில், அதாவது இளவயதில் (வேலை செய்யும் வயதில்) ஓய்வெடுப்பது என்பது, ஆபத்தான விஷயம். ஏனெனில் வேலை செய்யும் வயதில் இருக்கும் ஒருவர், வீட்டில் சும்மா இருப்பது வீட்டுக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கும் கேடு. இப்படியானவர்கள், சீக்கிரம் ஓய்வை பெறவேண்டும் என்பதற்காக சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை சேமிக்க தொடங்குகின்றனர். அளவுக்கு அதிகமாக கடன் வாங்குவது எப்படி தவறோ, அதே அளவுக்கு அதிகமாக சேமிப்பதும் தவறு. இன்னும் சொல்லப்போனால் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கும் பட்சத்தில் எதிர்காலத்தை அடமானம் வைக்கிறோம்; அதேபோல அளவுக்கு அதிகமாக சேமிக்கும் பட்சத்தில் நிகழ்காலத்தை அடமானம் வைக்கிறோம். இரண்டுமே ஏற்புடையதல்ல.
இப்படியானவர்களுக்கு, ஒரே ஒரு விஷயம் நடக்கும். அது, உங்களிடம் அதிக சேமிப்பு இருக்கும். ஆனால் வாழ்க்கையை வாழ வேண்டிய வயதில், சுற்றுலா, பொழுதுபோக்கு, நண்பர்களுடன் செலவிடுவது, தொழில்நுட்பத்தில் அப்டேட்டாக இருப்பது என எதனையும் செய்யாமல் அதிக பணத்தை சேமிப்பது ஆபத்தாக மாறும்.
பணம் உங்கள் கையில் இருக்கும் என்றாலும்கூட, அதை நீங்கள் ஒரு நாளும் கரைக்கவோ இழக்கவோ மாட்டீர்கள். எப்போதுமே மனித மனம் ஒரு வேலையில் இருந்து நீக்கப்பட்டால், மற்றுமொரு வேலையை தேடிக்கொள்ளத்தான் தொடங்கும். மாறாக ஓய்வெடுக்க நினைக்காது. அடுத்தக்கட்டத்தை குறித்து இயல்பாகவே நாம் யோசிப்போம் என்பதால் early retirement குறித்து அதிகமாக யோசிப்பவர்களும்கூட, குறிப்பிட்ட காலத்துக்குப் பின் ஓய்வெடுப்பதில்லை. வேறு வேறு விஷயங்களை செய்கின்றனர். ஆகவே Early retirement குறித்து யோசித்து, கூடுதல் தொகையை சேமிக்க செய்ய வேண்டாம். அதற்கு மாற்று வருமானம் கிடைப்பதற்கான வழியை, திறனை வளர்த்துகொள்வதே, புத்திசாலித்தனம்.
இதனையும் தாண்டி கூடுதல் பணத்தை சேமிக்க தொடங்கினால் அது பழக்கமாக மாறும். செலவுகளை குறைப்பது அதிகரித்தால், அப்போது உங்களிடம் இருக்கும் பணம் யாருக்கும் பயன் கொடுக்காது. சமீபத்தில் கேட்ட கதை இங்கு பொருத்தமாக இருக்கும். ஒருவர் மிகவும் கஷ்டப்பட்டு ஆண்டுக் கணக்கில் சேமித்து ஒரு பெரிய தங்கக் கட்டியை வாங்கிவிடுகிறார். அதனை யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு அருகில் புதைத்துவிடுகிறார்.
இவருடைய தினசரி பழக்கம் விடியற்காலையில் எழுந்து அந்த தங்கக்கட்டி அங்கு இருக்கிறதா என்பதை உறுதி செய்துவிட்டுதான் அடுத்தவேலையை பார்ப்பார். இதனை பக்கத்து வீட்டில் இருப்பவர் பார்த்துவிடுகிறார். சில நாட்கள் தொடர்ச்சியாக நோட்டம் விடுகிறார். ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரர் அந்த தங்கக்கட்டியை எடுத்துவிட்டு செங்கலை வைத்துவிடுகிறார். சம்பந்தபட்ட நபர் வந்துபார்க்கும்போது செங்கலை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அப்போது பக்கத்துவீட்டுகாரர், அவராகவே வந்து, “தினமும் பார்ப்பதற்கு மட்டும் செங்கல் போதாதா? தங்கக்கட்டியே வேண்டுமா” என கேட்கிறார்.
இதுபோலதான் தங்கக் கட்டியை அப்படியே வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை. அமெரிக்காவில் சீக்கிரமாக ஓய்வுபெற்றால் அபராதம் இருக்கிறது. (அங்கு சமூகபாதுகாப்பு திட்டங்களும் இருக்கிறது என்பதை மறுக்கவில்லை). இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு Early Retirement குறித்து உங்கள் முடிவை எடுக்கவும்.
இதேபோல ஓய்வு காலத்துக்காக சேமிப்பவர்களும் கவனமாக இருக்கவும். வெறும் சேமிப்பு மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை புரிந்துக்கொள்ளவும். உதாரணத்துக்கு ஓய்வுக் காலத்தில் பென்ஷன் இல்லை என்பவர்கள், அதற்காக ஓய்வுக் காலத்தை நோக்கி சேமிக்கலாம். நிச்சயமில்லாத சூழலில் (எமர்ஜென்சி) இருப்பவர்களும் சேமிக்கலாம். திடீரென வேலை இழப்பு ஏற்படுகிறது என்பவர்கள், பெரிய மருத்துவ செலவுகளுக்கு சேமிக்கலாம். ஆனால் ‘விரைவாக ஓய்வு பெறவேண்டும். அதற்காக கூடுதலாக சேமிக்கிறேன்’ என்பது பதற்றத்தின் வெளிப்பாடாகவே மாறிவிடும் அபாயம் நிறைந்தது. ஆகவே, கவனத்துடன் செயல்படவும்.
முந்தைய அத்தியாயம் > பணம் பண்ண ப்ளான் B - 16: பணத்தை சேமித்தால் மட்டும் போதுமா? எங்கு சேமிக்க வேண்டும்?