சிறப்புக் களம்

அடிக்கடி நகம் கடிக்கும் பழக்கமுடையவரா? உங்களுக்கு இந்த தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்!

Sinekadhara

நகம் கடிக்கும் பழக்கமுடையவராக நீங்கள் இருந்தால் ஒன்றிற்கு இருமுறை யோசிக்கவும். இது கெட்டபழக்கமாக பார்க்கப்படுவது மட்டுமில்லாமல், சுகாதாரமற்ற மற்றும் தொற்று ஏற்படுத்தக்கூடிய பழக்கமாகவும் பார்க்கப்படுகிறது. இது மோசமான உடல்நல குறைபாடுகளுக்கு வழிவகுக்கிறது. நகம் கடித்தல் அழற்சியை ஏற்படுத்துவதால், நகத்தைச் சுற்றியுள்ள சருமம் வீங்கி அரிப்பு ஏற்படுகிறது.

இதனை paronychia அல்லது நகச்சுற்று என அழைக்கின்றனர். நக மடிப்புகள் மற்றும் ஓரங்களில் சிறுவெட்டுகள் ஏற்படுவதால் பாக்டீரியாக்கள் உட்புகுந்து நகச்சுற்றை ஏற்படுத்துகிறது. நகச்சுற்று ஏற்பட்டால் வீக்கமடைந்து சீழ் பிடித்து பயங்கர வலியை உருவாக்கும். முறையாக சிகிச்சை அளிக்காவிட்டால் சிலருக்கு காய்ச்சல், சோர்வு மற்றும் தலைசுற்றல் போன்ற பிரச்னைகளும் இந்த தொற்றால் ஏற்படலாம்.

சிகிச்சை அளிப்பதால் நகச்சுற்று குணமடைந்தாலும் சிலருக்கு மீண்டும் மீண்டும் வரும் வாய்ப்புகள் இருக்கிறது. முறையாக சிகிச்சை அளிக்காவிட்டால் தொற்றானது நகம் மற்றும் அதனைச் சுற்றி ஆழமாக பரவி மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால் இது அரிதாகவே நடக்கும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நகச்சுற்றானது கடுமையானதாகவும், நீண்ட நாட்களுக்கும் இருந்து வேதனையை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.

நகச்சுற்றின் வகைகள்

கடுமையான தொற்று (Acute)

இந்த தொற்றானது குறுகிய காலத்தில் உருவாகி, வெகுசீக்கிரத்தில் தொற்றை ஏற்படுத்திவிடும். பல்லால் கடிப்பது, உரிப்பது மற்றும் சில நேரங்களில் மேனிக்யூர் போன்றவற்றால் நகத்தைச் சுற்றியுள்ள தோலானது சேதமடைவதால் தொற்று ஏற்படுகிறது. ஸ்டேஃபிளோகோகஸ் மற்றும் என்டோரோகோகஸ் போன்ற பாக்டீரியாக்கள் இந்த தொற்றை ஏற்படுத்துகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

நாள்பட்ட தொற்று (Chronic)

நாள்பட்ட நகச்சுற்றானது கை மற்றும் கால்நகங்களில் வரக்கூடியது. இது மெதுவாக பரவி தொற்றை ஏற்படுத்தும். சில வாரங்களுக்கு இருக்கக்கூடிய இந்த தொற்றானது பெரும்பாலும் ஈஸ்ட் தொற்றால் வரக்கூடியது. குறிப்பாக தொடர்ந்து நீரிலேயே வேலைசெய்பவர்களுக்கு இந்த தொற்று அதிகமாக வரும். ஈரமான சருமம் மற்றும் நீரில் ஊறுதல் போன்றவை சருமத்தின் இயற்கைத்தன்மையை மாற்றி, சரும இடுக்குகளில் ஈஸ்ட் மற்றும் பாக்டீரியாக்கள் சேர்ந்து அவை வளர வழிவகுக்கிறது. இதனால் தொற்று ஏற்பட்டு, அந்த இடம் வீக்கமடைந்து, சீழ்பிடித்து அழற்சி ஏற்படுகிறது.

அறிகுறிகள்

நகச்சுற்றின் அறிகளும் தொற்றின் அளவும் நாளுக்குநாள் மாறிக்கொண்டே இருக்கும். அவற்றில் சில...

  • நகத்தை சுற்றியுள்ள தோல் சிவத்தல்
  • சருமம் வீக்கமடைதல்
  • கட்டிகளில் சீழ்பிடித்தல்
  • நகத்தின் வடிவம், நிறம் மற்றும் தன்மை மாறுபடுதல்
  • நகம் உடைந்துபோதல்
  • வலி
  • காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் (தீவிர தொற்றால் ஏற்படுகிறது)

நகச்சுற்றுக்கு முறையாக சிகிச்சை அளிக்காமல் விட்டால் நகமானது அசாதாரணமாக வளர்ந்து திட்டுதிட்டாக மாறிவிடும். மேலும் மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் நகம் மாறி வறட்சியடைந்து, செதில் செதிலாக உடையும். மேலும் நகம் சதைப்பகுதியிலிருந்து பெயர்ந்து விழுந்துவிடும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கைகளை கழுவியபிறகு அவற்றை ஈரம்போக துடைத்து மாய்ஸரைசர் தடவுவது அவசியம்.

நகங்களை கடிப்பதை தவிர்க்கவும்

நகவெட்டியை பிறருடன் பகிரவேண்டாம். அதேபோல் பயன்படுத்தியவுடன் கழுவி சுத்தம் செய்யவும்.

கை மற்றும் கால் நகங்களை கழுவி ஈரமின்றி வைத்திருக்கவும்.

கை, கால்களை நீண்டநேரம் தண்ணீரில் வைத்திருக்கவேண்டாம்.

எரிச்சலூட்டும் பொருட்களை தவிர்க்கவும்.

நகங்களை எப்போதும் சிறிதாக அல்லது பரமாரிக்கும் நீளத்தில் வைத்திருக்கவும்.

சிகிச்சை

நகக்கணுவின் சிறிய பகுதியை எடுத்து ஸ்வாப் டெஸ்ட் செய்வதன் மூலம் நகச்சுற்றை கண்டறியலாம். மேலும் அது பாக்டீரியா அல்லது பூஞ்சைத் தொற்றா என்பதையும் கண்டறியலாம். நோய்த்தொற்றின் தன்மையை பொறுத்து மருத்துவர் அதற்கேற்றார்போல் சிகிச்சை அளிப்பர். மேலும் அது குறுகிய கடுமையான தொற்றா அல்லது நாள்பட்ட தொற்றா என்பதை பொறுத்தும் சிகிச்சை அமையும். பொதுவாக நகச்சுற்றுக்கு வீட்டிலேயும் சிகிச்சை அளிக்கலாம்; மருத்துவமனைகளுக்கும் செல்லலாம். அது நோய்த்தொற்றின் தீவிரத்தைப் பொருத்தது.