திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை நலிவுற்று இரண்டு நாட்களுக்கு முன் பின்னிரவு 1.30 மணியளவில் அவரது கோபாலபுர இல்லத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு காவேரி மருத்துவமனையிலுள்ள அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது வரை நலமுடன் இருக்கிறார். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளாக இது போன்ற வதந்திகளை எதிர்கொண்டவர் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் என்றாலும் கடந்த வாரத்தில் கடந்த வந்த வதந்திகளையும் அவை ஒன்றுமில்லாமல் போனதையும் அனைவரும் அறிவர்.
அதற்கு முந்தைய நாள் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதிக்கு உடல்நிலை நலிவுற்றதால் அவரை 24 மணி நேரமும் மருத்துவ வல்லுநர்கள் கவனித்து வருகின்றனர் என்று அறிக்கைத் தந்தது காவேரி மருத்துவமனை நிர்வாகம். பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் அவரது கோபாலபுர இல்லத்திற்கு வந்துச் சென்றனர். அப்போதே சமூக வலைத்தளங்களில் கலைஞர் இறந்து விட்டார். அதனால் தான் எல்லா கட்சித் தலைவர்களும் வந்து பார்க்கிறார்கள் என்று வதந்தி பரவியது. சிலர் கருணாநிதி உயிரிழந்தால் அது தீபாவளி என்ற கொடூர மனநிலைக்கும் சென்றனர்.
"வதந்திகளை நம்ப வேண்டாம்! திமுக தலைவர் நலமுடன் இருக்கிறார்" என்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பத்திரிகையாளர் சந்தித்து சொன்னார். அதன் பிறகு சற்று குறைந்தது. அதற்கு அடுத்த நாள் பின்னிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டபோதும் எம்பால்மிங் செய்ய தான் என்று பலர் வதந்திகளை பரப்பினர். அதற்கு காரணமாக ஆம்புலன்சில் ஏற்றும் போது கருப்பு கண்ணாடியும், மஞ்சள் துண்டும் போட்டிருந்தார் என்பது தான். நாடித் துடிப்பு குறைந்திருந்தது இரவு இரண்டு மணிக்கு முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசா மருத்துவமனையில் கூடியிருந்த தனது கட்சியினர் முன்பே பத்திரிகையாளரை சந்தித்து திமுக தலைவர் நலமுடன் இருப்பதாக கூறினார். பின்னர் வெளியான மருத்துவ குறிப்பும் அதையே சொன்னது.
பின்னர் மக்கள் கலைந்தாலும், அவர்கள் சந்தேகத்துடனே கலைந்தனர். நேற்று மதியம் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா அவர்களும் ஆளுநர் பன்வரிலால் புரோஹித் அவர்களும் திமுக தலைவர் சந்தித்த படம் வெளியானது. அப்படத்தில் நாடித் துடிப்பு மானியில் அவரது நாடித் துடிப்பு பதிவாகி இருந்தது கூடுதலாக செயற்கை சுவாசமும் பொருத்தப்படாமல் இருந்ததால் பொது மக்களும், திமுக தொண்டர்களும் மகிழ்வுற்றனர் நேற்று இரவு 8.40 மேல் தி.மு.க தலைவர் கலைஞரின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. அதாவது நாடித் துடிப்பு 25 க்கும் கீழ் சென்றதாக சொல்லப்பட்டது. மருத்துவர்களின் தொடர் சிகிச்சைகளுக்குப் பின் நாடித் துடிப்பு 85 ஆகி அவரது உடல் நிலை சீரான நிலைக்கு வந்தது.
ஆனால், அதற்குள் திமுக தலைவர் மறைந்துவிட்டார் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவ திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் குழும தொடங்கினர். பத்து மணிக்கு பேராசிரியர் அன்பழகனும் மருத்துவமனைக்கு வந்தார். பேராசிரியாரே வந்திருக்கிறார் அப்போது தகவல் உறுதி என்று மீண்டும் பரப்பத் தொடங்கினார். இதுவும் வதந்தி தான் என்று காவேரி மருத்துவமனை செய்தி அறிக்கை தெரிவித்தது. அதனை வழி மொழியும் விதமாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பத்திரிகையாளர் சந்திப்பில் பேட்டியளித்தார்.
மு.க அழகிரியோ "அப்பா நல்லா இருக்கிறதுனால தான் நாங்கலாம் வீட்டுக்குப் போறோம் இல்லாட்டினா போவோமா என்று கேட்டு தொண்டர்களின் சந்தேகத்தை தெளிவுப்படுத்திவிட்டு சென்றார். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்ற சொற்றொடருக்கேற்ப இன்னும் எத்தனை வதந்திகள் வந்தாலும் அதனை முறியடிப்பார் திமுக தலைவர் கருணாநிதி என்ற குரல் காவேரியை சுற்றிக் கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஏனெனில் வதந்திகளை முறியடிப்பதிலும் அவர் கலைஞர் என்பது தான் அவரது வரலாறு.