சிறப்புக் களம்

எடப்பாடி பழனிசாமியை சுற்றும் திரிசூல வியூகம் - மீள்வாரா?

எடப்பாடி பழனிசாமியை சுற்றும் திரிசூல வியூகம் - மீள்வாரா?

கலிலுல்லா

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த காலங்களைக்காட்டிலும் தற்போது நெருக்கடி அதிகரித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, திமுக மூன்று தரப்புகளையும் சமாளிக்க வேண்டிய தேவை அவருக்கு எழுந்துள்ளது. இந்த திரிசூல வியூகத்திலிருந்து மீண்டெழுவாரா என்பது குறித்து பார்ப்போம். 

'சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து, தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பர்' என ஓ.பன்னீர் செல்வம் கூறியது அதிமுகவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 'சசிகலாவை அதிமுகவில் சேர்க்க கூடாது' என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கும் நிலையில், ஓ.பி.எஸின் பேச்சு எடப்பாடிக்கு எதிரான மூவ் என கூறப்படுகிறது. அதேபோல கட்சியில் ஜெயக்குமாரை தவிர்த்து, ஜே.சி.டி பிராபகர், செல்லூர் ராஜூ ஆகியோர் ஓ.பி.எஸின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆளும் தரப்பு நெருக்கடி:

தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராக அறியப்படுபவர், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கித் தலைவர், சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியது. வருமானத்திற்கு அதிகமான 3.78 கோடி வரை சொத்து சேர்த்ததாகக் அவர் மீது குற்றம்சாட்டபட்டுள்ளது. மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் நகை மற்றும் பயிர்க்கடனை தள்ளுபடி செய்தபோது இந்த குறிப்பிட்ட கூட்டுறவு வங்கியில்தான் அதிக பயனாளிகள் இருந்ததாக பல விவசாயிகள் சங்கங்கள் குற்றம்சாட்டியிருந்தன.

பின்னர், அக்டோபர் 26ம் தேதி சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், இபிஎஸ்ஸின் அரசியல் தனி உதவியாளராக இருந்த மணி மீது மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ₹13 லட்சம் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. மற்றொருபுறம் கோடநாடு கொலை வழக்கில் ஜெயலலிதா வழக்கறிஞர் கனகராஜின் சகோதரர்கள் இருவர் கைது செய்யபட்டுள்ளனர்.

கட்சி நெருக்கடி:

'அதிமுகவில் சசிகலாவை அனுமதிப்பது குறித்து ஓ.பி.எஸ் கூறிய கருத்தை வரவேற்கிறேன்' என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதையொட்டி, அக்டோபர் 27ம் தேதி நடைபெற்ற தினகரனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஓபிஎஸ்ஸின் தம்பி ஓ.ராஜா கலந்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகின. தொடர்ந்து சசிகலா தென்மாவட்டங்களுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்கிறார். அக்டோபர் 30ம் தேதி முத்துராமலிங்க தேவரின் 59வது 'குரு பூஜை'யில் கலந்து கொள்ள உள்ளார். அதை முன்னிட்டு, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதய குமார், திண்டுக்கல் சீனிவாசன், ராஜன் செல்லப்பா, ராஜேந்திர பாலாஜி, கருப்பசாமி பாண்டியன் ஆகியோருக்கு சசிகலாவை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் தற்போது சாதி அடிப்படையில் பிரிவுகள் வலுவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காரணம் தென் மாநிலத் தலைவர்கள் சசிகலாவை ஆதரிக்கும் சூழலில், கொங்கு நாடு கோஷ்டி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளது. சசிகலாவுடன் தொடர்பில் இருக்கும் கட்சித் தலைவர்கள் மற்றும் அலுவலகப் பொறுப்பாளர்களை நீக்க இபிஎஸ் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், அதில் தான் பிரச்னை இருக்கிறது. கட்சியிலிருந்து ஒருவரை நீக்க வேண்டுமென்றால் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இணைந்து ஒருமனதாக முடிவெடுக்க வேண்டும் என்பது தான் கட்சி விதி. எடப்பாடி பழனிசாமியால் மட்டும் சுயமாக ஒருவரை கட்சி பொறுப்பிலிருந்து நீக்கவிட முடியாது.

இந்த நிலையில் தான் அதிமுகவின் அமைப்பு செயலாளர் ஜேசிடி பிரபாகரின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. சசிகலாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று ஓபிஎஸ் கூறியதில் எந்தத் தவறும் இல்லை என்று கட்சியின் மூத்த தலைவர் ஜேசிடி பிரபாகர் 'தி ஃபெடரல்' தளத்துக்கு தெரிவித்தார்.

''ஓ.பன்னீர்செல்வத்துக்கு தனது சொந்த கருத்தை வெளிப்படுத்த கூட உரிமை இல்லையா?. கட்சிக்கு முடிவெடுக்கும் என்று தானே கூறியிருந்தார். சசிகலாவை சந்திப்பவர்களில் பெரும்பாலானோர் அதிமுக முன்னாள் உறுப்பினர்கள். அவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் அதிமுகவில் இருந்தவர்கள். இன்னும் அதிமுக கார்டு வைத்திருக்கலாம்'' என்றார்.

சசிகலாவின் சுற்றுப்பயணம், ஓ.பி.எஸின் சசிகலா ஆதரவு நிலைபாடு, திமுக அரசின் ரெய்டு வேட்டை, சசிகலாவுக்கான கட்சியின் தென்மாவட்ட நிர்வாகிகள் ஆதரவு ஆகியவை கழுத்தை சுற்றும் பாம்பாக எடப்பாடி பழனிசாமியை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. அதிலிருந்து அவர் மீள்வாரா? மீண்டும் தன்னை நிரூபிப்பாரா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.