சிறப்புக் களம்

திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்தார் : கண்ணீர் வெள்ளத்தில் தொண்டர்கள்..!

திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்தார் : கண்ணீர் வெள்ளத்தில் தொண்டர்கள்..!

webteam

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில ஆண்டுகளாக வயது முதிர்வின் காரணமாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார். அவ்வப்போது தொண்டர்களையும் சந்தித்து வந்தார். இதனிடையே கடந்த 2016-ம் ஆண்டு சுவாசக் கோளாறு காரணமாக கருணாநிதிக்கு ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை, அதனை மாற்றுவதற்காக மருத்துவமனைக்குச் சென்று உடலை பரிசோதித்து வந்தார். சமீபத்திலும் அவர் இதற்காக சிகிச்சை மேற்கொண்டிருந்தார். இதனிடையே சமீபத்தில் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த காவேரி மருத்துவமனை, கருணாநிதி உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, 24 மணி நேரமும் மருத்துவர்கள் அடங்கிய குழு கருணாநிதியை வீட்டிலேயே கண்காணித்து வந்தனர்.

இதனையடுத்து, கருணாநிதியின் உடலில் நலிவு அதிகமானதை அடுத்து, கடந்த ஜூலை 27ம் தேதி நள்ளிரவில் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் காவேரி மருத்துமனையில் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அனுமதிக்கப்பட்டது முதலே தொண்டர்கள், மருத்துவமனை வளாகத்தில் குவிய தொடங்கினர். அரசியல் தலைவர்கள், உறவினர்கள் பலரும் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து சென்றனர்.

இந்நிலையில், ஜூலை 29ம் தேதி கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், ‘கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது. மருத்துவ சிகிச்சைக்கு கருணாநிதி முழு ஒத்துழைப்பு தருகிறார்’ பின்னர் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. அதன்பிறகு கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாக கூறப்பட்டது. ராகுல்காந்தி சந்தித்து சென்ற பின்னர் வெளியிடப்பட்ட புகைப்படமும் நம்பிக்கை தரும் வகையில் இருந்தது. அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றே ஒரு கட்டத்தில் கூறப்பட்டது.

ஆனால், நேற்று காலை முதலே கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதனை உறுதிசெய்யும் வகையில், காவேரி மருத்துவமனை நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையும் இருந்தது. அந்த அறிக்கையில், ‘கருணாநிதியின் வயது காரணமாக அவரது முக்கிய உறுப்புகளை சீராக வைத்திருப்பதில் சவாலாக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதோடு, ‘கருணாநிதியின் உடல் நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை அடுத்த 24 மணி நேரம் கண்காணிக்க வேண்டியுள்ளது’ என்றும் கூறப்பட்டது. காவேரி மருத்துவமனையின் இந்த அறிக்கை தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று மாலை முதலே திமுகவினர் காவேரி மருத்துவமனை நோக்கி படையெடுத்தனர். 

இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து இன்று காவேரி மருத்துவமனை முக்கிய அறிக்கை வெளியாகும் என்ற கூறப்பட்டது. இதனிடையே, திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அழகிரி முதலமைச்சர் பழனிசாமியை பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர். கருணாநிதியின் உடல்நிலை குறித்து முதல்வரிடம் பேசியதாக தெரிகிறது. 

இந்நிலையில், உடல்நலக் குறைவால் அவதியுற்ற திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது உயிர் இரவு  மாலை 6.10 மணியளவில் உயிர் பிரிந்தது. திமுக தலைவரின் இறப்பு செய்தி கேட்டு தொண்டர்கள் சோகத்தில் மூழ்கினர்.

இதனைடுத்து கருணாநிதியின் மறைவிற்கு பல தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் திமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். தமிழகத்தின் மூத்த தலைவராக விளங்கிய கருணாநிதியின் மறைவு தமிழக மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகமும் முதுபெரும் தலைவரை இழந்துவிட்டது.