சிறப்புக் களம்

“ரஜினி நல்ல மனிதர்; மாற்றம் நிகழப்போவது உறுதி" -மாற்றுக் கூட்டணிக்கு வித்திடுகிறதா தேமுதிக

“ரஜினி நல்ல மனிதர்; மாற்றம் நிகழப்போவது உறுதி" -மாற்றுக் கூட்டணிக்கு வித்திடுகிறதா தேமுதிக

webteam

தமிழக அரசியலில் மிகப்பெரும் ஆளுமைகள் என்று சொல்லப்பட்ட கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவரின் சிம்மக்குரலும், பேச்சின் திறமையும், இரக்க குணமும் அனைவரையும் கவர்ந்தது என்றே சொல்லலாம்.

2005-ஆம் ஆண்டு தேமுதிகவை தொடங்கிய விஜயகாந்த், ஓராண்டிலேயே தேர்தலில் தனித்து போட்டியிட்டு 8.38 சதவீத வாக்குகளை பெற்றார். அதற்கடுத்து 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் தனித்து போட்டியிட்டு 10.3 சதவீத வாக்குகளை பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் போட்டியிட்ட தேமுதிகவின் வாக்கு சதவீதம் 7.9 ஆக குறைந்தது. 2014-ல் அது 5.1ஆக சரிந்தது. தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவின் வாக்கு சதவீதம் 2.39 ஆக குறைந்தது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தேமுதிகவின் வாக்கு சதவீதம் 2.19 ஆக மேலும் சரிந்தது.

விஜயகாந்திற்கு உடல்நலம் ஒத்துழைக்காமல் போனதிற்கு பிறகே அக்கட்சியின் வாக்கு சதவீதம் குறையத் தொடங்கியது என்று சொன்னால் அது மிகையல்ல. இதையடுத்து தேமுதிகவின் பொருளாளராக பொறுப்பேற்ற பிரேமலதா விஜயகாந்த், கடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். இது ஒரு புறம் இருக்க அரசியல் ஆளுமைகளாக இருந்த கருணாநிதியும், ஜெயலலிதாவும் மறைந்த பிறகு சினிமாவில் ஜாம்பவான்களாக திகழ்ந்த கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் அரசியலுக்கு பச்சைக்கொடி காண்பித்தனர்.

கமல் அரசியலுக்குள் நுழைந்து தேர்தலையும் சந்தித்து கணிசமான வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் ரஜினிகாந்த் 2021 சட்டப்பேரவை தேர்தலில் களம் இறங்குகிறோம் என அறிவிப்பை மட்டும் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டிருந்தார். ரஜினியின் அரசியல் வருகையை பலரும் விமர்சித்தனர்.

ஏன் பிரேமலதா விஜயகாந்தே, கொள்கை என்னவென்று தெரியாதவர் கட்சி தொடங்குவது ஏன் என்று ரஜினிகாந்தை விமர்சித்தார். போதாக்குறைக்கு அவரது மகன் விஜய பிரபாகரன் அதிமுக, திமுக உள்ளிட்ட எவரையும் விட்டுவைக்காமல் சரமாரியாக சாடி வந்தார். தேர்தல் கூட்டணிக்காக அதிமுகவும் திமுகவும் விஜயகாந்தை சந்தித்தபோது, கூட்டணிக்காக அனைவரும் மறைமுகமாக எங்கள் காலில் வந்து விழுகிறார்கள் என பொதுமேடையில் பேசினார்.

இதனால் அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் முற்றியது. ஆனால் மக்களவை தேர்தலில் அதிமுகவுடனே கூட்டணி வைத்தது தேமுதிக. அதற்கு முன்னர், அதிமுக-திமுக இரண்டு கட்சிகளிடமுமே தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியது பலராலும் விமர்சிக்கப்பட்டது. ஆனால் மக்களவை தேர்தலில் தேமுதிகவின் வாக்குவங்கி மிகவும் குறைந்தது.

தற்போது மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதி முடிவடைகிறது. இந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் மார்ச் 26-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் ஆளும் கட்சியான அதிமுக வேட்பாளர்களை அறிவிக்காமல் இருக்கும் வரையில் கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக வாய்ப்பு அளிக்குமா? என்ற கேள்வி எழுந்தது. குறிப்பாக தேமுதிக ஒரு சீட்டை பெற்றுவிட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்தது.

“தேர்தலில் கூட்டணி அமைக்கும்போது அதிமுகவினர் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாகக் கூறினார்கள். நாங்கள் கூட்டணி தர்மத்தோடு இருக்கிறோம்'' என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தேமுதிகவின் கோரிக்கை குறித்து பதிலளித்த தமிழக முதலமைச்சர் “வீட்டில் பெண் இருந்தால் திருமணம் செய்ய கேட்பதைபோல், கூட்டணி கட்சியினரும் சீட் கேட்கத்தான் செய்வார்கள்”என்று பொத்தாம்பொதுவாக பதிலளித்து தேமுதிகவின் நம்பிக்கையை உடைத்தார்.

இப்படி தேமுதிகவுக்கு சீட் கிடைப்பது கனவாகிக் கொண்டிருந்த நேரத்தில் தேமுதிகவின் சுதீஷ், முதலமைச்சரையும், துணை முதல்வரையும் வீட்டிற்கு சென்றே சந்தித்தார். இதனால் தேமுதிகவுக்கு அதிமுக சீட் வழங்குமா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. இதைத்தொடர்ந்து அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றன. தேமுதிக இடம் பெறவில்லை.

இதனால் தேமுதிக கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. மாநிலங்களவை சீட் குறித்து நேரடியாகவே பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டும், பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் கூட தேமுதிகவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால் தேமுதிகவிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டே இந்த முடிவை அதிமுக எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கையை தேமுதிக யோசிக்க தொடங்கியுள்ளதாகவே சமீபத்தில் வெளியாகும் கருத்துகள் தெரிவிக்கின்றன. அதாவது, ரஜினிகாந்த் “ கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை. நேர்மையான, திறமையானவர்களுக்கு முதல்வர் வாய்ப்பு. மற்றக் கட்சியில் திறமையுள்ளவர்களுக்கும் வாய்ப்பு ” போன்ற 3 திட்டங்களை பரபரப்பாக அறிவித்தார். இதுகுறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த் “ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர். விஜயகாந்திற்கும், எங்களது குடும்பத்திற்கும் அவர்மேல் ஒரு மரியாதை உண்டு.

ரஜினிகாந்த் தன் அரசியல் நிலையை தெளிவாக கூறிவிட்டார். கருணாநிதியும் இல்லை, ஜெயலலிதாவும் இல்லை. அதனால் தமிழகத்தில் ஒரு வெற்றிடம் உள்ளது என்று ரஜினி கூறுகிறார். வருகிற 2021‌‌ தேர்தலில் இதற்கெல்லாம் ஒரு நல்ல முடிவு வரும். நிச்சயம் மாபெரும் ஒரு மாற்ற‌ம் தமிழக அரசியலில் நிகழப்போவது உறுதி என்பது எங்களது கருத்தும் கூட”எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே கமலும் ரஜினிகாந்தும் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது என்ற பேச்சு நிலவி வரும் நிலையில், தற்போது விஜயகாந்தையும் அந்த கூட்டணியில் இணைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பிரேமலதா உள்ளாரா என்ற கேள்வி எழும்பியுள்ளது.