“ஊரில் இருக்கும்போது ஆலமரம், அம்மன் கோயிலில் எல்லாம் தன்னிலை மறந்து படுத்துக்கிடப்பார்கள். சென்னையில் அப்படி படுத்துக்கிடப்பவரை நான் பார்த்ததே இல்லை. இங்கு ஒண்ணுமே செய்யாமல் காலையில் இருந்து சும்மா உட்காரவே முடியாது. அப்படி உட்காரும் இடமும் சென்னை கிடையாது. அப்படியும் உட்கார்ந்தால் இங்கிருப்பவர்கள் அடித்து விரட்டிவிடுவார்கள். இல்லையென்றால் இடம் கொடுக்கமாட்டார்கள். சென்னையில் சோம்பேறிகள் இல்லை. பிச்சைக்காரர்கள்கூட நடந்துகொண்டுதான் இருக்கிறார்கள். சென்னை மக்களுக்கு உழைக்கக் கற்றுக்கொடுத்திருக்கிறது” என்று உழைப்பின் அருமையைப் பேசுகிறார், இயக்குநர் மாரி செல்வராஜ். சென்னையின் 382-வது தினத்தையொட்டி அவரிடம் பேசினோம், எதார்த்தமாக மனதில் உள்ளதை பளிச்சென்று பேசினார்.
”சினிமா கனவுகளுடன் தான் கடந்த 2005 ஆம் ஆண்டு சென்னை வந்தேன். வந்த புதிதில் சென்னை எனக்கு பயம் காட்டியது. காடு மாதிரி இருந்தது. பிடிக்காமல்கூட போனது. ‘சென்னையா நம்மளா பார்த்துடுவோம்டா’ என்ற மன உறுதியை சென்னைதான் கொடுத்தது. என்னிடம் ஒரு வாழ்க்கை, எனக்கென்று ஒரு அரசியல், ஒரு புரிதல், ஒரு அதிகாரம் இருக்கிறது. இதை வைத்துதான் சென்னையில் வாழ ஃபைட் பண்ணேன். சொன்னால் நம்பமாட்டீர்கள். சென்னையில் எனக்கு அதிக நண்பர்கள் கிடையாது. நான், சென்னையை சுற்றியதும் இல்லை. ராம் சாரோட ஆஃபிஸை விட்டு அதிகம் சென்றதில்லை. எல்லா உதவி இயக்குநர்கள் வாழ்க்கை போன்று என் வாழ்க்கை கிடையாது. ஆனால், சென்னை என் வாழ்வில் ஆகச்சிறந்த இரண்டு நல்ல மனிதர்களை அறிமுகப்படுத்தியது. அது, என் ராம் சாரும் ரஞ்சித் அண்ணாவும்தான்.
சென்னைக்கு வந்ததிலிருந்து நான் பெரிய மாற்றமாக நினைப்பது சென்னை வாழத்தகுதியற்ற ஊர், தண்ணி பஞ்சம் என்றெல்லாம் கிராமங்களில் பேசுவார்கள். இப்போது, அப்படி பேசுவதை பார்க்க முடிவதில்லை. தண்ணீர் பஞ்சமும் இப்போது குறைவுதான். வாடகை வீடுகளிலும் அதிகத் தண்ணி யூஸ் பண்ணாதீங்கன்னு சொல்வதில்லை. எப்படி இந்த மாற்றம் வந்தது என்று தெரியவில்லை. ஆனால், சென்னையைத் திட்டுவது குறைந்திருக்கிறது. அப்போல்லாம், சென்னைக்கு ஊருலருந்து ஒருத்தன்தான் வருவான். இப்போ, எல்லா வீட்டிலிருந்தும் ஒருவர் சென்னையில் இருக்கிறார்கள். அதனால், கிராமங்களில் வசிப்பவர்களுக்கும் சென்னை நெருக்கமான ஊராகிடுச்சு” என்பவரிடம் "உங்கள் வளர்ச்சியில் சென்னை எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கு?” என்று கேட்டோம்,
“சென்னை இல்லை என்றால், கோவை சென்றிருப்பேன். அவ்வளவுதான். சென்னையை ரொமாண்டிசைஸ் பண்ண விரும்பவில்லை. இதே சென்னைக்கு சினிமா கனவுகளோடு, எனக்கு முன்னாடி வந்தவர்கள் பலர் தோற்றுப் போயிருக்கிறார்கள். வந்தவர்கள் பலர் பைத்தியம் ஆகியிருக்கிறார்கள். நான் மட்டும் ஜெயிச்சிட்டு வந்துட்டு எனக்கு சென்னைதான் எல்லாம் கொடுத்தது என்று சொல்ல முடியுமா? யாரோ ஒருவர்தான் ஜெயிக்கிறார். அதனால், தோற்றதற்கும் நகரம் பொறுப்பாவாது ஜெயித்ததுக்கும் நகரம் பொறுப்பாவாது. ஆனால், நகரம் சார்ந்த சென்னை வாழ்க்கையில், உனக்காக நீதான் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன்.
நாம் காலையில் எழுந்து நம் வேலைகளைப் பார்க்க ஓடினால், கிராமத்தில் படுத்துக்கொண்டு கிண்டல் செய்வார்கள். அன்று எனக்கு அது சுகமாகத் தெரிந்தது. ’ஊருலல்லாம் ஜாலியா இருக்காங்களே. இங்க அப்படி இல்லையே’ என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். ஆனால், அப்படியான, மனநிலையை சென்னை மாற்றியது. நகரத்தில் நம்மை தக்க வைக்க கடுமையான உழைப்பை நகரம் கேட்கிறது. இங்கு உழைக்காமல் இருக்க முடியாது என்று நகரம் கற்றுக் கொடுத்திருக்கிறது.
சென்னையில் கீழிருந்து மேல்வரை அடித்தட்டு மக்களின் உழைப்பையும் பார்த்திருக்கிறேன். பணக்காரரின் உழைப்பையும் பார்த்திருக்கிறேன். ஆனால், ரெண்டு பேருமே சரிக்கு சமமாகத்தான் உழைக்கிறார்கள். திருநெல்வேலியில் ஆறு மாதம்கூட வேலைக்குச் செல்லாமல் இருக்க முடியும். ஆனால், இங்கு ஆறு நாள் கூட வேலைக்குப் போகாமல் இருக்க முடியாது. அப்படி உயிர் வாழணும்னா நீ உழைச்சிதான் ஆகணும்ங்கிறதை நகரங்கள்தான் சொல்லிக் கொடுத்தது.
என்ன கனவு வேண்டுமென்றாலும் வைத்துக்கொள். கனவு என்பது வேறு. ஆனால், நீ வாழ்வதற்கே உழைத்துதான் ஆகவேண்டும் என்பதை சென்னை உணர்த்துகிறது. அதேபோல, உழைக்காமல் ஏமாற்றி வாழ்வது என்பது சென்னையில் ரொம்பக் கம்மி. ஏதோ ஒரு வகையில் தினமும் உழைச்சிக்கிட்டே இருக்கணும் என்ற மனநிலையைக் கொடுக்கிறது. வீட்டை விட்டு வெளியில் வந்தால் நமக்கே ஒரு குற்ற உணர்ச்சியை கொடுத்துவிடும் சென்னை. அவ்ளோ பேர் வேகவேகமாக வேலைக்கு போய்ட்டே இருப்பாங்க. எல்லோர் முகத்திலும் எதோ ஒன்றை அடைந்தே தீரவேண்டும் என்பது ஓடும். அதுவே, மாலை நிம்மதியாக வருவார்கள். காலை, மாலை அவர்களுக்குள் ஒரு பெரிய போராட்டம் நடக்கும். சிக்னலில் போய் நின்றால், எல்லோர் முகத்திலும் ஒவ்வொரு கதை ஓடிக்கொண்டிருக்கும். அதுவே, கிராமத்தில் ஆற்றில் குளித்துவிட்டு வந்தால் எல்லார் முகத்திலும் ஒண்ணே ஒண்ணுதான் ஓட்டிக்கிட்டிருக்கும். ’இன்னைக்கு வீட்டுல என்ன குழம்பு வச்சிருக்காங்க’ என்பதுதான். அதனால், சென்னை வாழ்க்கையில் நம்ம கஷ்டம் மற்றவர்கள் முன்பு பெரிய கஷ்டமாக தெரியாது. எல்லோரும் சமமாகத்தான் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள்”.