சிறப்புக் களம்

ஆளுநர் அறிக்கை - இதை கவனித்தீர்களா ?

ஆளுநர் அறிக்கை - இதை கவனித்தீர்களா ?

webteam

ராஜீவ் காந்தி வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது. அது கிடைத்தது என்பதை உறுதிப்படுத்தியும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதையும் ஆளுநர் மாளிகை விளக்க அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறது. 

அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது என்ன ? 

* ராஜீவ் வழக்குத் தொடர்பாக மத்திய உள்துறைக்கு எதுவும் தெரிவிக்கவில்லை.
* ராஜீவ் வழக்கு மிகவும் சிக்கலான ஒன்று. 
* விடுதலை தொடர்பாக சட்ட, அரசியல் சாசன, நிர்வாக ரீதியிலான ஆய்வுகள் தேவை.
* விடுதலை செய்யக் கோரிய பரிந்துரையோடு  மாநில அரசு சார்பில் அதிக அளவில் ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளன. 
* உரிய கவனம் கொடுக்கப்பட்டு சரியான முடிவெடுக்கப்படும். 
* தேவைப்படும் பட்சத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும். 
* அரசியல் சாசனத்தை பின்பற்றி பாரபட்சமில்லாத முடிவெடுக்கப்படும்.

கவனிக்க வேண்டியது

சிக்கலானது மற்றும் அதிக ஆவணங்கள் : ராஜீவ் காந்தி வழக்கு என்பது பல்வேறு படிநிலைகளைத் தாண்டி தற்போது ஒரு கட்டத்தில் வந்து நிற்கிறது. இதுவரை பல வழிகளில் முயன்றாலும் கூட, ஆளுநர் தண்டனை குறைப்பை செய்யலாம் என்பதன் மூலம் மாநில அரசுக்குக் கூடுதல் பலம் கிடைத்த உணர்வை இது ஏற்படுத்தியிருக்கிறது. சிக்கல் என்று சொல்வதன் மூலமும் அதிக ஆவணங்கள் என்று சொல்வதன் மூலமும் ஆளுநரின் முடிவு தள்ளிப் போகும் என்பதை பார்க்க முடிகிறது

நிர்வாக ரீதியில் முடிவு

சாதாரணமாக ஆளுநரின் முடிவுகள் அரசு பரிந்துரை ஏற்றோ அல்லது தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சட்ட அடிப்படையிலேயே இருக்கும். ஆனால் இங்கு ஆளுநர் தரப்பில் சட்ட, நிர்வாக, அரசியல் சாசன அடிப்படையில் இருக்கும் என ஆளுநர் தெரிவிப்பதன் மூலம், இதில் ஆளுநரின் முடிவு தமிழக அரசின் பரிந்துரை அடிப்படையில் மட்டும் இல்லை எனத் தெரிகிறது. 

தேவைப்படும் பட்சத்தில் ஆலோசனை

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்ததும் அதிகம் பேசப்பட்ட வார்த்தை ஆலோசனை. இங்கு ஆளுநருக்கு தமிழக அரசே, அரசு வழக்கறிஞரின் ஆலோசனை மூலம் பரிந்துரைத்திருக்கும் நிலையில் யாருடைய ஆலோசனை தேவைப்பட போகிறது ? என்ற கேள்வி உருவாகிறது. தங்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என உள்துறை அதிகாரிகள் கூறி வரும் நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் மத்திய அரசே உகந்த அரசு என கூறியுள்ள நிலையில், யாருடைய ஆலோசனையை ஆளுநர் கேட்க வேண்டும் என்பது மறைமுகமாக தெரிகிறது. 

பாகுபாடற்ற, அரசியல் சாசன அடிப்படையில் முடிவு

தொடர்ந்து இரண்டு இடங்களில் இந்த வார்த்தை அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை பொருத்தவரை அரசியல் சாசனமானது,  தனி மனித உரிமை, மாநில அரசு உரிமை, மத்திய அரசு உரிமை ஆகியவற்றை பேசும் ஒன்றாக இருக்கிறது. ஆனால் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புகளில் தனிமனித உரிமையும், மாநில அரசு உரிமையும் முழுமையாக மறுக்கப்பட்டு மத்திய அரசுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது பார்க்க வேண்டிய ஒன்று.