சிறப்புக் களம்

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு ! ஒரு துயரமான 'பிளாஷ்பேக்'

webteam

1992 - 1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த காலக் கட்டத்தில் கொடைக்கானலில் அரச வரையறை செய்திருக்கும் வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகளை மீறி ஏழு மாடிகள் கொண்ட பிளசன்ட் ஸ்டே ஓட்டலுக்கு சட்ட விரோதமாக அனுமதி அளித்தது தொடர்பாக கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி 2000 ஆம் ஆண்டில் வழக்கை விசாரித்த இரண்டாவது தனி நீதிபதி ராதாகிருஷ்ணன் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து கொள்ள அனுமதி அளிக்கும் வகையில் மார்ச் 3 ஆம் தேதி 2000 ஆண்டு வரை வரை தீர்ப்பின் அமலாக்கத்தை நிறுத்தியும் வைத்தார்.

ஆனால், அப்போது இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டனர். அப்போதுதான் சுற்றுலா முடிந்து கோவை திரும்பிக்கொண்டிருந்தனர் வேளாண் பல்கலைக்கழக மாணவ மாணவியர். வேளாண் கல்லூரியின் பேருந்து அப்போதுதான் தர்மபுரி வந்துக்கொண்டிருந்தது. அதற்கு முன்பாகவே தர்மபுரியில் பெரும் களபேரம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. 

அப்போது பேருந்து இலக்கியம்பட்டி என்ற இடத்திற்கு அருகில் வரும்போது சாலை மறியலில் ஈடுபட்டு இருந்தனர். பேருந்து சாலையிலேயே நிறுத்தப்பட்டது. இதனையடுத்து பேருந்தில் இருந்து சில மாணவ மாணவியர்கள் பேருந்தில் இருந்து கீழே இறங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது பேருந்தின் உள்ளயே 20 மாணவ மாணவியரும் இருந்தனர். சாலை மறியல் போராட்டம் வன்முறையாக மாறுகிறது. இதற்கு பயந்து பேருந்தின் உள்ளே இருந்த மாணவிகள் பேருந்தின் ஜன்னல்களை அடைக்கின்றனர்.  

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த சிலர் ஏற்கெனவே தயாராக கையில் இருந்த பெட்ரோலை பஸ்ஸின் முன்பகுதியில் ஊற்றி தீ வைத்துவிடுகின்றனர். இதனால் அலறியபடி சில மாணவ மாணவியர் பேருந்தில் இருந்து வெளியேறுகின்றனர். ஆனால் பேருந்து தொடர்ந்து தீப்பெற்ற எரிகின்றது. அக்கம்பக்கத்து மக்கள் தீயை அணைக்க தண்ணீரை கொண்டு வந்து போராடுகின்றனர். இந்தப் போராட்டத்தில் அனைவரின் கண் முன்பும் சென்னையை சேர்ந்த ஹேமலதா, விருத்தாசலத்தை சேர்ந்த காயத்ரி, நாமக்கல்லை சேர்ந்த கோகிலவாணி மூவரையும் பேருந்து தீயில் இரையாகினர். 

இந்த சம்பவத்தில் அ.தி.மு.க.வினர் 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடந்து வந்த அந்த வழக்கில், ‘சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள். எனவே வேறு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்ற வேண்டும்' என இறந்துபோன மாணவி கோகிலவாணியின் அப்பா வீராசாமி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இதையடுத்து, 2003- ஆம் ஆண்டு இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த முனியப்பன், நெடுஞ்செழியன், ரவீந்திரன் ஆகிய 3 பேருக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பரில் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். இது தவிர சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 25 பேருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த வழக்கின் மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தபோது தண்டனைகள் உறுதி செய்யப்பட்டன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள், ஜிஎஸ் சிங்வி, பி.எஸ். சௌகான் ஆகியோர் விசாரித்தனர். சமூகத்துக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான, ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனக் கூறிய நீதிபதிகள், கீழ் நீதிமன்றத்தின் தண்டனையை, கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி உறுதி செய்தனர். இதையடுத்து, குற்றவாளிகள் மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர்.

இந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மூவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மறு ஆய்வு மனு கடந்த 2011- ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சுதர்ஷன் ரெட்டி மற்றும் எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகியோர் கொண்ட அமர்வு, குற்றவாளிகள் மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை 2016 ஆம் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குற்றவாளிகள் நெடுஞ்செழியன், முனியப்பன், ரவீந்திரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையை குறைத்ததோடு, உணர்ச்சிவசப்பட்டு செய்யப்பட்ட தவறு என்பதால் தண்டனை குறைக்கப்பட்டதாகவும், கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பேருந்து எரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். இப்போது தமிழக ஆளுநரின் பரிந்துரைப்படி அந்த மூவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.