சிறப்புக் களம்

தாமதமானது கடிதம்: சிதைந்தது இளம்பெண்ணின் அரசு வேலை கனவு

webteam

அரசுப்பணியில் சேர வேண்டுமென்பது, சாமானிய மக்களின் கனவுகளில் ஒன்று. அப்படிப்பட்ட தன் கனவு, தபால்துறையினரின் அலட்சியத்தால் சிதைந்துவிட்டதாக வேதனைப்படுகிறார் கோவையை சேர்ந்த பட்டதாரி இளம்பெண்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள சாந்தி நகரில் வசித்து வருபவர் வித்யா. இருசக்கர வாகனத்தில் சென்று பாத்திர வியாபாரம் செய்து வரும் சோமசுந்தரம் என்பவரது மகளான இவர், தனது ஏழ்மையான நிலையில் சிரமப்பட்டு பி.எஸ்.சி பட்டபடிப்பை முடித்துள்ளார். அரசுப்பணியில் சேரவேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்த வித்யா தமிழக நில அளவை பதிவேடுகள் துறையில் காலியாக இருந்த பதிவறை எழுத்தர் பணிக்கு விண்ணப்பத்துள்ளார். பணிக்கான அனைத்து தகுதிகளும் இருந்த காரணத்தினால் அவரை இப்பணிக்கான நேர்முக தேர்விற்கு வருமாறு, துறை சார்பில் கடந்த 12 ம் தேதி அழைப்பாணை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் 16ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஊட்டி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெறும் நேர்முக தேர்விற்கு வருமாறு தெரிவிக்கபட்டிருந்தது. 

இக்கடிதம் மேட்டுப்பாளையம் தலைமை தபால் அலுவலகத்திற்கு கடந்த 14ஆம் தேதி வந்தடைந்துள்ளது. வித்யா வசிக்கும் சாந்தி நகர் விலாசம் மேட்டுப்பாளையம் தலைமை தபால் அலுவலகத்திற்கு நேர் பின்புறத்திலேயே உள்ளது. 14ஆம் தேதி தபால் நிலையம் வந்த கடிதம் 16ஆம் தேதி மதியம் 1.40 மணிக்கு வித்யாவிடம் வழங்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணிக்கு பங்கேற்க வேண்டிய நேர்முக தேர்வு கடிதம் மதியம் இரண்டு மணியளவில் கொடுக்கப்பட்டதால் வித்யா அதிர்ச்சியடைந்தார்.

தனது அரசுப்பணி கனவு ஒரு சிலரின் அலட்சியத்தால் சிதைக்கப்பட்டு விட்டதாக கண்ணீருடன் தெரிவிக்கிறார். தாமதம் பற்றி புகார் தெரிவிக்க தலைமை தபால் அலுவகம் சென்ற வித்யாவிடம் இதுகுறித்து புகார் கடிதம் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அங்குள்ள அதிகாரிகள் அலட்சியத்துடன் பதிலளித்துள்ளனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் தலைமை தபால்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது வித்யாவிடம் அளித்த அதே பதிலை நம்மிடமும் தெரிவித்தனர்.