சிறப்புக் களம்

திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!

webteam

அருள்நிதி நடிப்பில், விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கியிருக்கும் திரைப்படம் டி ப்ளாக். தற்போது திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த சினிமா எப்படி எனப் பார்க்கலாம்.

திகில் கதைகளைப் பொறுத்தவரை கதையின் ஒன்லைனை விடவும் அதன் பிரசண்டேஷனே முக்கியம். அதே நேரம் ஒன்லைனும் கொஞ்சம் அழுத்தமாக இருக்க வேண்டும். டி ப்ளாக் இதில் எந்த வகையிலும் சேராமல் போனதே சோகம்.

வெள்ளியங்கிரியின் அடர்ந்த வனப் பகுதியில் இருக்கிறது ஒரு கல்லூரி. அதில் முதலாமாண்டு மாணவனாக வந்து சேர்கிறார் அருள்நிதி. ஏற்கனவே அங்கு பல மர்ம கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. சிறுத்தை அடித்துக் கொல்வதாக சொல்லப்படுவதால் அக்கல்லூரி மாணவிகள் மாலை ஆறு மணிக்கு மேல் வெளியே செல்ல அனுமதி இல்லை. இப்படி திகில் கிளப்பும் கல்லூரியைச் சுற்றி நடக்கும் கொலைகளுக்கு என்ன காரணம், யார் காரணம் என்ற உண்மை தெரியவரவும் ஹீரோ அதனை எப்படிக் கையாண்டார் என்பதே திரைக்கதை.

மேலுள்ள பத்தியை படித்தால் கதை கொஞ்சம் கன்வின்ஸிங்காக இருப்பது போல தோன்றலாம். ஆனால் கதையில் நடக்கும் கொலைகளுக்கு என்ன காரணம் என நமக்கு தெரியவரும் போது ‘என்ன சின்னப் புள்ளத் தனமா சினிமா பண்ணி இருக்கீங்க’ என்று தான் நினைக்கத் தோன்றும். அருள்நிதி தன்னுடைய சினிமா கரியரில் பல நல்ல கதைகளைத் தேடித் தேடி தேர்வு செய்து நடிக்கக் கூடியவர். அப்படியொரு நபரிடம் இப்படியொரு கதையை சொல்லி இயக்குநர் விஜய் குமார் ராஜேந்திரன் எப்படி கன்வின்ஸ் செய்தார் என்று தெரியவில்லை.

கொலையான ஒரு நபரை உண்மையில் சிறுத்தை அடித்ததா., இல்லை மரணத்திற்கு வேறு காரணமா என தெரிந்து கொள்வது ரசிகர்களுக்கு வேண்டுமானால் கடினமாக இருக்கலாம்., வனத்துறைக்கு கடினமில்லை. ஆனாலும் தொடர் கொலைகள் சிறுத்தை அடித்ததாகவே சொல்லி கதை நகர்கிறது.

நடிப்பை பொறுத்தவரை யாருக்குமே நடிப்பதற்கான பெரிய ஸ்கோப் இல்லாததால் யாரையும் குறை சொல்ல இயலாது. அருள்நிதி கல்லூரி மாணவனாக கச்சிதமாக பொருந்தியே இருக்கிறார். உடன் நடித்திருக்கும் ஆதித்யா கதிர் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். நடிகராகவும் வந்து போகிறார் டி ப்ளாக்கின் இயக்குநர். நாயகி அவந்திகா மிஸ்ராவுக்கு காட்சிகள் மிகக் குறைவு. ஆனால் அருள் அவந்திகா ஜோடி நன்றாக உள்ளது. கரு பழனியப்பன், ரமேஷ் கண்ணா, தலைவாசல் விஜய் என பல சீனியர்களின் கால்ஷீட்டை வாங்கி பயன்படுத்தாமல் போட்டுவிட்டார் இயக்குநர்.

அரவிந்த் சிங் ஒளிப்பதிவு இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு வெளியான சில திகில் படங்களை நினைவுபடுத்துகிறது. கொஞ்சம் அப்டேட்டாக லைட்டிங் செய்திருக்கலாம். இசையும் சுமார் என்பதால் திகிலையும் பயத்தையும் நாம் எங்குமே உணர முடியவில்லை.

கொலை வெளியே தெரிந்தால் கல்லூரிக்கு கெட்ட பெயர் என்கிறார்கள். ஆனால் அது என்ன என்பது தான் கடைசி வரை விளங்கவில்லை. திரையில் வந்து போகும் மர்ம நபருக்கு மேக்அப் ஆவது கொஞ்சம் சீரியஸாக செய்திருக்கலாம். சரி போகட்டும். டி ப்ளாக் அருள் நிதியின் சினிமா கரியரில் ஒரு திருஷ்டியாக இருக்கட்டும். அடுத்த முறையாவது நம்மைப் பயமுறுத்துவாரா இயக்குநர் என பார்க்கலாம். டி ப்ளாக் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.