ஐபிஎல் களத்தில் புகுந்து விளையாடும் கொரோனா! - வீரர்களுக்கு பயோ பபுள் கட்டுப்பாடுகள்
இந்தியாவில் தற்போது கொரோனா நோய் தொற்று பரவலின் தீவிரம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த மார்ச் 24 முதல் ஏப்ரல் 6 வரையிலான நாட்களில் புதிதாக 10,67,727 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடர் வரும் 9 ஆம் தேதி துவங்கி மே 30 வரை இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ளது பிசிசிஐ.
சென்னை, மும்பை, டெல்லி, அகமதாபாத், பெங்களூரு மற்றும் கொல்கத்தா என ஆறு மைதானங்களில் மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்பட உள்ளது. இதற்கு காரணம் கொரோனாதான். வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த ஏற்பாடு என பிசிசிஐ விளக்கம் கொடுத்துள்ளது.
இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் பயோ பபுளில் இருப்பார்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
போட்டிகள் நடைபெற உள்ள தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா மாநிலங்களில் தான் தொற்றின் தீவிரம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்றும் வாய்புள்ளதா என்ற கேள்விக்கு ‘திட்டமிட்டபடி தொடர் நடக்கும்’ என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவிகத்திருந்தார்.
இந்த நிலையில் தான் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களான அக்சர் பட்டேல், தேவ்தத் படிக்கல், நித்திஷ் ராணா, டேனியல் சாம்ஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில் ஆர்சிபி அணியின் வீரர்கள் இருவர் உள்ளனர். அந்த அணி தான் வரும் 9ஆம் தேதியன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் முதல் போட்டியில் மோதவுள்ளது.
அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இளம் வீரர்களை அடையாளம் காணும் பணிகளை மேற்கொண்டு வரும் கிரண் மோர், சென்னை அணியின் நிர்வாக குழுவில் உள்ள ஒருவர் மற்றும் மும்பை மைதான ஊழியர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பயோ பபுள்?
கொரோனா தொற்று பரவலினால் கடந்த ஆண்டின் துவக்கத்தில் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ஆட்டம் கண்டிருந்தன. ஒலிம்பிக் போட்டிகள், டி20 கிரிக்கெட் உலக கோப்பை என அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன. அதே நேரத்தில் இரு நாட்டு அணிகள் மோதும் விளையாட்டு தொடர்கள் மற்றும் சில லீக் தொடர்கள் பயோ பபுளில் நடந்தன. அதில் ஐபிஎல் தொடரும் ஒன்று. இந்தியாவில் தொற்று தீவிரம் அடைந்திருந்த காரணத்தினால் அமீரகத்தில் நடைபெற்றது.
முழுவதும் தொடரில் பங்கேற்கும் எட்டு அணிகளின் வீரர்கள், நடுவர்கள் குழு, ஒளிபரப்பு குழு, அணியின் நிர்வாக ஊழியர்கள், மைதான ஊழியர்கள் என அனைவரும் பயோ பபுளில் இருந்தனர்.
ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே பயோ பபுளில் இருப்பவர்கள் இருக்க வேண்டும். மைதானம், ஹோட்டல், பயிற்சி கூடம் மாதிரியான இடங்களுக்கும் மட்டுமே செல்ல அனுமதி என்ற விதியும் இருந்தது. மற்றவர்களை போல பொது வெளியில் பபுளில் இருப்பவர்கள் வரக்கூடாது. இதனால் புதிய நபர்கள் பபுளுக்குள் வர நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மேலும் பயோ பபுளில் இருப்பவர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
குறிப்பாக கை கொடுக்க கூடாது என்பதில் ஆரம்பித்து பல கட்டுப்பாடுகள். அதே போல பபுளில் இருப்பவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனை, உடல் வெப்பத்தை கண்டறிவது என பல இருந்தன. அப்படிப்பட்ட பயோ பபுளில் தான் கடந்த ஐபிஎல் சீசன் நடந்தது. செப்டம்பர் தொடங்கி நவம்பர் வரையில் நடந்த அந்த சீசனில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1000 பேர் வரை அமீரகத்தில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு வந்தனர். அந்த சூழலில் தான் பார்வையாளர்களுக்கு அனுமதி இன்றி தொடர் எந்தவித பாதிப்பும் இன்றி நடந்தது. அதே நடைமுறையை பிசிசிஐ இந்த சீசனிலும் மேற்கொள்ள உள்ளது.
ஆனால் தற்போது இந்தியாவில் புதிதாக நோய் தொற்று கண்டறியப்படும் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் என உள்ளது. அது தான் சங்கடத்தை கொடுக்கிறது.
குறிப்பாக மும்பை, டெல்லி மாதிரியான பகுதிகளில் ஊரடங்கு நடைமுறை அமலில் உள்ளன.
பிசிசிஐ வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளதாம். இந்த சூழலில் தான் தொடர் இப்போது நடைபெறுமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரின் போதும் வீரர்கள் பபுளில் இருந்தனர். இருப்பினும் 50 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. பின்னர் தொற்றின் தீவிரம் அதிகரிக்கபட்டதால் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதே போலவே இந்த ஐபிஎல் சீசனும் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற உள்ளது.
வருமானம் பாதிப்பா?
பிசிசிஐ அமைப்பிற்கு ஐபிஎல் தொடர் கற்பக விருட்சம் என சொல்லலாம். அள்ள அள்ள பணம் தான். அதற்கு காரணம் பார்வையாளர்கள் மத்தியில் இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பு. கடந்த சீசனில் பார்வையாளர்கள் இல்லாததால் முதல் முறையாக ஐபிஎல் வருமானத்தில் 4 சதவிகிதம் குறைந்ததாகவும் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் இல்லாத சூழலிலும் தொலைக்காட்சி வியூவர்ஸ்ஷிப் ஐபிஎல் தொடருக்கு கை கொடுத்துள்ளது. அதே நேரத்தில் பயோ பபுளுக்கு பிடிக்கின்ற செலவுகளும் இதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சீசனிலும் காந்த முறையை போலவே வருமானத்தில் லேசான பாதிப்பு இருந்தாலும் அதனால் இழப்பு ஏதும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு கொரோனா என்ற கருமேகம் ஐபிஎல் தொடரை சூழ்ந்துள்ளது.
- எல்லுச்சாமி கார்த்திக்