நேற்றைய தினம் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசியான கோர்பேவேக்ஸின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது பெரியவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி, மாடர்னா உள்ளிட்ட சில கொரோனா தடுப்பூசிகளும்; 15 - 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகின்றன. இப்படியான சூழலில்தான் கோர்பேவேக்ஸ் என்ற புதிய தடுப்பூசியின் வரவு தற்போது நிகழ்ந்துள்ளது. இதன் செயல்திறன் குறித்தே, இன்றைய கொரோனா கால மாணவர் நலனில் நாம் காண உள்ளோம்.
இதுவரை இந்தியாவில் 180 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. அதேபோல, 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. 15 - 18 வயதிலுள்ள சிறார்களில், 70% மேலானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. இவர்களுக்கு ஒரேயொரு தடுப்பூசி (கோவாக்சின்) மட்டுமே பயன்பாட்டில் இப்போது கோர்பேவேக்ஸ் வழக்கத்துக்கு வந்துள்ளது. இது, 15-18 வயதினருக்கு மட்டுமன்றி, 12 - 18 வயதுக்குட்பட்டோருக்காக வழக்கத்துகு வந்துள்ளது.
இந்த 'கோர்பேவேக்ஸ்' என்ற கொரோனா தடுப்பூசியை பயாலாஜிக்கல் - இ நிறுவனம் தயாரித்திருந்தது. முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உயிரியல் தடுப்பூசியான கோர்பேவேக்ஸ், சோதனைக்காக இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு, கோர்பேவேக்ஸ் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று அனுமதி வழங்கி இருக்கிறது. இதனால், நாட்டில் விரைவில் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. கடந்த டிசம்பர் 28-ம் தேதி முதலே இந்த கோர்பேவேக்ஸ் தடுப்பூசி பெரியவர்களுக்கு அவசர கால அனுமதிக்கு வந்திருந்தது இங்கே நினைவூகூரத்தக்கது.
இந்த கோர்பேவேக்ஸ், இந்தியாவில் தயாரிக்கப்படும் மூன்றாவது உள்நாட்டு தடுப்பூசியாகும். இதற்கு முன் தயாரிக்கப்பட்டவை - கோவாக்சின் மற்றும் சைடஸ் காடிலா நிறுவனத்தில் சைகோவ்-டி. மூன்றாவது தடுப்பூசி எனும்போதிலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட `ரிசெப்டர்-பைண்டிங் டொமைன் (RBD) புரத சப்-யூனிட்’ வகை தடுப்பூசி ஆகும். இந்த தடுப்பூசியை, கொரோனாவிலிருந்து கிடைக்கப்பெறும் ஒரு குறிப்பிட்ட ஸ்பைக் புரதத்தினை வைத்தேதான் ஆராய்ச்சியாளர்கள் தயாரிக்கின்றனர். இந்த ஸ்பைக் புரதம்தான், மனித உடலின் திசுக்களுக்குள் கொரோனா வைரஸ் ஊடுருவ வழிவகுக்கும்.
இப்போது இந்த ஸ்பைக் புரதத்தையே உருவாக்கி, அதை தடுப்பூசியின் வழியே ஊடுருவ வைக்கின்றனர் ஆய்வாளர்கள். இப்படி செய்வதன்மூலம், உடல் இந்த ஸ்பைக் புரதத்துக்கு எதிரான நோய் எதிர்ப்புத்திறனை தனக்குள் உருவாக்கிக் கொள்ளும். ஆகவே, உண்மையில் கொரோனா உடலுக்குள் சென்று ஊடுருவ முயலும்போது, உடல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை அழித்துவிடும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இப்படி செய்வதால், `மனித திசுக்களுக்குள் ஊடுருவ முடியாமல், கொரோனா தனது திறனை இழக்கும்’ என்பதே விஞ்ஞானிகளின் கூற்றாக இருக்கிறது.
இதுபோன்ற தடுப்பூசிகளை, சப்-யூனிட் தடுப்பூசிகள் / ஏசெல்லுலால் தடுப்பூசிகள் என்றும் கூறப்படுவதுண்டு. இதுபோன்ற சப்-யூனிட் தடுப்பூசிகள், இதற்கு முன்னர், மஞ்சள் காமாலை நோய்க்கு உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கொரோனாவில் இந்த வகை தடுப்பூசி வருவது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன் நோவாவாக்ஸ் என்ற தடுப்பூசி `கொரோனாவிலுள்ள புரதத்தை’ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் அது தற்போதுவரை சிறார் மத்தியிலான அனுமதிக்காக காத்திருக்கிறது.
இதற்கு முன் தயாரிக்கப்பட்ட பிற தடுப்பூசிகள் யாவும் எம்.ஆர்.என்.ஏ எனப்படும் வகையில் கீழ் தயாரிக்கப்பட்டவை (பைசர் & மாடர்னா), வைரல் வெக்டார் தடுப்பூசிகள் (அஸ்ட்ரா ஜெனிகா / கோவிஷீல்ட், ஜான்சன் & ஜான்சன், ஸ்புட்னிக் வி), இன்-ஆக்டிவேட்டட் தடுப்பூசிகளான (கோவாக்சின், சினோவாக்- கொரோனாவாக் உள்ளிட்டவை) மட்டுமே வழக்கத்தில் வந்தன.
இந்த தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய, ரூ.1,500 கோடி வரை மத்திய அரசு செலவழித்துள்ளது. இதன்மூலம் 15 கோடி இந்தியர்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம் என்று சொல்லப்படுகின்றது. தற்போது நிலவும் சிறுசிறு தடுப்பூசி தட்டுப்பாடுகளும், இந்த புதிய தடுப்பூசியின் வரவால் குறையுமென்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.