சிறப்புக் களம்

’நிலைமை மோசமாகி முகமெல்லாம் மரத்துவிட்டது’ கொரோனாவிலிருந்து மீண்ட இளைஞரின் நம்பிக்கை கதை!

’நிலைமை மோசமாகி முகமெல்லாம் மரத்துவிட்டது’ கொரோனாவிலிருந்து மீண்ட இளைஞரின் நம்பிக்கை கதை!

JustinDurai

கொரோனா வராமலிருக்க என்ன செய்யவேண்டும்? வந்தால் என்ன செய்யவேண்டும்? கொரோனா வார்டு எப்படி இருக்கும்? என்பது குறித்து, கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த திருவண்ணாமலையை சேர்ந்த வசந்தன் சந்துரு தனது அனுபவங்களைஇங்கே பகிர்ந்து கொள்கிறார். 

''ஜூன் 10. வழக்கமான உடற்பயிற்சியெல்லாம் முடித்துவிட்டு வழக்கத்தைவிட உற்சாகமாக அலுவலகத்துக்கு சென்று பணிகளை தொடங்கினேன். ஒரு 11 மணிக்கு ஒரு சிறு தும்மல் வந்தது பக்கத்துல இருந்த நண்பன் ஷாகுலிடம் விளையாட்டா மாப்ள! கொரோனா கீழபோய் விழுந்துடிச்சுனு சொல்லி காமெடி பண்ணிக்கிட்டு வழக்கமான வேலைய பார்த்துகிட்டு இருந்தோம்.

அன்று மாலை 6 மணிக்கு தொண்டையில் சிறு கரகரப்பு ஏற்பட்டது ஒரு அரைமணி நேரத்தில் உடல் லேசாக நடுக்கமும் சிறு குழப்பமும் ஏற்பட்டது. உடனடியாக பக்கத்தில் உள்ள மருத்துவரிடம் என் சிம்டம்ஸ் சொன்னேன். உடனடியாக உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டது, காய்ச்சல் இல்லை. சில ஆண்டிபயாடிக் மாத்திரைகள் மூன்றுநாள் சாப்பிட சொல்லி பரிந்துரைத்தார். அந்த நிமிடத்திலிருந்து என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். மூன்று நாட்களுக்கு பிறகும் காய்ச்சல் குறையவில்லை. கடுமையான தலைவலியும் ஒட்டிக்கொண்டது.

ஜூன் 13, மீண்டும் மருத்துவரை சந்திக்கிறேன். ஒரு ட்ரிப்ஸ் போடப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டேன். மீண்டும் தனிமை, டெஸ்ட் எடுத்தால் எங்கே விண்வெளி வீரர்கள் வந்து தூக்கிவிடுவார்களோ என்ற அச்சம். இரண்டுநாள் தள்ளிப்போட்டேன்.

ஜூன் 15, தொண்டை வலி, தலைவலி, காய்ச்சல், உடல் வலியுடன் கடுமையான இருமல் ஒட்டிக்கொண்டது. அன்று காலை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அன்றே எனக்கு என்ன ரிசல்ட் வருமென்று முடிவுசெய்து தேவையான பொருட்கள் துணிகள் அனைத்தும் பேக் செய்துவிட்டு ரிசல்ட்க்காக காத்திருந்தேன்.

ஜூன் 16, காலை 9 மணிக்கு ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து போன். தம்பி நீங்க சமீபத்துல வெளிவூர் போயிட்டு வந்திங்களா? இல்ல மேடம். என்னப்பா.. உங்களுக்கு ரிசல்ட் பாசிட்டிவ் வந்திருக்கு உடனே கெளம்பி GH வந்துடுங்கனு சொல்லிட்டு, மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைத்து நீங்கள் வரவேண்டாம் 108 ஆம்புலன்ஸ் வரும் அதுல வந்தாதான் அட்மிஷன் போடுவாங்கனு சொன்னாங்க.

அன்று மதியம் 2:00 மணிக்கு நான் எதிர்பாத்த மாதிரியே 6 விண்வெளி வீரர்களுடன் சாதாரண உடையில் 8 பேர் வீட்டிற்கு முன் வந்து நின்றனர். இருவர் அப்பா அம்மாவிடம் டெஸ்ட் எடுத்தனர். இருவர் வீடுமுழுவதும் மருந்து தெளிக்க ஆயத்தமானார்கள் இருவர் என்னை அழைத்துச் செல்ல காத்திருந்தனர். நான் வெளியே அழைக்கப்பட்டேன் வெளியே வந்தவுடன் அனைவரும் 5 அடி தள்ளிநின்று படமெடுக்க தொடங்கினர். எப்படியும் ‘எள்ளுவய பூக்கலயே’ன்னு வீடியோல எங்கயாவது இருந்திருப்பேன்.

108 ஆம்புலன்ஸ் கதவு தயாரா திறந்திருந்தது உள்ளே ஏறி அமர்ந்தவுடன் நான் நடந்துவந்த பாதையெல்லாம் மருந்து தெளிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டமெல்லாம் மக்கள் வேடிக்கை பார்க்கதான். ஆம்புலன்சுக்குள்ள 6X8 அளவில் 6 பேர் அமர்த்தப்பட்டோம். முதலில் என் உடல்நிலையை விசாரிச்சி GH க்கு பரிந்துரைக்கப்பட்டேன். எப்பொழுதும் GH மேலிருக்கும் அவநம்பிக்கையினால் பல சிபாரிசுகளுடன் தனியார் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு டிரீட்மென்ட் எதுவும் இல்லை.

Asymptomatic கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி வைக்கும் ஒரு இடம். அங்கு எல்லாம் சகஜமா சுற்றி திரிவதும், ஒன்றாக அமர்ந்து லுடோ விளையாடுவது, சாப்பிடுவதுனு எந்தவித பதட்டமும் இல்லாமலிருந்தனர். அந்த அறையில் ஒரு கட்டில் ஒதுக்கப்பட்டது. அன்றிரவு உணவருந்திவிட்டு உறங்க சென்றேன். தூக்கம் வரவில்லை காய்ச்சலும் குறையவில்லை. நேரம் போக போக மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. அங்குள்ள மருத்துவரை தொடர்புகொண்டேன். உடனடியாக SpO2 (ஆக்ஸிஜன்) லெவல் பரிசோதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டது.

ஜூன் 17, காலை ஒரு மருத்துவர் என்னை பரிசோதித்து மீண்டும் GH போகச்சொல்லி பரிந்துரைத்தார். மீண்டும் ஆயத்தமானேன் அதே 108 ஆம்புலன்ஸ் என்னை ஏற்றிக்கொண்டு GH பறந்தது. அங்கு Xray, CT ஸ்கேன், இசிஜி மற்றும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா வார்டில் நல்ல காற்றோட்டமான தனி அறை வழங்கப்பட்டது. அந்தநிமிடம் GH மேலிருந்த அவநம்பிக்கை சிதறிப்போனது. அன்று இரவு தூக்கமில்லை, மூச்சுவிடுவதில் சிரமம் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது.

ஜூன் 18, காலை மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. இதற்கிடையில் என் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், அலுவலகப் பணியாளர்கர் என மொத்தம் 17 பேருடைய ரிசல்ட் பாசிட்டிவ்வாக வருகிறது. மீண்டும் பதட்டம் அதிகரிக்கிறது. 17 நபர்களையும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதே மிரட்டலான முறையில் வெவ்வேறு இடங்களுக்கு கடத்தப்படுகின்றனர்.

அப்பா, அம்மா, அண்ணி மற்றும் சிலர் நானிருக்கும் மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு வந்துசேர்ந்தனர். அன்றிரவு மிகவும் சிரமத்துடனேயே நகர்ந்தது.

ஜூன் 19, வழக்கமான சிரமங்களுடனே பகல் பொழுது கடந்தது. இப்பொழுது கடுமையான இருமல் வரத்தொடங்கியது. இருமல்னா சாதாரண இருமல் இல்லை, விலா எலும்பெல்லாம் நொறுங்கி அடிவயிறு கிழிஞ்சி போற மாதிரி ஒரு இருமல். அன்றிரவு மூச்சுவிடுவதில் மேலும் சிரமம் ஏற்பட்டு நிலைமை மோசமடைவதை உணரமுடிந்தது. யாரையாவது உதவிக்கு அழைக்கலாமென்று தட்டித்தடுமாறி அறையை விட்டு வெளியே வந்தேன்.

கொரோனாவால் மரணமடைந்தவரின் உடல் பேக் செய்து தள்ளிக்கொண்டு சென்றனர். மிகவும் பதட்டத்துடன் அறைக்குள்ளேயே சென்று அமர்ந்துகொண்டேன். ஒரு மணி நேரத்தில் நிலைமை மிகவும் மோசமாகி முகமெல்லாம் மரத்துவிட்டது. தலையில் லட்சம் எறும்பு ஊறுவதுபோல் ஒரு உணர்வு. பேசமுடியவில்லை படுக்கையை விட்டு நகரவும் முடியவில்லை. மனதுக்குள் ஏதேதோ சிந்தனை ஓடிக்கொண்டிருந்த நொடிப்பொழுதில் PPE கிட்டுடன் ஒரு தேவதை என்முன் தோன்றினார்.

உடனடியாக ஆக்ஸிஜன் லெவல் பரிசோதித்து ICU க்கு அழைத்துச் சென்றார். ICU வில் 3 அறைகள் 9 படுக்கைகள் அனைத்தும் நிரம்பியிருந்தன. ஒருவர் படுக்கை அருகே அமரவைக்கப்பட்டு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. சிறிதுநேரத்தில் முகம் தொடு உணர்விற்கு வந்து தலையில் ஊறிக்கொண்டிருந்த எறும்புகளெல்லாம் எறங்கி சென்றுவிட்டன. மெல்ல மெல்ல அங்கு நடப்பதையெல்லாம் உணரத் தொடங்கினேன். எனக்கு அருகில் இருந்தவர் எந்த அசைவும் இல்லாமலிருந்தது ஏதோ ஒரு அச்ச உணர்வை தந்தது. மீண்டும் வேறொரு அறைக்கு மாற்றப்பட்டு அங்கும் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது.

அங்கு படுக்கை வசதி இல்லாததால் தரையில் அமர்ந்து ஒரு மணி நேரம் ஆக்ஸிஜன் எடுத்துக்கொண்டு என் தனியறைக்கு திரும்பும்பொழுது என்னருகில் அசைவில்லாமல் இருந்தவரை பேக் செய்து கொண்டிருந்தனர். நான்கு நாட்களுக்கு பிறகே எனக்கு தெரியவந்தது அவர் எனக்கு ஏற்கனவே பரிட்சயமானவரென்று. மிகவும் அதிர்ந்துபோனேன்.

மீண்டும் ICU வில் ஒரு படுக்கை நிரந்தரமாக ஒதுக்கப்பட்டு 4 நாட்கள் தொடர்ந்து ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு சுவாசப்பிரச்சனை சரிசெய்யப்பட்டது. நான்கு நாட்களில் நிறைய மருத்துவர்கள், நண்பர்கள், மனைவி, மகள், உறவினர்களின் அழைப்பு பெரிய தெம்பை ஏற்படுத்தியது. என்னை பார்த்து அப்பா, அம்மா, மனைவி, உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் உடைந்தே போனார்கள்.

ஜூன் 25, மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு ஜூன் 26, நெகடிவ் ரிசல்ட்டுடன் கொரோனா வார்டிலிருந்து மாற்றப்பட்டு. ஜெனரல் வார்டில் இரண்டுநாள் ஆக்ஸிஜன் இல்லாமல் கண்காணிக்கப்பட்டேன்

ஜூன் 28, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினேன். அன்றிலிருந்து நான்கு நாட்களுக்குள் என்னை சார்ந்த 16 பேரும் நெகடிவ் ரிசல்ட்டுடன் வீடு திரும்பிவிட்டனர். இப்போது அனைவரும் நலம்.

நான் செய்த தவறு

1. சித்தப்பா வீட்டில் பாதுகாப்பாக, வீட்டிற்குள்தான் இருக்கிறோமென்று. மாஸ்க் அணியாமல் அருகருகே அமர்ந்து உரையாடியது.

2. அலுவலகத்தில் முகத்தை கர்ச்சீப் கொண்டு மூடாமல் அலட்சியமாக தும்பியது.

3. மூன்று நாட்கள் சரியாக தூக்கம்வரவில்லையென்று தொடர்ந்து A / C பயன்படுத்தியது.

4. டெஸ்ட் எடுக்க காலதாமதம் செய்தது.

வராமல் தடுக்க என்ன செய்யவேண்டும்?

1. வெளியில் செல்லும்போது, வீட்டிற்குள் மற்றவரிடம் பேசும்போதும் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்.

2. எப்பொழுதும் வெந்நீரையே குடிக்கவும்.

3. காலை - இரவு மஞ்சள், உப்பு , துளசி போட்டு சுவாசப்பாதை சுத்தமாகுமளவிற்கு வேது பிடிப்பது.

4. தினமும் கபசுர குடிநீர் அவசியம் குடிங்க.

5. ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். சளி தொற்று ஏற்படுத்தக்கூடிய குளிர்ச்சியான பொருட்களை உட்கொள்ளவேண்டாம்.

6. வீட்டில் ஏசி பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும்.

வந்தால் என்ன செய்வது?

1. தொண்டையில் லேசான கரகரப்பு, உடல் சோர்வு மற்றும் லேசான காய்ச்சல் இருப்பதை உணர்ந்தால் அன்றே கொரோனா பரிசோதனை செய்துவிடுங்கள்.

2. ரிசல்ட் வரும்வரை எங்கும் ஊர் சுற்றாமல் யாரையும் சந்திக்கலாம் உங்களை தனிமை படுத்திக்கொள்ளுங்கள்.

3. பாசிட்டிவ் ரிசல்ட் வந்தால் பதற வேண்டாம். கடந்த 3 நாட்களில் நீங்கள் சந்தித்த அனைவருக்கும் போன் செய்து அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் டெஸ்ட் எடுக்க சொல்லுங்கள் அறிகுறிகள் எதுவும் இல்லை என்றால் சிறிது நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்துங்கள்.

4. ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து அழைத்து உங்களுக்கு இருக்கும் அறிகுறிகளை கேட்பார்கள். உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சொல்வது உங்களை எந்தமையத்துக்கு அனுப்பவேண்டுமென்பதை தீர்மானிக்க உதவியாக இருக்கும். அதுதான் உங்களுக்கு பாதுகாப்பும் கூட

5. உங்களுக்கு ரிசல்ட் சொன்னதிலிருந்து மூன்று அல்லது நான்கு மணி நேரம் அவகாசம் இருக்கும். அதற்குள் தேவையானதையெல்லாம் வாங்கிக்கொள்ளுங்கள்.

6. நான்கு செட் லைட் வெயிட் டிரஸ், ஒரு துண்டு, பிளாஸ்க், கிட்டில் ( சுடுதண்ணி வெக்க - ஆவி பிடிக்க ), டெட்டால், டிஸ்ஸு பேப்பர், Axe தைலம், ரெண்டு டம்ளர், ஒரு தட்டு, துணிதுவைக்குற சோப்பு, ஒரு மஃகு, கொஞ்சம் Dry Nuts போதும் மத்ததெல்லாம் அங்கயே தருவார்கள்.

7. உங்களை அழைச்சுக்கிட்டு போக வருவாங்க. பயங்கர ஆர்ப்பாட்டமெல்லாம் நடக்கும். நீங்க ரிலாக்ஸா கெளம்பி போய்கிட்டே இருங்க. மத்ததெல்லாம் அதுவா நடக்கும். 10 நாள் உங்களை தனிமைப்படுத்திக்கொள்ள தயாரா இருங்க அவ்வளவுதான்.

8. மருத்துவமனையில் கொஞ்சமா நடங்க, சுடுதண்ணி குடிங்க, காலை மாலை Axe தைலம் போட்டு கிட்டில்ல வேது புடிங்க. நல்லா மூச்சி பயிற்சி செய்யுங்க. நலமுடன் பத்து நாள்ல வீடு திரும்பிடலாம்.

கொரோனா வார்டு எப்படி இருக்கும்?

1. தினமும் PPE கிட்டோட ஒரு மருத்துவரையும் ஆறு காக்கும் தேவதைகளையும் நீங்க பார்க்கலாம்.

2. மருத்துவர் உங்கள் உடல்நிலையை பற்றி அன்பாக விசாரிப்பார். நிறைய நம்பிக்கையளிப்பார். உங்களுக்கு தேவையான மருந்துகளை பரிந்துரைப்பார். உங்களை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருப்பர்

3. இரண்டுபேர் உங்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குவார்கள். இசிஜி எடுப்பார்கள். ரத்தமாதிரி சேகரிப்பார்கள்,.உங்களுக்கு ஏதும் பிரச்சனைனா உடனே சரிசெய்து கொடுப்பார்கள். நிறைய கவுன்சலிங் கொடுப்பார்கள்.

4. இரண்டுபேர் நீங்க இருக்கும் இடங்களையெல்லாம் சுத்தம் செய்துகொண்டே இருப்பார்கள்.

5. இரண்டுபேர் காலையில் இருந்து இரவு வரை உங்களுக்கு தேவையான உணவுகளை சரியான நேரத்தில் கொடுத்து விடுவார்கள். 

6. உங்களுக்கு ஏற்கனவே மெடிக்கல் ஹிஸ்டரி ஏதும் இருந்தால் மருத்துவரிடமோ, செவிலியேரிடமோ தெரியப்படுத்துங்கள். உங்களுக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.

7. கழிவறை சுத்தமாக இருக்குமென்று எதிர்பார்க்கவேண்டாம். ஒரு மஃகில் டெட்டால் ஊற்றி கையேடு எடுத்துச்செல்லுங்கள். பயன்படுத்துவதற்கு முன்னும் பயன்படுத்திய பின்னும் சிறிது ஊற்றிவிட்டுவாங்க.

8. ஆரம்பத்தில் அவர்கள் அளிக்கும் உணவை உண்பதில் சிரமம் இருந்தாலும் இரண்டு மூன்று நாட்களில் பழகிவிடும்.

9. பத்தாவது நாள் மீண்டும் டெஸ்ட் எடுப்பார்கள். 11 நாள் டிஸ்சார்ஜ் செய்துவிடுவார்கள். கவலை வேண்டாம். தைரியமா போங்க''.