சிறப்புக் களம்

பரிசோதனையில் குறைபாடா? கொரோனா கண்காணிப்பில் தமிழக அரசின் கவனம் குறைகிறதா?

பரிசோதனையில் குறைபாடா? கொரோனா கண்காணிப்பில் தமிழக அரசின் கவனம் குறைகிறதா?

webteam

சீனாவில் பரவி வரும் ஆட்கொல்லி வைரஸ் கொரோனாவுக்கு இதுவரை 1,765 பேர் பலியாகியுள்ளனர். ஹூபெ மாகாணத்தில் இருந்து பரவிய வைரஸால் இதுவரை 70 ஆயிரத்து 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாள் மட்டும் 100 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக 1,933 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஹூபே மாகாணத்துக்கு வெளியே, கொரோனா தொற்று பரவும் வேகம் குறைந்து வருவதாக சீன மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸால் சீனா மட்டுமின்றி உலக நாடுகளும் கலக்கத்திலேயே உள்ளன. சீனாவில் இருந்து பிற நாட்டுக்கு செல்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் உலகம் முழுவதும் கொரோனா பரவும் அபாயம் உண்டு. இந்தக் காரணத்தினால் எல்லா நாடுகளும் தீவிர கண்காணிப்பில் உள்ளன. அதன்படி இந்தியாவும் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சீனா மட்டுமின்றி ஹாங்காங், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இப்படி ஆட்கொல்லி கொரோனாவை நாட்டுக்குள் விடக்கூடாது என இந்திய அரசு பல முயற்சிகள் எடுத்தாலும் கேரளாவில் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள் கண்காணிப்பின் கீழ் வந்தன. சீனாவில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டது. தமிழக கேரள எல்லைக்கூட கண்காணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில் கொரோனாவுக்கென தனி வார்டுகள், கையுறைகள், முகக்கவசங்கள் என அரசு மருத்துவமனைகள் தயார் நிலையிலும் வைக்கப்பட்டன. இப்படி கொரோனாவை தமிழகத்திற்குள் எக்காரணத்தைக் கொண்டும் நுழையவிடக்கூடாது என சுகாதாரத்துறை தீவிர முயற்சியில் இருப்பதாக சொல்லப்பட்டாலும் சில இடங்களில் தமிழக அரசு கவனக்குறைவாக இருப்பதாகவே தெரிகிறது.

RU YI I என்ற சரக்கு கப்பல் கடந்த 13-ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது. அந்தக் கப்பல் முன்னதாக சீனாவில் தைபே, ஷாங்காய் நகரங்களுக்குச் சென்று, அதன்பின்னர் சிங்கப்பூர் வழியே தூத்துக்குடி வந்தது. ஆனால் இந்தக் கப்பலில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விமானத்தில் வருபவர்களை தீவிரமாக கண்காணிப்பதாக கூறினாலும், இப்படி சத்தமில்லாமல் கப்பலில் வருபவர்களை தமிழக அரசு தீவிரமாக கண்காணிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுமட்டுமல்ல, சீனாவில் இருந்து கடந்த 4-ம் தேதி சொந்த ஊர் திரும்பிய புதுக்கோட்டையைச் சேர்ந்த நபர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு மற்றும் மஞ்சள் காமாலை இருந்ததாக கூறப்படுகிறது‌. ஆனால் அந்த நபர் குறித்த எந்த விவரமும் சுகாதாரத்துறைக்கு தெரியவில்லை.

சீனாவில் இருந்து வருபவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருந்து 14 நாட்களுக்குப் பிறகே அவரை வெளியே செல்ல அனுமதிப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறிவரும் நிலையில் ஒருவர் சீனாவில் இருந்து வந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தேவிட்டார் என்றும், ஆனால் இது எப்படி அரசுக்கு தெரியாமல் போனது எனவும் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இது கண்காணிப்பில் அரசு கவனக்குறைவாக இருப்பதையே காட்டுகிறது எனவும் தெரிவிக்கின்றனர்.

ஆட்கொல்லி வைரஸால் சீனாவே கலக்கத்தில் உள்ள நிலையில் அதன் வீரியத்தை இந்தியா சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக விமான நிலையத்தை மட்டுமே குறி வைக்காமல் தரைவழி, கப்பல் என அனைத்து வழித்தடத்தையும் தீவிரமாகவே அரசு கண்காணிக்க வேண்டும். முறையான கண்காணிப்பே நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் என்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டுமென்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.